அமெரிக்காவில் ஓரிகன் மாநிலத்திலுள்ள போர்ட்லண்ட் நகரில் அண்மையில் திரிந்த பிங்க் நிறமான கோழிகள் பலரையும் வியக்க வைத்தன. இந்த அபூர்வ கோழிகள் பற்றிய தகவல்கள் செய்தி ஊடகங்கள், சமூக வலைத்தளங்களிலும் இடம்பெற்றிருந்தன.
அபூர்வமான பிங்க் (Pink) நிறத்தில் இக்கோழிகள் இருப்பதற்கான காரணம் மர்மமாகவே இருந்தது. இந்நிலையில், வெள்ளை நிறமான கோழிகளுக்கு தானே பிங்க் நிறமான சாயத்தை பூசியதாக அக்கோழிகளின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
புரூஸ் வைட்மேன் எனும் இந்த இளைஞர், உணவுகளுக்கு நிறமூட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் சாயங்களை கோழிகளுக்குப் பூசிவிட்டு, அவற்றை போர்ட்லன்ட் நகரில் விட்டதாக கூறியுள்ளார். கடந்த வியாழனன்று அதிகாலை ஒரு மணியளவில் அக்கோழிகளை அவர் நகரில் விட்டுச்சென்றார். பொழுதுவிடிந்தவுடன் உறக்கத்திலிருந்து எழுந்த கோழிகள் நடமாடத் தொடங்கியபோது பலரையும் திகைப்புக்குள்ளாக்கின.
மக்களை புன்னகைக்க வைப்பதற்காக இந்நடவடிக்கையை தான் மேற்கொண்டதாக புருஸ் வைட்மேன் தெரிவித்துள்ளார் மதுபான விடுதியில் பணியாற்றும் இந்த இளைஞர், விமானியாகுவதற்கான பாட நெறியை பயின்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இக்கோழிகளை நிர்க்கதியாக திரியவிட்டமைக்காக 32 டாலர்களை நகரின் மிருக சேவைத் திணைக்களத்துக்கு செலுத்திய பின்னரே அவற்றை புரூஸ் வைட்மேன் மீண்டும் பெற்றுக்கொள்ள முடிந்தது.
No comments:
Post a Comment