இலங்கையில், கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் பெரும் திருப்பமாக, தொடர்ந்து இரண்டாண்டு ஆட்சி செய்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டு, மைத்திரி பால சிறி சேன ஜனாதிபதி ஆனார்.
இலங்கையில் இந்த ஆட்சி மாற்றத்தினால், வடக்கு மற்றும் கிழக்கில் வசித்து வரும் தமிழர்களின் வாழ்வை மெம்படுத்தும் என்று நம்பப் படுகிறது. இதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை அகதிகளைதாய்நாட்டிற்கு அழைத்துள்ளது, புதிய இலங்கை அரசு.
மேலும், இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளை தாய்நாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது. இது குறித்து புது தில்லியில் இந்திய அதிகாரிகளுடன், இலங்கை அதிகாரிகள் சிலரும் கலந்தாலோசனை செய்தனர்.
ஆனால், இலங்கையில் தமிழர்களின் வாழிடங்களில் உரிய மாற்றங்கள் செய்யாமல் தமிழ்நாட்டில் இருக்கும் இலங்கைத் தமிழர்களை தாய்நாட்டிற்கு அனுப்ப முடியாது என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இந்நிலையில், அகதிகளை தாய்நாட்டிற்கு அனுப்பும் முடிவு வரவேற்கத்தக்கது என்று தி.மு.க., தலைவர்கருணாநிதி செய்தி வெளியிட்டார்.
இதற்கு ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் கூறியிருப்பதாவது:
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் காரணமாக புகலிடம் தேடி தமிழகம் வந்து பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது பற்றி விவாதிப்பதற்காக கடந்த மாதம் 30-ந் தேதி தமிழக அரசின் உயரதிகாரியை அனுப்பிவைக்கும்படி தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுப்பிய கடிதத்திற்கு, நான் பிரதமருக்கு கடந்த 28-ந் தேதி ஒரு கடிதம் அனுப்பி இருந்தேன்.
நான் எழுதிய கடிதம் பற்றி சரியாக புரிந்து கொள்ள இயலாத தி.மு.க. தலைவர் கருணாநிதி “அகதிகள் பிரச்சினையில் அ.தி.மு.க. அரசின் பொறுப்பற்ற செயல்” என்ற தலைப்பில் ஒரு வெற்று அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை பல்வேறு முரண்பாடுகள் நிறைந்துள்ளதாக உள்ளது.
இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகத்திற்கு வந்த 3,04,269 பேரில், 2,12,000 பேர் அவர்களுடைய சொந்த விருப்பத்தின் பேரில் ஏற்கனவே இலங்கைக்கு திரும்பியுள்ளனர். எனவே, தற்போது தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் சொந்த விருப்பத்தின் பேரில் இலங்கை திரும்புவதற்காக ஒரு கூட்டம் நடத்தப்படுகிறது என்றால், அது எதற்கான கூட்டம் என்பது எவருக்கும் தெரியும்.
கருணாநிதிக்கும் அது புரியும். ஆனாலும், இலங்கை தமிழர்பால் தனக்குள்ள காழ்ப்புணர்ச்சி இன்னமும் தணியாத நிலையில் இங்கே உள்ள இலங்கை அகதிகளை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று துடிக்கிறார் கருணாநிதி.
இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசின் நல்லிணக்கம் மற்றும் மறுகுடியமர்த்தல் ஆகிய நல்லெண்ணங்கள் செயலாக்கப்பட்டதற்கு பின்னரே, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவதற்கான கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற இந்த அரசின் முடிவு எப்படி பொறுப்பற்ற செயல் ஆக இருக்க முடியும்?
இங்கே உள்ள இலங்கை அகதிகளின் மீது இந்த அரசுக்கு உள்ள பொறுப்பின் காரணமாகத்தான் இது போன்ற ஒரு சரியான முடிவு எடுக்கப்பட்டது என்பதை நடுநிலையாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வர். இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த மட்டக்களப்பு எம்.பி. சீனித்தம்பி யோகேஸ்வரன், சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்திருந்த போது, வாரம் இரு முறை வெளிவரும், ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் “இது வரை கிழக்கு மாகாணம் உள்பட பல இடங்களில் மக்கள் வாழ முடியாத சூழ்நிலை இருந்தது. பல இடங்களில் மக்கள் குடியமர்த்தப்படாமல் இருந்தனர். இந்த நிலைமைகளையெல்லாம் மாற்றியமைக்க தற்போதைய அரசாங்கம் முடிவெடுக்கிறது. ஆரம்ப கட்டமாக தமிழர்கள் குடியேற்றப்பட்டு வருகிறார்கள். விரைவாக குடியேற்றம் நடைபெற உள்ளது. அதன் பிறகு தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்த மக்களை அழைத்து குடியமர்த்த உள்ளோம்” என்று கூறியுள்ளார்.
இதைத்தான் மத்திய அரசுக்கு நாங்களும் சொல்லி இருந்தோம். கருணாநிதி தனது நீண்ட அறிக்கையில், தி.மு.க. ஆட்சியில் இலங்கை தமிழர்களுக்கு என்னென்ன செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துள்ளார். அதிலே சொல்லியுள்ள பல சலுகைகள் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டவை என்பது தான் உண்மை.
ஆனால் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் ஜெயலலிதா இலங்கை அகதிகளுக்கும் விரிவுபடுத்தி வழங்கிய காரணத்தால், 2013-14-ம் ஆண்டில் இலங்கை அகதிகளுக்கென மத்திய அரசு ரூ.37.30 கோடி மட்டுமே வழங்கியுள்ள நிலையில் மாநில அரசால் செலவிடப்பட்ட தொகை ரூ.111 கோடி ஆகும்.
பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு ஜெயலலிதா என்னென்ன சலுகைகள் வழங்கியுள்ளார் என்று நான் சுட்டிக்காட்டியதை பொறுத்துக்கொள்ள முடியாத கருணாநிதி தனது ஆட்சியில் என்னென்ன வழங்கப்பட்டது என்று பட்டியலிட்டதில், பல பணிகள் தமிழக அரசால் செய்யப்படாத ஒன்றாகும்.
முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் 2009-2010-ம் ஆண்டில் ரூ.5 கோடி செலவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டு, நிதி ஒதுக்கம் செய்யப்பட்டு, இறுதி திருத்திய நிதி ஒதுக்கீட்டில் அது திரும்பப்பெறப்பட்டு விட்டது என்பது தான் உண்மை. அதே போன்று முகாம்களில் செய்யப்பட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் மத்திய அரசின் செலவிலேயே செய்யப்பட்டவையாகும்.
அது போலவே, உயர்த்தப்பட்ட பணக்கொடையும் மத்திய அரசால் வழங்கப்பட்டது தான். தற்போது ஜெயலலிதாவால் உயர்த்தப்பட்டுள்ள பணக்கொடை மாநில அரசால் வழங்கப்படும் உயர்வாகும். 26.9.2009 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு நிறைவு விழாவில், இலங்கை அகதிகள் தமிழகத்திலே நிரந்தரமாக குடியிருக்க வழிவகை செய்து தர வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொண்ட தீர்மானத்தின்படி, மத்திய அரசுக்கு, தான் கடிதம் எழுதியதாக கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு மத்திய அரசிலே கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் அங்கம் வகித்த கருணாநிதி, இதற்காக என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதை அவர் தெரிவிப்பாரா?. தி.மு.க.வால் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானமும், அதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு கருணாநிதி எழுதிய கடிதமும் ஒரு கபட நாடகம் தானே?
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை கருணாநிதி எப்பொழுது மாற்றிக்கொண்டார்? இலங்கை அகதிகளை கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்பி விட வேண்டும் என்ற முடிவை எப்போது எடுத்தார்? என்பதை கருணாநிதி தான் விளக்க வேண்டும்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் காரணமாக தமிழர்களுக்கு நன்மை ஏற்படும் என்ற நம்பிக்கை இருந்தாலும், அந்த நம்பிக்கை செயல் வடிவம் பெற வேண்டும். அதன் பின்னரே, இங்கே உள்ள இலங்கை அகதிகள், தாயகம் திரும்புவது பற்றி எவரும் சிந்திக்க இயலும்.

No comments:
Post a Comment