பாலிவுட் நடிகர் அமீர் கானின் தீவிர ரசிகர்களில் தானும் ஒருவர் என சீனாவின் ஹாங்காங்கைச் சேர்ந்த ஹாலிவுட் நட்சத்திரமான ஜாக்கி சான் தெரிவித்துள்ளார். "நான் சில பாலிவுட் திரைப்படங்களை பார்த்துள்ளேன். ஆனால், 3 இடியட்ஸ் படம் என்னை மிகவும் கவர்ந்தது. ஹாங்காங்கில் அப்படம் பெரும் வெற்றி பெற்றது.
அமீர்கான் மிகச் சிறப்பான நடிகர் என எண்ணுகிறேன் என 60 வயதான ஜாக்கி சான் தெரிவித்துள்ளார். இறுதியாக 2013 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு பயணம் செய்திருந்த ஜாக்கி சான், மீண்டும் படப்பிடிப்புக்காக இந்தியாவுக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குங்பூ யோகா எனும் புதிய திரைப்படமொன்றை ஆரம்பிப்பதற்கு தான் திட்டமிட்டுள்ளதாக ஜாக்கி சான் கூறியுள்ளார். பாலிவுட் திரைப்படங்களில் நடிப்பதற்கும் தான் தயார் என ஜாக்கி சான் கூறுகிறார்.
"திரைப்படங்களில் நடிப்பதற்கு அது ஹாலிவுட் திரைப்படமா, பாலிவுட் திரைப்படமாக என்று நான் பார்ப்பதில்லை. மிக முக்கியமான விசயமானது திரைக்கதை. நல்ல திரைக்கதை கிடைத்தால் அதில் நடிப்பதற்கு நான் விரும்புகிறேன்" என ஜாக்கி சான் தெரிவித்துள்ளார். ஹாலிவுட் நட்சத்திரமான சில்வெஸ்டர் ஸ்டாலோனுடன் இணைந்து நடிப்பதற்கு தான் விரும்பியபோதிலும் திரைக்கதை கிடைக்காதமை காரணமாக அது சாத்தியமாகவில்லை என ஜாக்கி சான் கூறியுள்ளார்.
"இருவரும் இணைந்து நடிப்பது குறித்து நான் ஸ்டாலோனுடன் கலந்துரையாடி வருகிறேன். என்றாவது சிறந்த கதை கிடைத்தால் நாம் இருவரும் ஒரே போஸ்டரில் தோன்றுவோம் என நம்புகிறேன்" என அவர் தெரிவித்துள்ளார். சில்வெஸ்டர் ஸ்டாலோன் நடித்து கடந்த வருடம் வெளியான தி எக்ஸ்பெண்டபிள் படத்தில் நடிப்பதற்கு ஜாக்கி சான் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment