மும்பையில் நடைபெற்ற பகவத் கீதை தொடர்பான ஒரு போட்டியில் ஒரு 12 வயது இஸ்லாமிய மாணவி முதல் பரிசை வென்றிருக்கின்றார்.
இஸ்கான் அமைப்பு சார்பில் மும்பையில் பள்ளிகளுக்கிடையேயான பகவத் கீதை எழுத்துப் போட்டி நடைபெற்றது. இதில் மும்பை மற்றும் அதன் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த சுமார் 4,500 மாணவர்கள் பங்கு பெற்றனர். இப்போட்டியில் பகவத் கீதை தொடர்பான 100 கேள்விகள் கேட்கப்பட்டது.
இந்த போட்டியில் மும்பையைச் சேர்ந்த காஸ்மோபாலிட்டன் பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி மரியம் சித்திக் முதலிடம் பெற்றுள்ளார். முதலிடம் பெற்றுள்ள மரியம் சித்திக் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்பது தான் வியக்கத்தக்க விஷயம்.
இது குறித்து அவர் கூறியதாவது, ’இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. அனைத்து மதங்களை பற்றியும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு எப்போதும் உண்டு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அனைத்து சமய நூல்களையும் படிப்பேன். ஒருவர் எல்லா மதத்தையும் மதிப்பவராக இருக்க வேண்டும்.
வாழ்க்கையை பற்றி பல்வேறு விஷயங்களை பகவத் கீதையில் இருந்து அறிந்து கொள்ளலாம் என்பதால், அந்த நூலை ஆர்வத்துடன் படித்தேன். வாழ்வின் பொன்னான விதிகளை இந்த புனித நூல் எனக்கு கற்று கொடுத்தது. உலகில் ஏராளமான மதங்கள் இருக்கலாம். ஆனால், அவை எல்லாவற்றையும் விட மனிதநேயம் தான் மிகப்பெரிய மதம். இதை பகவத் கீதையில் இருந்து நான் கற்றுக் கொண்டேன்.’ என்று கூறினார்.

No comments:
Post a Comment