வீட்டிலிருந்து காணாமல் போன நாய் ஒன்று தனது எஜமானி சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்குள் நுழைந்து அவரை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் அமெரிக்க அயோவா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
நான்ஸி பிராங் (64 வயது) என்பவருக்கு சொந்தமான சிஸ்ஸி என்ற நாயே இவ்வாறு மருத்துவமனைக்கு சென்றுள்ளது. காணாமல் போன தனது அன்புக்குரிய நாயை வலைவீசித் தேடியும் கண்டுபிடிக்க முடியாத நான்ஸி பெரிதும் கவலையடைந்திருந்தார்.
(வீடியோ கீழே)
இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதன்போது குறிப்பிட்ட நாய் நான்ஸி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குள் சென்றுள்ளது.
அந்நாயின் கழுத்துப்பட்டியில் பொறிக்கப்பட்டிருந்த வீட்டு விலாசத்தை கவனித்த மருத்துவமனை ஊழியர் ஒருவர், அந்த விலாசத்துடன் தொடர்பை ஏற்படுத்தி அந்நாய் தொடர்பில் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து அந்நாய் நான்ஸியைத் தேடியே மருத்துவமனைக்குள் சென்றுள்ளது என்பதை உணர்ந்த நான்ஸியின் கணவர் டேல் பிராங், அந்நாய் தனது மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் செல்வதற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அனுமதியை பெற்றார்.
காணாமல்போன நாயைக் தனது மருத்துவமனை அறையில் கண்ட நான்ஸி ஆனந்த மேலீட்டால் கண்ணீர் சிந்தி அழுதார். அந்நாய் நான்ஸியின் மருத்துவமனை அறையை நோக்கிச் செல்வதற்கான மாடிப் படிக்கட்டு வரை முகர்ந்தவாறு முன்னேறிச் செல்வதை வெளிப்படுத்தும் காட்சி அந்த மருத்துவமனையிலுள்ள வீடியோ கண்காணிப்பு கருவிகளில் பதிவாகியுள்ளது.
(வீடியோ கீழே)

No comments:
Post a Comment