Thursday, 2 April 2015

நண்பேன்டா - விமர்சனம்…!


உதயநிதிக்கு நயன்தாராரவைப் பார்த்ததும் காதல்வருகிறது. ஒரேநாளில் ஒரு பெண்ணை மூன்றுமுறை பார்த்துவிட்டால் அவள்தான் உனக்கு மனைவி என்று சோதிடர் சொன்னதாக உதயநிதியின் அம்மா சொல்லியிருக்கிறார். அதனால் மீண்டும் இரண்டுமுறை நயன்தாராவைப் பார்த்து அவரையே மனைவியாக்கிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார் உதயநிதி. அதேபோல அவர் பார்த்தும்விடுகிறார். அப்புறம் அவர் பின்னாலேயே போய் காதலிக்க அலைகிறார். முதலில் மறுத்து பின்னர் நயன்தாராவும் காதலிக்கிறார். அவர்கள் காதல் திருமணம்வரை போவதில் சில சிக்கல்கள் எழுகின்றன. அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் படம்.
இந்த மெல்லியகதையை வைத்துக்கொண்டு உதயநிதி, சந்தானம் ஆகியோரின் நகைச்சுவை மற்றும் நயன்தாராவை நம்பிப் படத்தை எடுத்திருக்கிறார் புதுஇயக்குநர் ஜெகதீஷ். முந்தைய படங்களைப் போலவே வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டு நாயகி பின்னால் அலையும் வேடத்தையே இந்தப்படத்திலும் செய்திருக்கிறார் உதயநிதி. மிகஇயல்பாக எல்லாக்காட்சிகளிலும் இருக்கிறார். முந்தைய படங்களைக் காட்டிலும் நன்றாக நடனம் ஆடுகிறார். ஒரேயரு சண்டையும் போட்டிருக்கிறார். நயன்தாரா அவருடைய கையைப் பிடித்ததும் அவர் எதிராளியை அடிக்கும் காட்சி ரசிக்கும்விதமாக இருக்கிறது.
சந்தானத்தின் வேடமும் வழக்கம்போலத்தான். திருச்சியில் ஒரு இரண்டரைநட்சத்திரவிடுதியில் மேலாளர் வேலை. நண்பனிடம் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படுவது உபவேலை. இந்தப்படத்தில் அவருக்கு ஒரு காதல் இருக்கிறது. அதற்கு ஒரு கதை இருக்கிறது என்பதுதான் வித்தியாசம்.
ஊரெல்லாம் உன்னைக்கண்டு வியந்தாரா, உன்னோடு காதல் சொல்லி நயந்தாரா என்கிற பாடலுக்கேற்ப இருக்கிறார் நயன்தாரா. அவர் அறிமுகமாகும் காட்சியிலிருந்து எல்லாக்காட்சிகளிலும் கவனிக்கவைக்கிறார். கொடுத்த வேடத்தை நன்றாகச் செய்திருக்கிறார் என்றாலும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேடத்தில் கனம் இல்லை. அதுவும் சிறைக்குப் போய்விட்டு வந்தது எதனால் என்று அவர் சொல்லும் கதை மிகவும் பலவீனம். அதை மையப்படுத்தியே அடுத்தடுத்துக் காட்சிகள் வருவது மேலும் பலவீனம்.
பாடல்காட்சிகளில் அவர் படைத்திருக்கும் விருந்துக்காகவே இன்னும் சில வருடங்கள் அவரைக் கொண்டாடிக்கொண்டிருப்பார்கள். சந்தானத்தின் காதலியாக நடித்திருக்கிறார் ஷெரின். கொஞ்சம் குண்டாகியிருக்கிறார். ஆனால் அவருடைய கண்களில் இருக்கும் காந்தசக்தி குறையாமல் இருக்கிறது. அவருக்கும் சந்தானத்துக்குமான காதல்காட்சிகளிலும் எவ்வித ஈர்ப்பும் இல்லை. எதிர்பாராத ஒரு நிகழ்வில் சந்தானம் ஷெரின் கல்யாணத்துக்குச் சிக்கல் வந்து தடைபட்டுவிட அதைச் சரிசெய்ய உதயநிதி செய்யும் செயலைப் பார்த்துச் சிரிப்பதா?, நினைத்துச் சிரிப்பதா? என்று புரியவில்லை.
உதயநிதியின் அம்மா அப்பாவாக ஷாயாஜிஷிண்டே, ஸ்ரீரஞ்சனி ஷெரின் அப்பாவாக பட்டிமன்றம் ராஜா, சந்தானம் வேலை செய்யும் விடுதிஉரிமையாளராக சித்ராலட்சுமணன், நயன்தாராவின் வங்கி மேலாளராக மனோபாலா என படத்தில் பல நடிகர்கள் இருந்தாலும் யாரும் சோபிக்கவில்லை. உதயநிதியின் வேடம்தான் முந்தைய படங்களைப் போலவே இருக்கிறதென்றால் அவருடைய பெற்றோரின் வேடமும் முந்தைய படங்களைப் போலவே இருக்கிறது.
நான்கடவுள்ராஜேந்திரன், ராஜசிம்மன் ஆகிய இருவரையும் திருச்சியில் பெரியரவுடிகள் என்று காட்டுகிறார்கள். அவர்களோடு உதயநிதி மோதப்போகிறார் போலும் என்று நினைத்தால் அவர்கள் மோதலில் இவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள். பூங்காவில் நடக்கிற நான்கடவுள்ராஜேந்திரனின் கொலையும் அதற்குப்பிறகான காட்சிகளும் படத்தில் இருக்கும் பெரியதிருப்புமுனை.
ஹாரிஸ்ஜெயராஜ் இசையில் ஊரெல்லாம் உன்னைக்கண்டு வியந்தாரா பாடல் சிறப்பாக அமைந்திருக்கிறது. பின்னணிஇசையில் அளவுக்கு அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்டுவிட்டாரோ என்று தோன்றுகிறது. பாலசுப்பிரமணியெத்தின் ஒளிப்பதிவு படத்தை வண்ணமயமாக்கியிருக்கிறது. பாடல்காட்சிகளில் அவருடைய வேலை சிறப்பு.
நயன்தாரா மேலும் அழகாகத் தெரிவதிலும் அவருடைய பங்கு அதிகமாக இருக்கிறது. பெரியதயாரிப்பு நிறுவனம் உதயநிதி, சந்தானம், நயன்தாரா போன்ற நட்சத்திரங்கள் புகழ்பெற்ற தொழில்நுட்பக்கலைஞர்கள் ஆகியன முதல்படத்திலேயே இயக்குநர் ஏ.ஜெகதிஷிக்கு அமைந்திருக்கிறது.
ஆனால் அதை அவர் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய செய்தி.

No comments:

Post a Comment