ஸ்ரீரங்கம் தொகுதியில் நாளை தேர்தல் நடைபெறுவதை ஒட்டி பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது. கடந்த வாரம் முழுவதும் நடைபெற்ற பிரச்சாரங்கள் ஓய்ந்துள்ள நிலையில் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா, தனது பங்கிற்கும் அறிக்கை விட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘ஸ்ரீரங்கம் என் தாய் மண்; ஸ்ரீரங்கம் என் சொந்த வீடு; ஸ்ரீரங்கம் தலைமுறை தலைமுறையாக என் முன்னோர் வாழ்ந்து வந்த புண்ணிய பூமி. எனவே தான், என் இதயத் துடிப்போடு கலந்துவிட்ட உறவு ஸ்ரீரங்கத்திற்கு உண்டு. 2011–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் நான் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட போது, என் மீது அளவில்லா அன்பு கொண்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்தீர்கள்.
அதேபோல இந்தத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர்களாகிய தாங்கள் அனைவரும் எனக்கே வாக்களிக்கும் எண்ணத்தோடு உங்களது பொன்னான வாக்குகளை ‘இரட்டை இலை’ சின்னத்தில் அளிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு வருகின்ற 13–ந் தேதி(நாளை) நடைபெற உள்ள இடைத் தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அன்பு சகோதரி எஸ்.வளர்மதிக்கு நீங்கள் ‘இரட்டை இலை’ சின்னத்தில் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், உங்கள் அன்புச் சகோதரியாகிய எனக்கு அளிக்கும் வாக்காகவே கருதப்படும்.
எனவே, நானே போட்டியிடுவதாகக் கருதி, ‘இரட்டை இலை’ சின்னத்திற்கு வாக்களித்து மகத்தான வெற்றி பெறச் செய்யுங்கள்.’ என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment