Friday, 20 February 2015

சண்டமாருதம் - விமர்சனம்...!


சண்டமாருதம் என்றால் பெருங்காற்று அல்லது புயல் என்று தமிழ்அகராதி சொல்கிறது. இந்தப்படத்தில் வில்லன் சரத்குமாரை மனதிற்கொண்டு இந்தப்பெயரை வைத்திருக்கிறார்கள்.
ஆம் இந்தப்படத்தில் கதாநாயகனும் அவரே எதிர்மறைநாயகனும் அவரே. கோயில்கள்நகரம் என்று சொல்லப்படும் கும்பகோணத்தையே தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கிறார் சரத்குமார். அவருக்கு மிகநம்பிக்கையான கூட்டாளிகளாக ராதாரவியும் காதல்தண்டபாணியும் இருக்கிறார்கள்.
வெளித்தோற்றத்துக்கு அடிதடி, கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களாகத் தெரிந்தாலும் ஒபாலிஸ்கா என்கிற புதியவகை ஆயுதமொன்றை வைத்து இந்தியாவையே ஆட்டம் காணவைக்கிற சதிச்செயலைச் செய்யத் துணைநிற்கிறார்கள்.
இந்தவிசயத்தை வின்சென்ட்அசோகன், சமுத்திரக்கனி ஆகிய காவல்அதிகாரிகள் துப்பறிந்து கண்டுபிடிக்கிறார்கள். அதன்விளைவு அவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். கடைசியில் கதாநாயகன் சரத்குமார் களத்தில் இறங்குகிறார். அப்புறம் என்ன நடக்கும்? என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை.
இந்தப்படத்தில் கதாநாயகன் வேடத்தைவிட எதிர்மறை வேடத்தில் நடிப்பதில் தான் சரத் ஆர்வம் காட்டியிருக்கிறார் என்று சொல்கிற அளவு ரசித்து நடித்திருக்கிறார். நடிப்பதற்கான வாய்ப்புள்ள வேடமாகவும் அது இருக்கிறது. அவர் எதிர்மறை நாயகன் என்று சொல்லவேண்டியதேயில்லை என்று சொல்லுமளவிற்கு அவருக்கு ஒரு முன்கதை இருக்கிறது.
பூ விற்கும் அம்மா தன் மகனைத் தனியார்பள்ளியில் படிக்கவைக்கவேண்டுமென்று ஆசைப்படுகிறார். அதற்குப்பணமில்லை, தனியார்பள்ளி முதல்வரைச் சந்தித்துத் தன்மகளை இந்தப்பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கெஞ்சுகிறார். அப்போது அந்த முதல்வர் தள்ளிவிட மாடியிலிருந்து கீழேவிழுந்து இறந்துவிடுகிறார். உடனே அந்தப்பள்ளி முதல்வரைக் கீழே தள்ளிக்கொலைசெய்கிறார் சின்னவயது சரத்.
அப்போதிருந்து அவர் எதிர்மறைநாயகன். பல படங்களில் நேர்மறைநாயகன்களுக்கான முன்கதையாகவே இது இருக்கிறது. கதாநாயகன் சரத், மணக்கவிருக்கும் மீராநந்தன், உடன் பணிபுரியும் காவல்அதிகாரி ஓவியா ஆகியோரோடு தலா ஒருபாடல் பாடிவிட்டு வழக்கமான வேலைகளைச் செய்கிறார். நாயகனின் அறிமுகக்காட்சியில் அவருடைய தலைக்கு எண்ணெய்தேய்த்துக் குளிக்கவைக்கக் குடும்பமே துரத்துகிறது போன்ற அரதப்பழசான காட்சிகளை வைத்துச் சோதித்திருக்கிறார்கள்.
மீராநந்தன் அடக்கமாவும் அமைதியாகவும் வந்துபோகிறார். ஓவியா கவர்ச்சி காட்டி ரசிகர்களைக் கவருகிறார். நாயகன் சரத்தின் பெரியகுடும்பத்தில் ஜிஎம்.குமார், டெல்லிகணேஷ், நளினி, மோகன்ராம் உட்பட நிறையப்பேர் இருக்கிறார்கள். இவ்வளவு பெரியகுடும்பம் இருக்கிறதென்றால் கடைசியில் ஓரிருவரைப் பலியாக்குவார்கள் என்கிற எண்ணத்தையும் தவறாமல் பூர்த்தி செய்துவிட்டார்கள்.
நகைச்சுவைக்காக தம்பிராமய்யா, வெண்ணிறஆடைமூர்த்தி, இமான்அண்ணாச்சி ஆகியோர் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பங்குக்கு அங்கங்கே சிரிக்கவைக்கிறார்கள். நிறைய சோதிக்கிறார்கள். சமுத்திரக்கனியை நல்லகாவல்அதிகாரி வேடத்தில் நடிக்கவைத்திருக்கிறார்கள். அவரைக்கொலை செய்தென்று முடிவெடுத்தால் அவர் இருக்கும் இடத்திலேயே கூட செய்திருக்கலாம் ஆனால் அவர் பெரியஇயக்குநர், அவரை நடிக்கக்கூப்பிடும்போதே உங்களுக்கு இவ்வளவு காட்கிள் இருக்கின்றன படத்தில் இவ்வளவு நேரம் வருகிறீர்கள் என்று சொல்லியிருப்பார்கள். அதற்காகவே காட்சிகளை நீட்டித்திருக்கிறார்கள்.
ஒரு தாதாவை காவல்துறை திட்டமிட்டு அழிக்கிறது என்று சொல்லிவிட்டால் அது சாதாரணமாகப் போய்விடும் என்று நினைத்து ஒபாலிஸ்கா என்கிற புதியஆயுதம் அதை வைத்து ஆட்களை மட்டுமல்ல கட்டிடங்களைக்கூட உருத்தெரியாமல் அழித்துவிடலாம் என்றும், அதை வைத்து இந்தியாவின் 101 நகரங்களில் அழிவை ஏற்படுத்துவதென்றும் அதற்காக வெளிநாட்டுச் சக்திகள் கோடியாக கோடியாகப் பணம் தருகிறதென்றும் கதைவிட்டிருக்கிறார்கள்.
கும்பகோணத்தில் உட்கார்ந்து கொண்டு அதை எப்படித் தயாரிக்கிறார்கள்? அதற்கான ஆய்வகம் எங்கே இருக்கிறது? மூலப்பொருட்களை எங்கே வாங்குகிறார்கள்? என்று சாதாரண சில கேள்விகளைக் கேட்டால்கூட இந்தத்திரைக்கதை எழுதியிருக்க முடியாது என்றே தோன்றுகிறது.
திரைக்கதை அமைத்திருக்கும் ராஜேஷ்குமாருக்கு இந்தக்கேள்விகள் வராமல் போனது எப்படி? படத்தை இயக்கியிருக்கும் வெங்கடேஷ், தன்னுடைய முந்தைய படங்களில் வைத்திருந்த பல காட்சிகளையே இந்தப்படத்தில் தேவைக்கேற்ப திரும்பவும் வைத்துக்கொண்டார் போலிருக்கிறது. எல்லாமே ஏற்கெனவே பார்த்த காட்சிகள் போலவே இருக்கின்றன.
தாமே தயாரித்து நடிக்கவும் செய்கிற அளவு வசதியாக இருக்கும் சரத், அதற்காக நல்லஇயக்குநர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் தம்மை ஒப்படைத்தால் அவருக்கு நல்லது.
இல்லையெனில் புதியசிந்தனைகளின் பெருங்காற்றில் அடித்துச்செல்லப்பட்டுவிடுவார்.

No comments:

Post a Comment