திருமண பதிவு இடம்பெறுவதற்கு ஒரு சில நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் மணமகளின் பெயரை மறந்த மணமகன் வசமாக குடிவரவு அதிகாரிகளிடம் சிக்கிய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஸூபெயிர் கான் (28 வயது) என்ற இளைஞருக்கும் ஹங்கேரியை சேர்ந்த பீட்டா ஸஸிலக்யி (33 வயது) என்ற பெண்ணுக்கும் ஹல் எனும் இடத்திலுள்ள திருமணப் பதிவு அலுவலகத்தில் திருமணம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படும் நிலையை எதிர்கொண்டிருந்த ஸூபைர் கான் அந்நாட்டில் தொடர்ந்து தங்கியிருக்க பீட்டாவை போலியாக திருமண பதிவு செய்ய தீர்மானித்திருந்தார். இந்த போலி திருமணத்துக்கு காலிக் தத் கான் என்பவர் ஏற்பாடு செய்திருந்தார்.
திருமணப் பதிவு அலுவலகத்தில் திருமணம் நடைபெறுவதற்கு ஒரு சில நிமிடங்களே இருந்த நிலையில் மணமகளின் பெயரை நினைவு கூற முடியாத ஸூபைர் கான் காலிக் தத்கானுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு மணமகளின் பெயர் என்ன என வினவியுள்ளார்.
இதனை கவனித்த திருமண பதிவு அலுவலர் செய்த புகாரை அடுத்து ஸூபைர் கானும் பீட்டாவும் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மேற்படி வழக்கை விசாரித்த நீதிபதி ஸூபைர் கானுக்கு 20 மாத சிறைத்தண்டனையும் பீட்டாவுக்கு 17 மாத சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
அதே சமயம் காலிக் தத்கானுக்கும் 20 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment