ஜெயலலிதா என்பதை விட ‘அம்மா’ என்ற பெயரிலேயே இவரை பலரும் அழைக்கின்றனர். இன்று ஜெயலலிதாவின் 67வது பிறந்த நாள் விழா. கடந்த 2011ம் ஆண்டு தமிழக சட்ட மன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, தமிழகத்தின் 16வது முதல்வராகப் பொறுப்பேற்றார்.
ஆனால் சென்ற ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி நீதிமன்றத்தில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டதால் பதவியிலிருந்து விலகினார். முன்னாள் முதல்வரான இவருக்கு தமிழகமெங்கும், ஆயிரக்கணக்கான தொண்டர்கள்.
அனைவரும் ஜெயலலிதா மீது அதீத அன்பு கொண்டவர்கள். அவரது பிறந்த நாளான இன்று, ஜெயலலிதா நீண்ட ஆயுள் பெற வேண்டும் என்றும் அவர் மீண்டும் முதல்வராக வேண்டும் என்றும், தீச்சட்டி எடுப்பது, காவடி தூக்குவது, அங்கபிரதட்சணம் செய்வது என்று வேண்டுதல்களை செய்து வருகின்றனர் இவரது தொண்டர்கள்.
இவரை நம்பி இருக்கும் இவ்வளவு மக்களுக்கு என்ன செய்திருக்கிறார். ஏன் இவருக்கு தமிழகத்தில் இவ்வளவு முக்கியத் துவம்.
வேதளவள்ளி
கர்நாடக மாநிலம் மேல்கோட்டையைச் சேர்ந்த ஜெயராம் - வேதவள்ளி என்ற தம்பதிக்கு 1948ம் ஆண்டு இதே நாளன்று பிறந்தார். இவரது இயற்பெயர், வேதவள்ளி. இவரது 2 வயதிலேயே இவரது தந்தை மரணமடைந்தார்.
பின்னர் பெங்களூரில், ஜெயலலிதா பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில் படித்தார். இதைத் தொடர்ந்து, சென்னைக்கு வந்து, சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் படித்து மெட்ரிக் தேறினார்.
படிப்பா படமா…?? படிப்பை முடித்த உடன் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படிக்க அனுமதி கிடைத்த அதே நேரத்தில் திரைப்படத்தில் நடிக்கவும் வாய்பு கிடைத்தது. இந்நிலையில், நடிப்பை தேர்தெடுத்தார்.
இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய ‘வெண்ணிற ஆடை’ என்கிற படம் தான் இவர் நடித்த முதல் படம். திரையுலகில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் மொத்தம் 127 திரைப்படங்கள் நடித்துள்ளார்.
அப்போதைய முன்னணி நடிகர்களான, சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், ரவிசந்திரன், சிவகுமார், ஏவி. எம்.ராஜன், என். டி. ராமராவ், நாகேஸ்வரராவ், தர்மேந்திரா, எம்.ஜி.ஆர்., போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். எம்.ஜி.ஆருடன் மட்டும் 28 படங்களில் நடித்துள்ளார்.
அரசியல் வாரிசு
எம்.ஜி.ஆர்., உடன் நெருக்கமாக இருந்த இவர், அவரைப் பின்பற்றி, 1981ல் அ. தி. மு. க. வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார்.
தொடர்ந்து, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப் பட்டார். 1984ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினரான இவருக்கு 185வது இருக்கை அளிக்கப்பட்டது. இது பல காலத்திற்கு முன்னர் அறிஞர் அண்ணா (முன்னாள் தமிழக முதல்வர் கா. ந. அண்ணாதுரை) அமர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எம். ஜி. இராமச்சந்திரனின் மறைவுக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து 1989ம் அண்டு, அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார். தலைமை பொறுப்பேற்றதுமே தமிழக சட்டப் பேரவையில் எதிர்கட்சித் தலைவராக பணியாற்றினார்.
இதை அடுத்து 1991ம் ஆண்டு, ஜூன் 24ம் தேதி, தமிழகத்தின் 11 வது முதல்வராகப் பதவியேற்றார். தொடர்ந்து, மே 14ம் தேதி, 2001ம் ஆண்டு பதவியேற்றார். ஆனால் அதே ஆண்டே அவரது அரசு முடக்கப்பட்டு அடுத்த ஆண்டு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது.
2002ம் ஆண்டு தேர்தலிலும், அதை அடுத்து வந்த 2006ம் ஆண்டு தேர்தலிலும், இவர் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வரானார். கடைசியாக 2011ம் ஆண்டு தேர்தலில் முதல்வரான இவர், கடந்த 2014ம் ஆண்டு வழங்கப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு தீர்பால் செப்டம்பர் 27ம் தேதி, 2014ம் ஆண்டு முதல்வர் பதவியையும், சட்ட மன்ற உறுப்பினர் பதவியையும் இழந்தார்.
இந்த தீர்ப்பில் இவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இவர் செய்தது
தமிழக முதல்வராக இவர் செய்த சாதனைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று காவிரி மேலான்மைத் திட்டம். இதை அடுத்து, இந்த முறை இவர் வெற்றி பெற்றதும் செய்த தேர்தல் வாக்குறுதிகளைக் கூறலாம்.
இதில் குறிப்பிடத்தகுந்தவை, அம்மா உணவகங்கள். இலவச மடிக்கணிணி திட்டம், எதிர்கட்சியினரின் திட்டங்களை தழுவியதாக இருந்தாலும், மாணவர்களுக்கு ஒரு வகையில் பயன்படக்கூடிய ஒன்றாக அமைந்துள்ளது.
இவருக்குக் கிடைத்தது
இவருக்கு நடிப்பிற்காக மட்டும் இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்று தமிழக சார்பில் கலைமாமணி விருது(1972). அடுத்தது, தெலுங்கு திரைப்படங்களுக்காக ஆந்திர மாநிலத்தின் மாநில விருது.
சென்னை பல்கலைக் கழகத்தால் 1991ம் ஆண்டு, டிசம்பர் 19ம் தேதி முனைவர் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. மேலும், உக்ரைன் சார்பில், பன்னாட்டு மனித உரிமைகளுக்கான “தங்க மங்கை விருது” இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
வழக்குகள்
ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு உட்பட மொத்தம் 8 வழக்குகல் இருக்கின்றன. இதில், வருமான வரி வழக்கு அண்மையில் தான் சமரசத்தில் முடிந்தது. 18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு இவரது பதவி பறிபோனது.
இந்த தீர்புக்கு எதிரான மேல் முறையீடு, கர்நாடக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த மேல்முறையீடு எதிராக அமைந்தால் இவர் அரசியலில் 10 ஆண்டுகளுக்கு வரவே முடியாது.
இந்த மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு தான் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்கையில் ஒரு பெரும் திருப்பு முனையாக அமையும்.
இது மட்டுமல்ல, செப்டம்பர் மாதமே இவருக்கு சோதனை காலம் தான் போல. ஏனெனில், கடந்த 2001ம் ஆண்டு இவரது ஆட்சி கலைக்கப்பட்டதும் 21ம் தேதி செப்டம்பர் மாதம் தான்.
இவரது சாதனை என்றுச் சொன்னால், ஒரு தனி ஆளாக கட்சி முழுவதையும், கட்டுக் குள் வைத்திருப்பது. இன்றும், தமிழகத்தின் முதல்வர் பன்னீர் செல்வமாக இருந்தாலும், ஜெயலலிதாவின் ஆலோசனைப் படியே தமிழக ஆட்சி நடைபெறுவது அனைவரும் அறிந்த ஒன்று.
இதிலும், சக அமைச்சர்களை காலில் விழ வைப்பது போன்ற செயல்களுக்காக அதிகார பலத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்று இவர் விமர்சனங்களுக்குள்ளாகிறார்.
இதனால், இவரது தனியாட்சி திறமையின் ஒரு பகுதியான அதிகார பலமே இவருக்கு சோதனையாகவும் இருக்கிறது என்று கூறலாம். இதற்கு அடுத்தது, தமிழகத்தில், அ.தி.மு.க.,வின் பலம்.
தமிழகத்தில், எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய செல்வாக்கு இருந்தது. எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு என்பதால் இந்த செல்வாக்கின் பெரும்பகுதி இவருக்கு வந்து சேர்ந்தது.
இந்த செல்வாக்கின் பயனாக, இவரது அ.தி.மு.க., கட்சி பெரும் பலம் வாய்ந்ததாக உருவெடுத்தது. இந்த பலம் இவருக்கு இந்திய அளவில் மிகப் பெரிய கட்சி என்ற பெயரையும் பெற்றுத் தந்தது.
இந்தியா அளவில் காங்கிரசுக்கு அடுத்த பெரிய கட்சியாக அ.தி.மு.க., விளங்கியது. இந்த சாதனையும் இவருக்கு சோதனையாகவே முடிந்தது. காங்கிரசு கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ந்து வரும் இந்நிலையில், அடுத்த பெரிய கட்சி அ.தி.மு.க.
இதனால், ஜெ.,வின் வழக்கு தீர்ப்பின் பின்னணியில் மோடியின் நடவடிக்கை இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
No comments:
Post a Comment