பிரான்ஸில் மோதி நொறுங்கிய ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் துணை விமானியான அன்ட்ரீஸ் லுபிட்ஸின் உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 24 ஆம் திகதி ஸ்பெய்னிலிருந்து ஜெர்மனியின் டஸல்ட்டோர்வ் நகருக்குச சென்று கொண்டிருந்த விமானத்தை துணை விமானியான அன்ட்ரீஸ் லுபிட்ஸ் வேண்டுமென்றே பிரான்ஸில் அல்ப்ஸ் மலையில் மோதச் செய்தார் என நம்பப்படுகிறது.
இச்சம்பவத்தில் லுபிட்ஸுடன் மேலும் 149 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் இடம்பெற்ற அல்ப்ஸ் மலைப்பகுதியில் தேடுதல் நடத்திவரும் விசாரணையாளர்கள் இதுவரை 600 உடற்பாகங்களை மீட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஜெர்மனைச் சேர்ந்த 27 வயதான துணைவிமானி அன்ட்ரீஸ் லுபிட்ஸின் உடற்பாகங்களும் அடங்கும். மரபணு பரிசோதனைகள் மூலம், அன்ரீஸ் லுபிட்ஸின் உடல் அடையாளம் காணப்பட்டதாகவும் ஜெர்மனிய தடயவியல் விஞ்ஞானியான மைக்கல் சோகோஸ் தெரிவித்துள்ளார்.
காதலியிடம் விசாரணை
இதேவேளை, அன்ரீஸ் லுபிட்ஸின் காதலியிடம் ஜெர்மன் போலிஸார் விசாரணை நடத்திவருதாக நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்பெண்ணின் பெயரை குறிப்பிட அதிகாரிகள் மறுத்துள்ளனர். எனினும், ஆசிரியையான கெத்தரின் கோல்ட்பாச் எனும் பெண்ணை அன்ரீஸ் லுபிட்ஸ் காதலித்து வந்தார் எனவும் அப்பெண் தற்போது கர்ப்பிணியாக உள்ளார் எனவும் ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜெர்மன்விங்ஸ் விமான விபத்து குறித்து விசாரணைகளுக்காக சிறப்பு ஆணைக்குழு ஒன்றை ஜெர்மன் நியமித்துள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 100 பேர் இந்த ஆணைக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

No comments:
Post a Comment