சீனர்களுக்கு இன்று புத்தாண்டு. ‘கொங் சீ ப சாய்’ சீனர்களே. அப்படி என்றால் என்னவென்றுதானே கேட்கின்றீர்கள்??
’கொங் சீ ப சாய்’ என்றால் சீன புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று அர்த்தம். பொதுவாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறை இருக்கும் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். நாம் பொதுவாக தமிழ் புத்தாண்டை ஒரே ஒரு நாள் கொண்டாடத்துடன் முடித்துக் கொள்வோம். அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள், கிறிஸ்த்துமஸை தொடர்ந்து அடுத்த நாள் முதல் புத்தாண்டு தினம் வரை உள்ள நாட்களை ‘நியூ இயர் ஈவ்’ என்று கொண்டாடுவார்கள். ஆனால் சீனர்களுக்கு மட்டும் 15 நாட்களாம்.
அதாவது, இன்று தொடங்கி 15 நாட்கள் புத்தாண்டு கொண்ட்டாட்டங்கள். சீனர்கள் தங்களின் புத்தாண்டுக்கு ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு விலங்கை சிறப்பாக வைத்து ஆண்டிற்கும் அந்த விலங்கின் பெயரையே வைப்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு ’ஆடு’ தான் சிறப்பு விலங்கு. லூனார் காலெண்டர் படி இவர்கள் கொண்டாடும் பதினைந்து நாள் கொண்டாடத்தின் சிறப்புகள் என்ன என்பதைக் காணலாம்.
முதல் நாள்:
எல்லாரும் கண்டிப்பாகப் புத்தாடை அணிய வேண்டும். சொர்க்கத்திலிருக்கும் கடவுளர்களைப் பூமிக்கு அழைத்து, அனைத்து நன்மைகளையும் வேண்டிப் பெறுவதற்காக வழிபாடு செய்கிறார்கள். இந்நாளில் அவர்கள் சைவ உணவையே உண்கின்றனர். வீட்டில் உள்ள பெரியோர்களிடத்தில் மன்னிப்பும் ஆசியும் பெற்றுக்கொள்கின்றனர்.
இரண்டாம் நாள்:
மருமகளாக வந்தவர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று தங்களுடைய பெற்றோருக்கும் தங்கள் குடும்பத்தில் இறந்துபோன முன்னோர்களுக்கும் வணக்கம் செய்கின்றனர்.
மூன்றாம், நான்காம் நாட்களில் மருமகன்களாக வந்தவர்கள் தங்கள் மாமனார் மாமியாருக்கு மரியாதை செய்கின்றனர்.
ஐந்தாம் நாள்:
செல்வத்தை அள்ளிக்கொடுக்கும் கடவுளை வணங்கும் நாள். அன்று யாரும் எவர் வீட்டுக்கும் செல்லமாட்டார்கள். அப்படி சென்றால் விட்டுக்காரர் விருந்தினர் ஆகிய இருவருக்கும் நல்லதல்ல. ஆகவே, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி அவரவர் வீட்டில் ‘செல்வக் கடவுளை’ வரவேற்பார்கள்.
ஏழாம் நாள்:
சீனர்களில் கண்தோனிசு (Kantonis) பிரிவினர் ‘யீ சாங்’ (Yee Sang) எனும் விருந்தில் கலந்துகொள்கின்றனர். பல வண்ணங்களில் இருக்கும் கீரைவகைகளையும் மீன் இறைச்சியையும் சேர்த்து பெரிய தட்டில் வைப்பார்கள். அதைக் (சீனர்கள் உணவு உண்ணப் பயன்படுத்தும்) குச்சிகளைக்கொண்டு கிளறியும் மேலே உயரமாக தூக்கி மீண்டும் தட்டிலேயே கொட்டியும் மகிழ்வார்கள். இப்படி செய்வதால் அவர்களின் வாழ்நாளில் ஓர் ஆண்டு கூடிவிடும் என்கிறார்கள். மேலும், பணமும் செல்வமும் வந்து கொட்டும் என நம்புகிறார்கள்.
ஒன்பதாம் நாள்:
சீனர்களில் ஒக்கியன் (Hokkien) பிரிவினருக்கு மிகவும் முக்கியமமன நாளாகும். அதற்கு முதல்நாள் (அதாவது எட்டாம் நாள்) இரவு ‘செட் மாமன்னர்’ (King Jed) என்னும் கடவுளரை வணங்குகிறார்கள். இந்த வழிபாட்டின்போது வீட்டு வாசலில் கரும்பைக் கட்டவேண்டும் என்பது கட்டாயமாகும். காரணம், முந்தைய காலத்தில் இன்னொரு சீனப் பிரிவு மக்கள் தாக்குதல் நடத்தியபோது, ஓக்கியன் இன மக்களை பேரழிவிலிருந்து காப்பாற்றியது கரும்புதானாம்.
பதினைந்தாம் நாள்:
புத்தாண்டின் நிறைவு நாள். சீனாவின் காதலர் தினமும் இன்றுதான். அன்று ‘தங்யுவன்’ (Tangyuan) என்ற ஒரு விருந்து நடக்கும். இரவில் வீடுகளில் 'தங்லுங்' மெழுகு ஒளியணிகளைத் தொங்க விடுவார்கள். சிறுவர்கள் 'தங்லுங்' ஏந்தி ஊர்வலமாகச் செல்வார்கள்.

No comments:
Post a Comment