பாலியல் அடிமையாக பயன்படுத்தப்பட்ட அமெரிக்க சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரித்தானிய இளவரசர் ஆன்ட்ரூவுக்கு ஆதரவாக அவரின் முன்னாள் காதலியும் குரல் கொடுத்துள்ளார்.
இளவரசர் ஆன்ட்ரூவின் முன்னாள் நண்பரான அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டெய்ன் சிறுமிகள் உட்பட பல பெண்களை பாலியல் அடிமையாக பயன்படுத்தியதுடன் தனது நண்பர்களுக்கும் அவர்களை "வாடகைக்கு" வழங்கியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
அப்பெண்களில் ஒருவரான வேர்ஜீனியா ரொபர்ட்ஸ் 17 வயதுக்குட்பட்ட சிறுமியாக இருந்தபோது அவரை இளவரசர் ஆன்ட்ரூவுடன் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு ஜெப்ரி எப்ஸ்டெய்ன் நிர்ப்பந்தித்ததாக கூறப்படுகிறது.
ஜெப்ரி எப்ஸ்டெய்னுக்கு எதிராக அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நீண்டகாலமாக நடைபெறும் வழக்கொன்றில், இளவரசர் ஆன்ட்ரூவுக்கு பாலியல் அடிமையை விநியோகித்தமை தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இளவரசர் ஆன்ட்ரூவுடன் தான் பாலியல் உறவில் ஈடுபட்டதாக தற்போது 31 வயதான வேர்ஜீனியா ரொபர்ட்ஸ் கூறுகிறார். ஆனால், இளவரசர் ஆன்ட்ரூவும் பிரித்தானிய அரச குடும்பத்தினரும் இக்குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்துள்ளனர். இந்நிலையில் இளவரசர் ஆன்ட்ரூவுக்கு அவரின் முன்னாள் காதலியான கூ ஸ்டார்க்கும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஆன்ட்ரூ மிகவும் வசீகரமானவர் எனவும் பாலியல் அடிமையுடன் உடலுறவு கொள்ள வேண்டிய தேவை அவருக்கு இல்லை எனவும் கூ ஸ்டார்க் கூறுகிறார். பிரித்தானிய கடற்படை விமானியாக பணியாற்றிய இளவரசர் ஆன்ட்ரூ, 1982 ஆம் ஆண்டு பிரிட்டனுக்கும் அர்ஜென்டீனாவுக்கும் இடையில் நடைபெற்ற பாக்லாந்து யுத்தத்தில் பங்குபற்றிய பின் பிரிட்டனுக்கு திரும்பிவந்த போது நடிகை கூ ஸ்டார்க்கை காதலித்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது 58 வயதான கூ ஸ்டார்க், இளவரசர் ஆன்ட்ரூ தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,
ஆன்ட்ரூ மீதான அபத்தமான குற்றச்சாட்டுகளை கேள்விப்பட்டபோது தான் மிகவும் ஆத்திரமடைந்ததாக கூறியுள்ளார். "30 வருடகாலமாக நான் அவரை அறிவேன். அவர் மீது மிக மோசமான நடத்தைக் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது.
காயத்திலிருந்து வெளியாகும் குருதி போல, அவரின் வாழ்க்கையில் கறைகள் பரவுகின்றன. அப்பாவி மனிதர் மீது ஊடகங்கள் களங்கம் ஏற்படுத்துகின்றன. அதனால்தான் நான் எனக்கும் ஆன்ட்ரூவுக்கும் இடையிலான உறவுமுறை குறித்த தகவல்களை வெளியிடத் தீர்மானித்தேன். அவர் ஒரு நல்ல மனிதர் என நான் நம்புகிறேன்" என கூ ஸ்டார்க் கூறுகிறார்.
1956 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த கூ ஸ்டார்க், தனது 16 வது வயதில் லண்டனுக்கு இடம்பெயர்ந்தார். 1976 ஆம் ஆண்டு முதல் அவர் திரைப்படங்களில் நடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. இளவரசர் ஆன்ட்ரூவுடனான காதல் முறிந்தபின் டிம் ஜெப்ரீஸ் என்பவரை அவர் 1986 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
1990 ஆம் ஆண்டு ஜெப்ரீஸும் கூ ஸ்டார்க்கும் விவாகரத்து செய்திருந்தனர். இளவரசர் ஆன்ட்ரூ, சாரா பேர்குஸனை 1986ஆம் ஆண்டு திருமணம் செய்து 1996 ஆம் ஆண்டு விவாகரத்து செய்திருந்தார்.
வேர்ஜீனியா ரொபர்ட்ஸ் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் சாரா பேர்குஸனும் இளவரசர் ஆன்ட்ரூவுக்கு ஆதரவாக ஏற்கெனவே கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment