தற்காலத்தில் மிகஅதிகப் பயன்பாட்டில் இருக்கும் கைபேசிகள் ஒட்டுமொத்தமாகச் செயலிழந்துவிட்டால் என்னவாகும்? என்கிற கற்பனையிலிருந்து இந்தப்படத்துக்கான திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.
படத்தில் திடீரென ஒரு காந்தப்புயல் ஏற்படுவதன் காரணமாக கைபேசிகள் வேலை செய்வதில்லை. அந்தச்சிக்கலை நாயகன் நகுல் எப்படிச் சரி செய்கிறார்? இன்னொரு நாயகன் அட்டகத்தி தினேஷ், பிந்துமாதவி காதலில் என்னமாதிரியான சிக்கல் ஏற்படுகிறது? ஒரு கொடிய நாசவேலையின் காரணமாக நடக்கவிருந்த அழிவு தடுத்துநிறுத்தப்படுவது ஆகிய மூன்றுநிகழ்வுகளை வைத்து படத்தை சுவையாகக் கொடுக்க நினைத்திருக்கிறார் புதுஇயக்குநர் ராம்பிரகாங்ஷராயப்பா.
சாதாரண நடுத்தரக்குடும்பத்து இளைஞனான நகுல் ஓர் இளம்விஞ்ஞானியாக இருக்கிறார். அவர் ஓட்டுகிற வாகனம் வினோதமாக இருக்கிறது. அது சூரியஒளியில் இயங்குகிற வாகனம் என்று சொல்லிவிடுகிறார்கள். அது உட்பட நகுல் வீட்டில் இருக்கும் விளையாட்டுப்பொருட்கள் மற்றும் அவருடைய நடவடிக்கைகள் எல்லாம் உண்மையில் இப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என்கிற வகையைச் சேர்ந்தவை. தன்னுடைய வழக்கமான துறுதுறுப்புகளை மொத்தமாக ஓரங்கட்டிவிட்டு அமைதியாக நடித்திருக்கிறார் நகுல்.
சிலஇடங்களில் அது பலமாகவும் பல இடங்களில் பொருத்தமற்றும் இருக்கிறது. அவருடைய அம்மாவாக நடித்திருக்கும் ஊர்வசி அறிவியல் விசயங்களைப் பேசுகிறபோது ரசிக்கலாம். அவரும் உருளைக்கிழங்கை வைத்து கடிகாரம் செய்யும் அளவுக்கு விஞ்ஞானியாக இருக்கிறார். பொறியியல் படிக்கிற மாணவர்களுக்கு எல்லாம் புதியகண்டுபிடிப்புகள் பற்றியும் அவற்றின் செய்முறைகள் பற்றியும் எழுதிக்கொடுக்கிறார் நகுல்.
நாயகி ஐஸ்வர்யாதத்தாவுக்கும் அப்படி அவர் எழுதிக்கொடுப்பதில் ஒரு சிக்கல். அதன்விளைவாக அவர்களுக்குள் காதல். உங்களைக் காதலிக்கிறேன் என்று நகுலிடம் ஐஸ்வர்யாதத்தா, சொல்லும்போது பின்னணியில் வயலின்கள், மலரும் பூக்கள் ஒளிரும் விளக்குகள் என்று எதுவுமின்றி, அப்படியா நானும் சும்மாதான் இருக்கிறேன் காதலிக்கலாம் என்று மிகஎளிதாகச் சொல்லிவிடுகிறார் நகுல். புதுவரவான ஐஸ்வர்யாதத்தா எளிமையான அழகுடன் இருக்கிறார். நடிப்பும் வருகிறது.
வீடுகளை வாங்கிக்கொடுக்கும் தரகரா அல்லது வீடுகட்டி விற்கிற முதலாளியா என்று குழப்பமடைகிற அளவு இன்னொருநாயகன் அட்டகத்தி தினேஷின் வேடம் இருக்கிறது. குக்கூ படத்தின் பார்வையற்றவர் உடல்மொழி இந்தப்படத்திலும் இருப்பது பலவீனம். அவருக்கு பிந்துமாதவியைப் பார்த்தவுடன் காதல், சட்டுனு என்ன சாச்சுப்புட்டா யாரு அந்தப்பொண்ணு என்று பாடுகிறார். அந்தப்பாடல் நன்றாக இருக்கிறது. இன்னும் கொஞ்சகாலத்துக்கு தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிபரப்பாகலாம்.
படத்தின் பெரியபலமாக இருப்பவர் பிந்துமாதவிதான். ஒரு வங்கியில் வேலை செய்துகொண்டே தற்கொலைக்கு முயல்பவர்களுக்கு ஆறுதலளிக்கும் நிறுவனத்திலும் சேவை செய்யும் வேடம் அவருக்கு. தினேஷுக்கும் அவருக்கும் காதல் உருவாகும் விதம் பழையதென்றாலும் அது தொடரும் விதம் புதியது. திட்டுதவற்காகத் தேடிப்போகிறார் என்பதை நம்பமுடியாவிட்டாலும் நன்றாக இருக்கிறது. அவருடைய முன்கதை கண்கலங்க வைப்பதோடு அவருடைய வேடத்துக்கு வலுச்சேர்க்கும் விதமாகவும் இருக்கிறது.
தீவிரவாதி என்பவன் மக்கள்கூடும் பொதுஇடங்ளில் குண்டுவைப்பான் என்று சொல்லிவிட்டால் அதை ஏனென்று கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளும் மனநிலைக்கு மக்களைக் கொண்டு வந்துவிட்டார்கள். இந்தப்படத்திலும் ஒரு தீவிரவாதி குண்டுவைத்து மக்களைக் கொல்ல முயல்கிறார். கைபேசி செயல் இழப்பதால் அது முடியாமல் போகிறது. நகுலின் முயற்சியால் கைபேசிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டால், குண்டுவெடித்துவிடும் என்கிற பதட்டத்தைப் பார்வையாளர்களுக்குக் கொடுக்க முயன்றிருக்கிறார்கள்.
வாடகைவண்டி ஓட்டுபவராக நடித்திருக்கும் சதிஷ், அங்கங்கே சிரிக்கவைக்கிறார். அவருக்கு ஒரு காதலி, அந்தக்காதலிக்குப் பல நண்பர்கள் என்பதுதான் சிரிப்புக்குரிய விசயங்கள். சதிஷின் கைபேசியைத் திருடிவிடுகிற அஜய் என்பவருடைய வேடமும் நடிப்பும் நன்று. விளையாட்டாக வெடிகுண்டு வைக்கப்போய்விட்டு, குழந்தைகள் இருக்கின்றன, கல்லூரிமாணவிகள் இருக்கிறார்கள் என்று பதறுவது நன்றாக இருக்கிறது.
தமனின் இசையில் பாடல்கள் கேட்கிற மாதிரு இருக்கின்றன. பின்னணிஇசையில் அவர் இன்னும் முன்னேற வேண்டும். அறிவியல் தொழில்நுட்பங்கள் மக்களின் அன்றாடவாழ்வில் இரண்டறக்கலந்துவிட்டதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் பல்வேறு விதமான மனிதகுணநலன்கள் ஆகியவற்றை இந்தப்படத்தின் மூலம் இயக்குநர் சொல்ல விழைந்திருக்கிறார் என்று எடுத்துக்கொண்டால் அதில் பாதிக்கிணறுதான் தாண்டியிருக்கிறார்.

No comments:
Post a Comment