இளவரசி டயானாவின் மரணத்தின் பின்னர் பிரித்தானிய அரச குடும்பம் ஊடகங்களில் சித்திரிக்கப்பட்ட விதம் குறித்து 2 ஆம் எலிஸபெத் ராணியின் கணவரான இளவரசர் பிலிப் கவலை தெரிவித்து எழுதிய கடிதமொன்று ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸிடமிருந்து விவாகரத்து பெற்றிருந்த இளவரசி டயானா, 1997 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் தனது காதலர் டோடி அல் பயாட்டுடன் உயிரிழந்தார்.
எகிப்திய கோடீஸ்வரர் மொஹமட் அல் பயாட்டின் மகனான டோடி அல் பயாட்டை இளவரசி டயானா திருமணம் செய்வதை விரும்பவில்லை எனக் கூறப்பட்டது. அதனால் பிரித்தானிய அரச குடும்பத்தினர், அந்நாட்டு புலனாய்வுப் பிரிவின் மூலம் இளவரசி டயானாவை கொலை செய்வதற்கு சதி செய்திருக்கலாம் என சிலர் குற்றம் சுமத்தினர்.
அதேவேளை டயானாவின் மரணத்துக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் பக்கிங்ஹாம் அரண்மனையில் 2 ஆம் எலிஸபெத் அரசி அரைக்கம்பத்தில் கொடியை பறக்கவிடாதமை குறித்தும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அச்சூழ்நிலையில் தனது மருமகளான இளவரசி மார்கரிட்டாவுக்கு எழுதிய கடிதமொன்றில், அரச குடும்பத்தினர் சித்திரிக்கப்படும் விதம் குறித்து தான் கவலையடைவதாக இளவரசர் பிலிப் தெரிவித்திருந்தார்.
இக்கடிதம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டபோது 2500 ஸ்ரேலிங் பவுண்களுக்கு வாங்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸும் டயானாவும் 1981 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனா உட்பட உலகின் பல நாடுகளின் தலைவர்களும் இத்திருமண வைபவத்தில் பங்குபற்றினர். ஆனால், சில வருடங்களிலேயே சார்ள்ஸ், டயானா தம்பதிகளின் உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியது.
எனினும் பிரித்தானிய அரச குடும்பத்தவர்களில் மக்களால் அதிகம் நேசிக்கப்பட்டவராக இளவரசி டயானா விளங்கினார். சார்ள்ஸும் டயானாவும் 1996 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தனர். 1997.08.31 ஆம் தேதி, பாரிஸ் நகரில் டோடி அல் பயாட்டுடன் டயானா பயணம் செய்த கார், பப்பராஸிகளால் துரத்திச் செல்லப்பட்ட நிலையில் விபத்துக்குள்ளாகியது. இதனால் டயானா, டோடி அல் பயாட் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் உயிரிழந்தனர்.
டயானா உயிரிழந்துவிட்டதாக வெளியான செய்தி முழு பிரிட்டனையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனைய நாடுகளிலுள்ள டயானா அபிமானிகளுக்கும் அது பேரடியான செய்தியாக அமைந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு முன்னால் மலர்கொத்துகளை வைத்து அஞ்சலி செலுத்தினர். ஆனால், 2 ஆம் எலிஸபெத் அரசி, அப்போது பக்கிங்ஹாம் அரண்மனையில் இருக்கவில்லை. அவர் டயானாவின் மரணம் அறிவிக்கப்பட்ட பின் 4 தினங்கள் வரை பல்மோரல் மாளிகையில் தங்கியிருந்தார்.
அரசியார் ஏன் தொடர்ந்தும் அந்த மாளிகையில் தங்கியிருக்கிறார்? பக்கிங்ஹாம் அரண்மனையில் சோகத்தை வெளிப்படுத்தும் வகையில் அரைக்கம்பத்தில் கொடி பறக்கவிடாமைக்கான காரணம் என்ன என பலர் கேள்வி எழுப்பினர். ஊடகங்களும் இது குறித்து விமர்சித்தன. அரைக்கம்பத்தில் கொடி பறக்கவிடப்படாவிட்டால் பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் பலவந்தமாக நுழையப்போவதாக பொதுமக்கள் சிலர் அச்சுறுதியமையும் குறிப்பிடத்தக்கது.
டயானா மரணமடைந்து 4 நாட்களின் பின்னரே அரச குடும்பம் அனுதாபம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தது. இத்தகைய பின்னணியில் அரச குடும்பத்தின் மீதுதான விமர்சனங்களால் ஏற்பட்ட வேதனைகளை வெளிப்படுத்தி மேற்படி கடிதத்தை தனது மருமகளுக்கு இளரவரசர் பிலிப் எழுதியதாக தெரிவிக்கப்படுகிறது.
டயானாவை விவாகரத்து செய்து 9 வருடங்களின்பின் 2005 ஆம் ஆண்டில் இளவரசர் சார்ள்ஸ் தனது நீண்டகால காதலியான கமீலா பார்க்கரை திருமணம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment