Tuesday, 24 February 2015

அம்மா அன்னம் அளிக்கும் திட்டம்.. தப்பா பாடிட்டானே பாரதி..!


தயாரிப்பாளர் சங்கத்துக்கு வரும் உறுப்பினர்களுக்கு தினமும் உணவு அளிக்கும் வகையில், அம்மா அன்னம் அளிக்கும் திட்டத்தின் தொடங்க விழா நேற்று நடைபெற்றது. இத்திட்டத்தை இசையமைப்பாளர் இளையராஜா தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இளையராஜா பேசுகையில், "தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியாருடைய வரிகளை கேட்கும்போதெல்லாம் தப்பாக பாடிவிட்டானே பாரதி, என்றுதான் நினைப்பேன். தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் சாப்பாடு போடுவோம் என்று பாடியிருக்கணுமே தவிர, ஜெகத்தினை எதுக்கு அழிக்கணும்? சாப்பாடு போடுவதற்குத்தான் இங்கு இயற்கை காத்துக் கிடக்கிறதே.
மழை பொழிந்தால் பயிர்கள் எல்லாம் விளைகின்றன. மழை பொழிந்தால் நிலம் ஈரமாகிறது. காய்ந்து போன பாறைகூட ஈரமாகிறது. அந்த ஈரம் நம்முடைய மனதில் இல்லையா? தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் உணவளிப்போம். இந்த திட்டம் உண்மையாகவே மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம். தயாரிப்பாளர்கள் சங்கம் ஒற்றுமையாக இருந்து ஒரு காரியத்தை செய்கிறார்கள் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்.
எல்லோரும் பசியோடுதான் வந்தோம். நானும் பசியோடுதான் வந்தேன். பசி என்றால் கலைப் பசியோடு வந்தோம். பசி எங்களுக்கு துன்பத்தை தரவில்லை. சந்தோஷமாக இருந்தோம். இந்த பெயர், புகழ் எல்லாம் வந்த பின்னால் அந்த சந்தோஷம், நட்புரிமை எல்லாம் இப்போது இருக்கிறதா என்றால், இல்லை. அந்த பழைய ஆட்கள் செத்துப் போய்விட்டார்கள். பழைய நண்பர்கள் அல்லவா? அவர்களெல்லாம் அந்த குணங்களோடு அப்படியே இறந்து போய்விட்டார்கள்.
அது இறந்து போவதற்கு காரணமாக இருந்தது பெயரும், புகழும், பணமும் அத்தனையும். அப்படியான ஒரு புகழும், பெயரும் நமக்கு தேவையா? மனித உள்ளத்தை கொல்லக்கூடிய இந்த விஷம் நமக்கு தேவையா? தயாரிப்பாளார்களா நீங்கள், நல்ல நடிகர்களை, இயக்குநர்களை, நல்ல கதைகளை, ரசிகர்களை, தியேட்டர் உரிமையாளர்களை, நல்ல இசையமைப்பாளர்களை தயாரிக்கிறீர்கள், எதை நீங்கள் தயாரிக்கவில்லை.
எல்லாவற்றையும் தயாரிக்கும் நீங்கள் ஒற்றுமையில்லாமல் இருந்து இப்போது ஒற்றுமையாக இணைந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஒற்றுமையோடு மட்டுமில்லாமல், ஒரு முடிவு எடுத்தால் 100 சதவீதம் அதற்கு பின்னால் நின்று ஒத்துழைப்பு கொடுக்கும் அளவுக்கு நீங்கள் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த அம்மா அன்னம் அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைக்க என்னை அழைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே' என்று மட்டும் நான் பாடவில்லை. 'அம்மான்னா சும்மா இல்லடா...' என்றும் கூட நான் பாடியிருக்கிறேன்," என்றார். அம்மாவின் இந்த உணவுத் திட்டத்தை என்னை தொடங்கி வைக்கச் சொல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. அன்னதானம் உலகமெங்கும் பரவட்டும். பசிக்கு உணவளிக்கும் உலகத்தை உருவாக்குவோம்" என்று இளையராஜா பேசினார்.

No comments:

Post a Comment