Friday, 27 February 2015

காக்கி சட்டை - விமர்சனம்….!


தன்னுடைய ஏழாவது படத்தில் ஒரு முழுமையான கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். நட்சத்திர நடிகர்களுக்கேயுரிய, காலணியிலிருந்து தொடங்கி படிப்படியாக உயர்ந்து முகத்தைக் காட்டி அறிமுகமாகிறார் சிவகார்த்திகேயன்.
நடிப்பு மற்றும் உடல்மொழிகளில் பன்மடங்கு முன்னேற்றம் தெரிகிறது. காவல்துறையின் குற்றப்பிரிவில் வேலை செய்யும் காவலர் வேடம் அவருக்கு. காக்கிச்சட்டைக்குப் பொருத்தமாக இருக்கிறார். தொடக்கக்காட்சிகளில் அவருக்கே உரித்தான நகைச்சுவைக்காட்சிகள் நிறைய இருக்கின்றன. படிப்படியாக உயர்ந்து இறுதிக்காட்சிகளில் பெரிய உயரத்தைத் தொட்டிருக்கிறார்.
சண்டைக்காட்சிகளைத் தேவைக்கதிமாக வைக்காமல் இருக்கிற சண்டைகளையும் மிகப்பொருத்தமான இடங்களில் வைத்திருக்கிறார்கள். அவற்றில் சிறப்பாக நடித்து நற்பெயர் பெற்றிருக்கிறார். வடமாநிலங்களிலிருந்து பிழைப்புக்காகத் தமிழகம் வருகிறவர்களைப் பரிவோடு பாதுக்காக்கவேண்டும் அதுதான் தமிழர்களின் பண்பாடு என்று வசனத்தில் தமிழினித்தைப் பெருமைப்படுத்தியிருக்கிறார் சிவகார்த்திகேயன், முதல்பாதியில் அவருக்கு ஈடுகொடுக்கிற வகையில் இமான்அண்ணாச்சியும் இரண்டாம்பாதியில் மனோபாலாவும் வந்து நம் வயிற்றைப் பதம்பார்க்கிறார்கள். மயில்சாமி வருகிற காட்சிகள் எல்லாமே ரசிக்கும்படி இருக்கின்றன.
உதவி ஆய்வாளராக நடித்திருப்பவர் கண்கலங்கவைத்துவிடுகிறார். சிலகாட்சிகளில் வருகிற நாகிநீடு வில்லன் என்று எல்லோரையும் நினைக்கவைத்துவிட்டு நல்லவராகவே செத்துப்போகிறார். நாயகி ஸ்ரீதிவ்யா படத்துக்குப் பெரும்பலமாக இருக்கிறார். அவருடைய காதல் கலந்த குறும்புப்பார்வை படத்தில் சிவகார்திகேயனையும் உண்மையில் பார்வையாளர்களையும் கிறக்கமடைய வைக்கிறது. இவர் இரண்டாம்பாதியில் ஒரு பாடலுக்கு செமஆட்டம் போட்டிருக்கிறார். நெருக்கமாக முகத்தைக் காட்டும்போது ஒப்பனை அதிகமாக இருப்பது தெரிகிறது. அதைக்கொஞ்சம் குறைத்திருக்கிலாம்.
நட்புக்காக நடித்திருக்கும் பிரபு தன்னுடைய வேடத்தை நன்றாகச் செய்திருக்கிறார். திருடர்களிடமிருந்து கைப்பற்றிய நகைகளில் நூறுபவுனை ஒதுக்கிக்கொண்டார் என்று அவர் மீது குற்றம் சொல்லப்படுவதும் அதற்கு சிறிதுநேரத்தில் அவர் கொடுக்கும் விளக்கமும் காவல்துறையில் நியாயமாக நடந்துகொள்ளவேண்டும் என்று நினைப்பவர்களின் உண்மைநிலையை விளக்குவதாக இருக்கிறது.
உடல்உறுப்பு மாற்றும் அறுவைசிகிச்சை செய்யும் மருத்துவராக நடித்திருக்கும் யோக்ஜேபியின் பாத்திரப்படைப்பும் நடிப்பும் நன்றாக இருக்கிறது. வில்லனாக நடித்திருக்கும் இந்திநடிகர் விஜய்ராஸ் மிரட்டியிருக்கிறார். அலட்டிக்கொள்ளாத அவருடைய இயல்பான நடிப்பில் எந்தநேரத்தில் என்ன செய்வாரோ என்று பதறவைக்கிறார். அவர் அவ்வளவு பலமானவராக இருக்கும்போது சாதாரணகாவலர் அவரை எதிர்த்து வெல்லமுடியுமா? அப்படியே வென்றாலும் எதார்த்தமாக இருக்கும்? என்கிற கேள்விகள் வருவது இயல்பு. ஆனால் உண்மைக்கு மிகநெருக்கமான திரைக்கதை எழுதியதோடு அவற்றைச் சரியாகக்காட்சிப்படுத்தி வெற்றியடைந்திருக்கிறார் இயக்குநர் துரைசெந்தில்குமார்.
உலகஅளவில் பெருக்கிக்கொண்டு வருகிற உடல்உறுப்புகள் விற்பனை பற்றியும் அதில் இந்தியாவின் இடம்பற்றியும் சரியாகப்பதிவு செய்து சாதாரணமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்தைச் சொல்லியிருக்கும் இயக்குநர் அதை சென்னையிலுள்ள ஒரு காவல்நிலையத்தோடு இணைத்து எல்லோருக்கும் புரிகிறமாதிரி சொல்லியிருக்கும் இயக்குநர் பாராட்டுக்குரியவர்.
படத்தின் இன்னொரு பெரியபலமாக இருப்பது அனிருத்தின் இசை. கதாபாத்திரங்கிளின் மனநிலைகளுக்கேற்ற அவருடைய பின்னணிஇசை நன்று. பாடல்கள் நன்றாக இருக்கின்றன. ஒளிப்பதிவாளர் சுகுமாரின் உழைப்பு மிகச்சிறப்பு. சண்டைக்காட்சிகள் மற்றும் பல தடைகளைத்தாண்டி சிவகார்த்தியேன் சாலையில் ஓடுகிற காட்சி ஆகியன மிகஇயல்பாக அமைய அவர் மிகவும் கஷ்டப்பட்டிருக்கவேண்டும். பாடல்காட்சிகள் வண்ணமயமாக இருக்கின்றன.
காவல்துறையைப் பெருமைப்படுத்தும் விதமாக இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பொருத்தமாகத் திரைக்கதையும் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் காவல்துறை வந்து யாரை அடித்தாலும் அது சரியானதே என்கிற எண்ணம் வருகிறமாதிரி கடைசிக்காட்சி இருப்பது உறுத்தலாக இருக்கிறது.
இந்தப்படம் இயக்குநர் துரைசெந்தில்குமார் நாயகன் சிவகார்த்திகேயன், நாயகி ஸ்ரீதிவ்யா, இசையமைப்பாளர் அனிருத், ஒளிப்பதிவாளர் சுகுமார் ஆகியோர் மட்டுமின்றி படத்தில் இடம்பிடித்திருக்கும் எல்லோருமே அடுத்தகட்டத்துக்குப் போகும் வாய்ப்பைக் கொடுக்கும் என்பது நிச்சயம்.

No comments:

Post a Comment