Tuesday, 24 February 2015

ஆஸ்கரில் 4 விருதா..? அப்படி என்ன இருக்கிறது ”Birdman” படத்தில்..!


சிறந்த படம், சிறந்த சுய கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்குநர் என நான்கு பிரிவுகளிலும் ஆஸ்கர் விருதை தட்டிச்சென்று எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திய படம் பேர்ட்மேன்.
ரிக்கன் தாம்சன் ஒரு முன்னாள் சூப்பர் ஹீரோ நடிகர். பேர்ட்மேனாக (Birdman) மூன்று படங்களில் நடித்தவர் 4 ஆவது படம் எடுக்க நினைத்தபோது வெறுத்து அந்த வேடத்தை ஒதுக்கியவர்.
ஆனால் அதன் பிறகு தன்னை ஒரு நல்ல நடிகனாக வெளிக்காட்ட வேறு கதாப்பாத்திரம் எதுவும் கிடைக்காமல் சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு ஒரு பழைய பிரபல சிறுகதையை தானே மேடை நாடகமாக எழுதி, தயாரித்து, அதில் நடிக்கவும் செய்கிறார். அந்த மேடை நாடகம் பல முன்னோட்டங்களைத் தாண்டி மக்கள் பார்வைக்கு வரும் தருணம் வரைக்கும் தாம்ஸன் கதைதான் பேர்ட்மேன்.
கதை சாதாரணமாகத் தெரிந்தாலும் அதை அசாதாரணமாக்குவது ஒளிப்பதிவு. மொத்தப் படத்தையும் ஒரே ஷாட் இல் (single shot ) எடுத்திருப்பதைப் போலக் காட்டியிருக்கிறார்கள். Steadycam, Handheld shots கலவையில் பல நீண்ட ஷாட்களை ஒன்றிணத்து ஒளிப்பதிவு, லைட்டிங், படத்தொகுப்பு, கலர் கரெக்‌ஷன் உதவியுடன் ஒரே ஷாட்டாக அதைக் காட்டி நிகரற்ற ஒரு படத்தை வழங்கி அதை “Mastery of Art” என்று சொல்ல வைத்திருக்கிறார்கள். அலிஜண்ட்ரோ இயக்கத்தில் மைக்கேல் கீட்டன் நடிப்பில் 'பிளாக் காமெடி’ வகை படமாக மிரட்டுகிறது படம்.
படத்தின் இயக்குநர் அலிஜண்ட்ரோ (Alejandro) ஏற்கனவே ‘Death Trilogy’ படங்களான Amores perros (2000), 21 Grams (2003), Babel (2006) மூலம் பரிச்சயமானவர்தான். இவரது நான்காவது படமான Biutiful (2010) படமும் ஏகவரவேற்பைப் பெற்ற படம் தான். ஐந்தாவது படம் பேர்ட்மேன். ஏற்கனவே 7 பிரிவுகளில் கோல்டன் குளோப் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 2 விருதுகளை வென்றிருக்கிறது, 9 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு 4 ஆஸ்கர் விருதையும் பெற்றிருக்கிறது.
படத்தின் ஒளிப்பதிவாளர் இமானுல் லுபெஸ்கி (Emmanuel Lubezki) ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டி இருக்கிறார். ஏற்கனவே 7 முறை nominate செய்யப்பட்டு சென்ற ஆண்டு ‘Gravity’ படத்திற்காக தனது முதல் ஆஸ்காரை வென்ற இவர் இந்த ஆண்டும் பேர்ட்மேன் படத்திற்காக ஆஸ்கரை விருதை கையில் ஏந்திருக்கிறார்.
கதைப்பற்றி:
கதையின் முக்கியக் கதாபாத்திரங்கள் இரண்டு. ஒன்று... ரிக்கன்; இன்னொன்று ரிக்கனின் மனசாட்சி. ரிக்கன் நடித்த 'பேர்ட் மேன்’ பட கதாபாத்திரம்தான் அவருடைய மனசாட்சி. நிஜத்தில் ரிக்கன் உளவியல்ரீதியான பிரச்னையில் சிக்கித் தவிக்கிறார். அதாவது தன்னால் அந்தரத்தில் மிதக்க முடியும், விரலை அசைத்து பொருட்களை நகர்த்த முடியும் என நம்புகிறார்.
இதில் அவரின் மனசாட்சியான பேர்ட் மேன், 'ஹேய் உன்னை மக்கள் இன்னும் மறக்கல.. நீ மறுபடி பேர்ட் மேனா நடி’ என நச்சரிக்கிறது. இதோடு இன்னொரு பிரச்னையும் சேர்ந்துகொள்கிறது. ரிக்கன் நடத்தும் நாடகத்தில் நடிக்க வருகிறார் மைக் என்கிற புகழ்பெற்ற நாடக நடிகர்.
ரிக்கனுக்குக் கிடைத்து வந்த கொஞ்ச நஞ்ச பாராட்டுக்களையும் தன் பக்கம் திருப்பிக்கொள்கிறார் மைக். ஒரு சினிமா நடிகராகத் தோற்று, இப்போது நாடக நடிகராகவும் தோற்றுப்போன ரிக்கன் என்ன செய்கிறார் என்பது செம எமோஷனல் கதை.
படத்தில் ரிக்கனாக நடித்திருக்கும் மைக்கேல் கீட்டன் நடிப்பு அசத்தல். படத்தில் ஒரு காட்சி. ரிக்கன் சில நிமிடங்களில் மேடையில் இருக்க வேண்டும். நாடக அரங்கத்தின் பின்பக்க வாயிலில் இருந்து கீட்டன் பதற்றமாக வெளியே வரும்போது எதிர்பாராதவிதமாக கதவு சாத்திக்கொள்கிறது. அதில் அவரது கோட் மாட்டிக்கொள்கிறது. எவ்வளவு முயன்றும் அதை எடுக்க முடியவில்லை.
நாடகம் தொடங்க இன்னும் சில நிமிடங்களே உள்ளன. எனவே, கோட்டைக் கழட்டிப் போட்டுவிட்டு உள்ளாடையுடன் ஓடுகிறார். அந்தப் பரபரப்பிலும் அவரிடம் ஒருவன் ஆட்டோகிராப் கேட்க, அவர் ஓடிக்கொண்டே ஆட்டோகிராப் போடுவது... கண்கலங்க வைக்கும் காமெடி.
மிகச் சிறந்த கலைஞர்கள் ஒன்று சேர்ந்து மிகக் கடினமான ஒரு காமெடி படத்தை (Black Comedy) எடுத்திருக்கிறார்கள். அவர்களது உழைப்பு வீண் போகவில்லை என்பது படம் வாங்கிக் குவித்துக்கொண்டிருக்கும் விருதுகளின் மூலம் தெளிவாகிறது. சென்ற ஆண்டு வெளியான மிகச் சிறந்த படங்களில் பேர்ட்மேன் படமும் ஒன்று என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

No comments:

Post a Comment