தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்த ஜேம்ஸ் வசந்தன் ’சுப்பிரமணிபுரம்’ படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். அதைதொடர்ந்து நாணயம், யாதுமாகி, காவலர் குடியிருப்பு, விழா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார்.
இதுவரை இசையமைப்பாளராக வலம் வந்தவர் ‘வானவில் வாழ்க்கை' படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தின் இசையமைப்பாளரும் அவரே. கல்லூரி மாணவர்கள் இடையே நடக்கும் கலை நிகழ்ச்சிகளை மையமாக கொண்டதுதான் படத்தின் கதை.
முழுக்க முழுக்க புதுமுக நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்தில் நடிகர்களே பாடல்களையும் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாடகி செளம்யா இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். படத்தில் மொத்தம் 17 பாடல்கள் இடம் பெறுகிறதாம். அதில் ஒரு பாடலை யுகபாரதியும், மற்ற பாடல்களை ஜேம்ஸ் வசந்தனும் எழுதியிருக்கிறார்கள்.
பொதுவாக ஒரு படத்தில் மூன்று, நான்கு பாடல்கள் இருந்தாலே முகத்தை சுழிப்பார்கள் ரசிகர்கள். ஆனால் இந்த படத்தில் அதை விட டபுள் மடங்காக 17 பாடல்கள் இடம்பெறுவதாக கூறுகின்றனர்.
இது குறித்து ஜேம்ஸ் வசந்தனிடம் கேட்டால், இந்த படமே மியூசிக்கல் படம் தான். படத்திற்கு தேவை என்பதால் தான் இத்தனை பாடல்கள் வைத்திருக்கிறோம் என்றார். அவர் கூறுவது நியாயம் தான் என்றாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா..? என்பதுதான் கேள்வி.
காதலர் தின ஸ்பெஷலாக கடந்த 13ஆம் தேதியே ரிலீஸாகும் என கூறப்பட்ட இப்படம் ஒரு சில காரணங்களால் இம்மாதம் 20ஆம் தேதி அதாவது நாளை ரிலீஸாகும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் ஒருமுறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு மார்ச் 13ஆம் தேதி ரிலீஸாகும் என கூறப்படுகிறது.

No comments:
Post a Comment