அ.தி.மு.க., பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் 67வது பிறந்த நாள் விழா இன்று.
இதற்காக, ஒரு பக்கம், ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே பிறந்தநாளை முன்னிட்டு, போட்டிகள் வைத்து பரிசளிப்பது, மக்களுக்கு இனிப்பு உள்ளிட்டவை வழங்கி மகிழ்விப்பது என்று அ.தி.மு.க., தொண்டர்கள் சிலர் இறங்கியுள்ளனர்.
இன்னொரு பக்கம், ஜெயலலிதா, இழந்த முதல்வர் பதவியை மீண்டும் பெற வேண்டும் என்பதற்காக, தொண்டர்கள் சிலர், அங்கபிரதட்சணம் செய்வது, அலகு குத்திக் கொள்வது, தீச்சட்டி எடுப்பது, காவடி தூக்குவது என்று வேண்டுதல்கள் செய்து வருகின்றனர்.
இதில் உச்ச கட்டமாக, கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி, தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்டார். இது தவிர, இலவச திருமணங்கள், சீர்வரிசைகள் கொடுப்பது, ரத்த தாணம் செய்வது போன்ற தொண்டுகளும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், நேற்று சட்ட மன்றத்திலேயே தம் கட்சித் தலைவியை கவிதை பாடி வாழ்த்தியுள்ளார். தமிழக சட்டசபைக் கூட்டத் தொரின் கடைசி கூட்டம் நேற்று நடந்தது. இதில், பன்னீர் செல்வம், ஜெயலலிதாவுக்காக கவிதை ஒன்றை தயார் செய்து மைக்கில் பேசி தன் விசுவாசத்தைக் காட்டி யுள்ளார்.
சட்டசபையில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பதிலளித்து பேசிய போது தான் இந்த கவிதை வாழ்த்துப் பகுதியும் இடம்பெற்றுள்ளது. அவர் பாடிய கவிதையைக் கொஞ்சம் நீங்களும் படியுங்கள்…
ஆறாம் முறை கழகத்தை
ஆட்சித் தேர்தனில் அமர்த்தி,
சூதுமதி, சூழ்ச்சிதனை
சுக்குநூறாய் நொறுக்கி,
தருமமே வெல்லும்,
பீனிக்ஸ் பறவையாய்
பிறப்பெடுக்கக் காத்திருக்கும்
எங்கள் பேரறிவுத் தாயே ...!
விழிப்புற்ற தமிழகத்திற்கு
விடையாக வந்த விடிவெள்ளியே...!
தங்கம் தருகிற கை எங்கள்
தங்கத் தாரகை என
தாய்க்குலம் போற்றுகிற
சக்தியின் வடிவே !
சேற்றிலே பாடுபட்டு
செந்நெல் விளைவிக்கிற
ஏற்றமிகு விவசாயிகள் வாழ்விலே
மாற்றத்தை உருவாக்க காவேரியை
மீட்டு வந்த கம்பீரமே !
முல்லை பெரியாறு காத்திட்ட
மூவேந்தர் ஓர் உருவே...!
தடம் மாறிக் கிடந்த
தலைமுறைக்கு சரியான வழிகாட்டி,
சாதிக்கும் திறம் கூட்டி,
மதி செழிக்க
மடிக்கணினி தந்த மகராசியே...!
ஆற்றல்களின் பிரம்மமே...!
இதே போல், சென்ற முறையும் ஜெயலலிதாவை வாழ்த்தி பன்னீர் கவிதை பாடினார்.
போன முறை பாடிய கவிதையில், குலசாமி, தன்மானச் சிங்கம் என்று ஜெ.,வைக் குறிப்பிட்ட பன்னீர், இந்த முறை ஃபீனிக்ஸ் பொன்ற விச்சித்திர சொற்களை உபயோகித்துள்ளார்.
வாழ்த்துறதுக்காகவே பன்னீர் டியூன் ஆகி மொத்த வித்தையும் கத்துகிட்டு இருப்பார் போல.
No comments:
Post a Comment