Thursday, 19 February 2015

பொட்டு சுரேஷின் உண்மை கதையா ‘இடம் பொருள் ஏவல்’..?


தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனுராமசாமி தற்போது தனது மூன்றாவது படமாக ‘இடம் பொருள் ஏவல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில்
அவரது முந்தைய படங்களின் கதாநாயகர்களான விஜய் சேதுபதி மற்றும் விஷ்ணு ஆகிய இருவரும் ஹீரோவாக நடிக்கின்றனர். ஹீரோயின்களாக நந்திதா, ஐஸ்வர்யா ஆகிய இருவரும் நடித்து வருகின்றனர். விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தை பற்றி பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது இந்தப் படத்தின் கதை மதுரையில் நடந்த பொட்டு சுரேஷின் கொலையை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கசிந்து இருக்கிறது.
இந்த பொட்டு சுரேஷ் யார் என்றால் தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினராகவும், மத்திய அமைச்சர் அழகிரிக்கு வலது கையாகவும் இருந்திருக்கிறார். மதுரையையே ஒரு கலக்கு கலக்கி வந்த இவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொடுரமாக வெட்டி கொலை செய்தனர்.
இந்த கதையை அடிப்படையாக வைத்துதான் இயக்குநர் சீனுராமசாமி ‘இடம் பொருள் ஏவல்’ படத்தை எடுத்து வருவதாக செய்திகள் பரவி வருகிறது.
இதுகுறித்து இயக்குநர் சீனுராமசாமி கூறுகையில்:- ‘‘இடம் பொருள் ஏவல், மதுரையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை கருவாக கொண்ட கதை. இது, பொட்டு சுரேஷின் கதையா? என்று இப்போது நான் சொல்ல முடியாது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து கதையை எழுதியிருக்கிறார். அதற்கு நான், திரைக்கதை-வசனம் எழுதி இயக்கியிருக்கிறேன். இது, ஒரு கூலிப்படை கொலை சம்பந்தப்பட்ட கதை.
இந்தப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு மலைப்பிரதேசத்தில் தஞ்சம் அடையும் இளைஞராகவும், நந்திதா அந்த மலையகத்து பெண்ணாகவும் நடித்து இருக்கிறார்கள். விஷ்ணு விஷால், மதுரையில் தமிழ் படிக்கும் மாணவராக வருகிறார். ஐஸ்வர்யா, பட்டிமன்ற பேச்சாளராக வருகிறார். விஜய் சேதுபதியை மகனாக ஏற்றுக்கொண்ட தாயாக வடிவுக்கரசி நடித்து இருக்கிறார்.
இதற்கு மேல், தேவையற்ற எதிர்பார்ப்பை உருவாக்கி மக்களை தியேட்டருக்கு வரவழைப்பது, ஒரு கலைஞனுக்கு அழகு அல்ல என்பதால், இதுபற்றி மேலும் விவாதிக்க விரும்பவில்லை” என்று கூறினார்.

No comments:

Post a Comment