Tuesday, 7 April 2015

எல்லாமே சூர்யாவால் நடந்தது.. ஜோதிகா நெகிழ்ச்சி..!


அஜித் நடித்த ‘வாலி’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஜோதிகா. அதற்குப் பிறகு பல படங்களில் நடித்து தமிழின் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். முன்னணி நடிகையாக இருந்தபோதே நடிகர் சூர்யாவைக் காதலித்து கடந்த 2006-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகியவர் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் நடிக்கவில்லை. இந்நிலையில் தற்போது கிட்டத்தட்ட 8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திரையில் தோன்றவிருக்கிறார் நடிகை ஜோதிகா. அவருக்காகவே ஸ்பெஷல் கதையைத் தேர்ந்தெடுத்து, அதை தன் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்திருக்கிறார் சூர்யா.
மஞ்சுவாரியர் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி வெற்றிப்பெற்ற ‘ஹவ் ஓல்டு ஆர் யூ?’ படத்தின் ரீமேக்கான ’36 வயதினிலே’ படத்தில் தான் ஜோதிகா நடித்துள்ளார். இந்த மாதம் திரைக்கு வரவிற்கும் இப்படத்தில் ஜோதிகாவுடன் நடிகர் ரஹ்மான், அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா மற்றும் மகன், மகளுடன் கலந்துகொண்டார். மேலும் நடிகர்கள் சிவகுமார், கார்த்தி, ரகுமான், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், பாலா, பாண்டிராஜ், வெங்கட் பிரபு, ராதாமோகன், தரணி, தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, தனஞ்செயன், நடிகை அபிராமி உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இப்படத்தின் பாடல்களை சூர்யாவின் மகள் தியா வெளியிட, அவருடைய மகன் தேவ் பெற்றுக் கொண்டார். படத்தின் முன்னோட்ட காட்சிகளை நடிகர் கார்த்தி வெளியிட்டார்.
இவ்விழாவில் நடிகை ஜோதிகா பேசும்போது, வீட்டுக்கு வெளியே வந்து நான் இந்தப்படத்தில் நடிப்பதற்கு பெரிய பலமாக இருந்தது என் ப்ரெண்ட்ஸ் என்ற பெண் சக்திகள்தான். அனு, லட்சுமி, தேவி, பூர்ணிமா உள்ளிட்ட சில முக்கியமான தோழிகள் கொடுத்த ஊக்கம்தான் இந்தப்படத்தில் நடிக்க உதவியாக இருந்தது. அத்தை, மாமா இருவரையும் அம்மா, அப்பா என்றுதான் அழைப்பேன். இதுவரைக்கும் ஒரு நாள் கூட ‘இதுமாதிரி பண்ணாதே' என்று கூறியதே இல்லை.
சினிமாவில் இயக்குநர் பிரியதர்ஷன் சார் அறிமுகப்படுத்தினாலும், வஸந்த் சார் வழிநடத்தல் கேரியரை கலர்ஃபுல்லாக்கியது. இந்தப் படத்தில் எல்லா டெக்னீஷியன்கள் உழைப்பும் ரொம்பவே ஸ்பெஷலாக இருந்தது. இசைக்கோர்ப்பின் போது சந்தோஷ் நாராயணன் மனைவி கூடவே இருந்து பார்த்தாங்க.
படப்பிடிப்பின்போது கேமராமேன் திவாகரின் மனைவி உடன் இருந்தாங்க. நல்ல அலைவரிசை கொண்ட ஜோடி. படப்பிடிப்பு முழுக்க பரபரப்பாக ஒரு ஆண் மாதிரியே கேமராமேனுக்கு உதவியாக இருந்ததை எல்லாம் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தோட தயாரிப்பாளர் சூர்யா. அவர்தான் என் உலகம்.
சென்னைக்கு புதிதாக வந்தபோது நான் சந்திந்த முதல் மனிதர். அப்போ இருந்து இப்போ வரைக்கும் எல்லா வகையிலும் ஒரு தூண் மாதிரி இருப்பது அவர்தான். கணவருக்கு நன்றி சொல்லக்கூடாது என்று சொல்வார்கள். அவரை கணவராக அடைந்ததை பெருமையான விஷயமாக கருதுகிறேன்'' என்றார்.
பிறகு ஜோதிகாவின் கணவர் நடிகர் சூர்யா பேசுகையில்… “ரசிகர்களை போல நானும் ஒரு ரசிகனாகி, ஜோதிகாவை மீண்டும் திரையில் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்” என்றார்.

No comments:

Post a Comment