பாலிவுட்டின் வசூல் மன்னனாக வலம் வருபவர் நடிகர் சல்மான் கான். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு மும்பை பாந்திராவில் நள்ளிரவில் குடித்துவிட்டு வேகமாக கார் ஓட்டிசென்று பெரும் விபத்தை ஏற்படுத்தினார். இதில் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பான வழக்கு வழக்கு மும்பை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் அரசு தரப்பு தனது இறுதி வாதத்தை இன்று தொடங்கியது. அப்போது விபத்து நடந்தபோது காரை தான் ஓட்டவில்லை, தனது டிரைவர் தான் காரை ஓட்டினார் என்ற சல்மானின் வாக்குமூலத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அரசுத்தரப்பு வழக்கறிஞர் பிரதீப் காரத் தனது வாதத்தில், விபத்து நடைபெற்ற போது காருக்குள் மூன்று பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். 4வது நபர் யாரும் காருக்குள் இருக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
மேலும் கடந்த 12 வருடங்களாக 4வது நபர் காருக்குள் இருந்ததாக தெரிவிக்காமல், தற்போது தெரிவிப்பது ஏன் என அவர் கேள்வியெழுப்பினார். அவரது வாதம் மேலும் தொடரும் என தெரிகிறது. முன்னதாக சல்மான் கான் அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் காரை ஓட்டி வந்ததற்கான போதுமான ஆதாரத்தை போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
எனவே, மரணம் விளைவிக்கும் குற்றம் செய்துள்ள சல்மான் கானுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இவ்வழக்கில் சல்மான் கானின் வாக்குமூலம் கடந்த 27-ம் தேதி பதிவு செய்யப்பட்டது. அதில் காரை தான் ஓட்டவில்லை என்று சல்மான் மறுத்திருந்தார். தனது சகோதரருடன் பாரில் இருந்தது உண்மைதான் என்பதை இன்று ஒப்புக்கொண்ட அவர், நான் மது எதுவும் அருந்தவில்லை.
வெறும் தண்ணீரும் உணவும் மட்டும் தான் சாப்பிட்டேன் என தெரிவித்திருந்தார். இதையடுத்து கடந்த 30-ந் தேதி அவரது கார் டிரைவரான அசோக் சிங்கின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. சல்மான் கான் ஏற்கனவே அளித்த வாக்குமூலத்தை தழுவியே அவரது வாக்குமூலம் அமைந்திருந்தது.
விபத்தின் போது அந்த காரை சல்மான் கான் ஓட்டவில்லை. நான் தான் ஓட்டினேன், அவர் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தார் என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். காரின் டயர் வெடித்ததால் நிலைதடுமாறி விபத்து ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment