சில வருடங்களுக்கு முன்பு நடந்த சென்னை சட்டக்கல்லூரிமாணவர்கள் மோதல் மற்றும் ஒரு காவல்துறைஅதிகாரிக்குப் பதிலாக இன்னொரு காவலதிகாரியைப் படுகொலை செய்த நிகழ்வு ஆகிய இரண்டுநிகழ்வுகளையும் இணைத்து நாடகக்காதல் என்று சொல்லிக் காதல்திருமணங்களை எதிர்க்கும் ஒரு கட்சித்தலைவரை நினைவுபடுத்துகிற பாத்திரத்தையும் சேர்த்துக் கதை எழுதியிருக்கிறார் இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி.
தனக்கேற்பட்ட கொடுமைக்கு சட்டப்படி சரியான நீதி கிடைக்காததால் சட்டத்தைக் கையிலெடுக்கும் ஒரு சாமானியனின் மனநிலைதான் கதை. நாயகன் சத்யாவின் தந்தை பானுசந்தர் காவல்துறையைச் சேர்ந்தவர். பணியிடமாற்றம் காரணமாக திருநெல்வேலிக்கு வருகிறார்.
வந்த இடத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்படுகிறார். அவருடைய மகன் என்கிற கருணையடிப்படையில் நாயகனுக்குக் காவல்துறையில் வேலை கிடைக்கிறது. அதன்பின் அப்பாவைக் கொன்றவர்களை அவர் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பார் என்று நினைப்பீர்கள். அப்படித்தான் நடக்கிறது ஆனால் அதற்கான பெருமை எதுவும் நாயகன் சத்யாவுக்குக் கிடைக்காது.
வேலை தேடிஅலைவதாகச் சொல்லிக்கொண்டு பொறுப்பற்ற மகனாக சுற்றித்திரிவது, அப்பாவின் மறைவுக்குப் பிறகு பொறுப்பான காவல்அதிகாரியாக மாறுவது என்று இரண்டுவேறுபட்ட பாத்திரங்கள் நாயகன் சத்யாவுக்கு. இரண்டிலும் தனக்குத் தெரிந்தவரை நடித்திருக்கிறார் சத்யா. நடிப்பில் இன்னும் அவர் முன்னேற வேண்டும்.
நாயகியாக ஸ்ரீமுகி என்றொரு புதுமுகம். அழகாக இருக்கிறார். நடிக்கவும் தெரிந்திருக்கிறது. ஆக்ஷன் கதைக்குள் காதலிகளுக்கு இருக்கும் கொஞ்சஇடமே இவருக்கும் இந்தப்படத்தில் கிடைத்திருக்கிறது. அதிலும் அவரைக் கவனிக்கவைத்திருக்கிறார்.
இயக்குநர் தங்கசாமி, தமிழ்ச்செல்வன் என்கிற பெயரோடு நடித்திருக்கிறார். படத்தின் நாயகன் என்று அவரையே சொல்லுமளவுக்கு அவருடைய பாத்திரப்படைப்பு இருக்கிறது. இறுக்கமான முகத்துடன் வந்துபோவதே சிறந்த நடிப்பு என்று அவர் முடிவு செய்துவிட்டார் போலும். நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் பானுசந்தர், கதையில் முக்கியஇடத்தைப் பிடித்திருக்கும் இன்னொருகாவல்அதிகாரி ராஜ்குமார் ஆகியோர் கொடுத்தவேடத்தில் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
நாயகனின் நண்பராக வருகிற சாம்ஆண்டர்சன் வந்தாலே ரசிப்பார்கள் என்கிற இயக்குநரின் எதிர்பார்ப்பு முற்றிலும் பொய்த்திருக்கிறது. முதல்பாதியில் நாயகன் நாயகி சந்திப்பு அவர்களுடைய காதல் நண்பர்களுடன் அரட்டை உள்ளிட்ட காட்சிகள் பெரும்பான்மை இடத்தைப் பிடித்துப் பொறுமையைச் சோதிக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது.
திருநெல்வேலியில் கதை நடப்பதாகச் சொல்லி நெல்லைச்சீமையின் பெருமைகளைப் பேசும் பாடலொன்றையும் வைத்திருக்கிறார்கள். ஆனால் நெல்லை வட்டாரவழக்கு கொஞ்சமும் படத்தில் இல்லை. ராட்டினம் படநாயகன் லகுபரனுக்குச் சின்னவேடம். ஆனால் அதுதான் கதையையே தீர்மானிக்கிற வேடம். இயக்குநரின் மனைவி, நாயகனின் தாய் ஆகியோருடைய வேடங்கள் சரியானபடி அமைந்திருக்கிறது.
ஒரு மரணம் திட்டமிட்ட கொலைதான் என்பதைச் சொல்லும் வலுவானஆயுதமாகக் கையில் கிடைத்த காணொளிக்காட்சியின் குறுந்தகட்டை உடைத்துப்போட்டுவிட்டால் அதோடு முடிந்துபோய்விடுமா? அதற்கு நகல் இருக்காதா? பயன்படுத்திவிட்டு அழித்துவிடும் கோப்புகளைக்கூட மீட்டெடுத்துவிட முடியும் என்கிற இந்தக்காலகட்டத்தில் ஒரு குறுந்தகடை உடைத்துவிட்டால் மொத்தமும் போய்விட்டது என்று இயக்குநர் சொல்லியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது.
படத்தின் பாடல்கள் கேட்கிற மாதிரி இருக்கின்றன. பின்னணிஇசையில் ரொம்பவே சோதித்திருக்கிறார் இசையமைப்பாளர் மனுரமேசன். படத்தின் பெயருக்கேற்றபடி படம் இல்லை என்கிற குறை பெரிதாக இருக்கிறது என்றாலும் காவல்துறை என்பது பொறுப்பு அதிகாரமல்ல என்கிற நல்லகருத்தை மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று இயக்குநர் நினைத்திருக்கிறார்.
அதற்காக அவரைப் பாராட்டலாம்.
No comments:
Post a Comment