இந்தியாவின் 65வது குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா வருகை தந்திருந்தார். ஒபாமா வருகையின் போது, பிரதமர் நரேந்திர மோடி, அவரது முழுப் பெயரான ‘நரேந்திர தாமோதர் தாஸ்’ என்று எழுதப்பட்டிருந்த கோட் ஒன்றை அணிந்திருந்தார்.
11 லட்சம் ரூபாய் மதிப்புடைய இந்த கோட்டை, ஒபாமாவுடன் சந்திக்கும் போது அணிவதற்காகவே, வெளிநாட்டில் வாழ்ந்து வரும் மோடியின் நண்பரும், தொழிலதிபருமான ரமேஷ் விரானி என்பவர் பரிசளித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனால், இந்த கோட் விஷயம் சர்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையில், அண்மையில், இந்த கோட் ஏலம் விடப்பட்டு அந்த பணம் கங்கையை தூய்மைப் படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் என்று நரேந்திர மோடி தெரிவித்தார்.
இதனை பலரும் ஆதரித்தனர். இதன்படி, கடந்த புதன்கிழமை காலை ஏலம் ஆரம்பமானது. நேற்று மாலை 5 மணி வரை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களும், வைர வியாபாரிகளும் கலந்து கொண்டனர்.
மோடி பதவியேற்ற பின் கடந்த 7 மாதங்களில் அவருக்கு வந்த 455 பரிசுப் பொருட்களும் ஏலத்துக்கு வந்தன. நேற்று மாலை வரை 1 கோடி வரையே ஏலம் சென்றிருந்த இந்த கோட், மாலைக்கு மேல் திடீரென, படிப்படியாக 2. 08 கோடி, 2.51 கோடி என்று உயர்ந்து கடைசியாக 4.31 கோடிக்கு ஏலம் நிறைவடைந்தது.
சூரத்தில் ‘தர்மானந்தா வைர நிறுவனம்’ நடத்தி வரும் தொழிலதிபர் லால்ஜி படேல் என்பவரும் அவருடைய மகன் ஹிதேஷ் படேல் இரு வரும் சேர்ந்து ரூ.4.31 கோடிக்கு அந்த உடையை ஏலம் எடுத்தனர்.
மோடி கோட்டை ஏலம் வாங்கிய லால்ஜி படேல் தெரிவித்ததாவது,
”நான் மோடியின் பெரிய ஃபேன்.”
“இந்த உடையை வாங்க பலரும் ஆர்வம் காட்டினர்.”
“காசு ஒரு விஷயமே இல்லை.”
”5 கோடியாக இருந்தாலும் நான் வாங்கி இருப்பேன்.”
“ஏனென்றால், இந்தப் பணம் கங்கை நதியை தூய்மைப் படுத்த செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், எல்லோரும் நல்ல எண்ணத்துடன் ஏலத்தை அதிகரித்து கேட்டனர்.”
”நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.”
“அதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்துவிட்டது.”
“ஆனால், மோடி அணிந்த கோட் எனக்குக் கிடைக்கும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை ’’
“இதை என், அலுவலகத்தில், கண்ணாடி அலமாரியில் வைத்து விடுவேன்.” என்று கூறினார்.
இந்த ஏலத்தில் கடைசி நிமிடத்தில், 5 கோடி கொடுத்து வாங்கவும் தொழிலதிபர்கள் முன்வந்தனராம். ஆனால், 5 மணி ஆகிவிட்டதால், ஏலத்தை முடிக்க வேண்டி ஆகிவிட்டதாம்.

No comments:
Post a Comment