ஆட்டோகிராப், திருப்பாச்சி உட்பட ஒரு சில படங்களில் நடித்துவிட்டு அப்படியே கேரள கரையோரம் ஒதுங்கியவர் நடிகை மல்லிகா. அங்கும் ஒரு சில படங்களில் நடித்த மல்லிகாவுக்கு தற்போது தமிழ், மலையாளம் இரண்டிலும் பெரிதாக வாய்ப்புகள் இல்லை. இதனால் திடீரென அவர் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார். அவர் இயக்கப்போகும் படத்தின் பெயர் பழனியிலே கனகம்.
இதில் சினிமா உலகில் நடிகைகளும், துணை நடிகைகளும் படக்குழுவினர்களால் என்னென்ன தொந்தரவுகள் (செக்ஸ் டார்ச்சர் உட்பட) அனுபவிக்கின்றனர் என்பதை வெட்ட வெளிச்சமாக படமாக்கியிருப்பதாக அவர் கூறியுள்ளார். யமுனா தேவி என்ற நடிகைக்கு டூப் போடும் கனகம் என்ற துணை நடிகையின் கதை.
இதில் டூப் போடும் கனகாவாக பாவனா நடிக்கிறார். யமுனாதேவி கேரக்டரில் நடிக்க பல நடிகைகளை அணுகினார் மல்லிகா. வில்லங்கமான கேரக்டராக இருப்பதால் எல்லோரும் மறுத்துவிட மல்லிகாவே அந்த கேரக்டரில் நடிக்கிறார். "பொதுவாகவே தென்னிந்திய சினிமாக்களில் ஆணாதிக்கம் அதிகமா இருக்கிறது.
துணை நடிகைகளுக்கும், வளர்ந்து வரும் நடிகைகளுக்கும் பாலியல் தொந்தரவுகள் மிகவும் அதிகம். அதை மையப்படுத்திதான் இந்தப் படத்தை இயக்குகிறேன். இதில் எனது நேரடி அனுபவங்கள் எதுவும் இல்லை. எல்லாமே நான் கேள்விப்பட்ட, என்னிடம் சொல்லப்பட்ட உண்மை சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதை அமைத்திருக்கிறேன்.
இந்த படத்திற்கு எதிர்ப்பு வரலாம். பிரச்சினைகள் வரலாம் அதை சமாளிக்கவும், சந்திக்கவும் தயாராக இருக்கிறேன்" என்று தைரியமாக சொல்கிறார் மல்லிகா.

No comments:
Post a Comment