ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல், தமிழ்நாட்டின் தலைஎழுத்தை நிர்ணயிக்கக் கூடிய முக்கிய தேர்தல் என்று அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றன. எனவே இத்தேர்தலில் தமிழகத்தின் முக்கிய கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.
வரும் பிப்ரவரி மாதம் 13ம் தேதி இத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில், தி.மு.க., சார்பில் ஆனந்த், அ.தி.மு.க., சார்பில் எஸ். வளர்மதி, பா.ஜ.க., சார்பில் சுப்பிரமணியம், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அண்ணாத்துரை ஆகியோர் உட்பட மொத்தம் 29 பேர் போட்டியிடுகின்றனர்.
மேலும், தேர்தல் ஆணையம், இந்த தேர்தலில் எந்த முறைகேடுகளும் ஏற்படமால் 100 சதவீதம் நேர்மையான வாக்குப்பதிவை உறுதியாக தருவதாக கூறியுள்ளது. இதன்படி, ஓட்டுக்கு பணம் வாங்குபர்களையும், பணம் கொடுப்பவர்களையும் பிடிக்க ஒரு திட்டம் வைத்திருப்பதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து, இந்த தேர்தலை கருத்தில் கொண்டு சட்ட திருத்தம் ஒன்றை கொண்டுவர மத்திய அரசிடம் கோரியுள்ளது தமிழக தேர்தல் ஆணையம். இந்த சட்டத் திருத்தம் அமல்படுத்தப்பட்டால், புகாரே இல்லாமல், குற்றம் செய்தவர் 2 ஆண்டு சிறை தண்டனை பெறுவராம்.
பணம் கொடுத்தால் மாட்டிக் கொள்வோம் என்று, சரக்கு, வேஷ்டி, சட்டை, புடவை, டி.வி., போன், ஃப்ரிட்ஜ், என்று வேட்பாளர்கள் சார்பில், வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான லஞ்சங்களை ஒழிக்க தேர்தல் கமிஷன் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
பழைய சட்டம்
இப்போது நடைமுறையில் உள்ள சட்டப்படி, இவ்வாறு லஞ்சம் பொருளாகவோ, பணமாகவோ கொடுத்தால், புகார் செய்து அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, அதன் பின் கோர்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தான் குற்றவாளிக்கு தண்டனை.
அதுவும் 1 வருடம் தான். அதே போல், தேர்தல் காலங்களில் ஒரே இடத்தில் அதிமான அளவு பணம் பதுக்கபட்டு இருந்தால் அந்த இடத்தை வாரண்ட் இல்லாமல் சோதனை இட முடியாது.
கடந்த ஆண்டே இந்த சட்டங்களை திருத்தி அமைக்க மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
புதுச் சட்டம்
இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, தற்போது சட்டத்தை திருத்தியமைக்கும் பணியில் இறங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள தகவலில், குற்றவியல் நடைமுறை சட்டத்திருத்தப் பணியை தொடங்கி உள்ளதாகவும், இது தொடர்பான வரைவு மசோதாவை தயாரிக்கும்படி சட்டத்துறைக்கு தகவல் அனுப்பி உள்ளதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும், புதிய சட்ட திருத்த மசோதா வருகிற பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றும் உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய சட்ட திருத்தம் அமலுக்கு வந்தால், தேர்தலின் போது ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பவர்களை புகார் இல்லாமல் தேர்தல் அதிகாரி நேரில் பிடித்து வழக்கு பதிவு செய்ய முடியும்.
பொதுமக்களிடம் புகார் பெறும் போலீசார், ‘வாரண்ட்’ இல்லாமல் குற்றவாளியை கைது செய்து, நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் விசாரணையை தொடங்க முடியும்.
No comments:
Post a Comment