Friday, 3 April 2015

இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை…!


இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவனின் வீரம் போற்றுதலுக்குரியது.. மற்றும் பிறர் மனைவி மீது அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான்..
உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். சிறந்த சிவபக்தன். இராமனை விட மேலானவன் இராவணன். இராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், பக்தனாகவும், இராமனுக்கு நேர்எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீய கதாபாத்திரம் ஆவார்.
பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாக இராமாயணம் கூறுகின்றது. வாரியபொல - "வானோடும் களம் இறங்குமிடம்" போன்ற ஊர் பெயர்களும் இலங்கையில் உண்டு என்பது இங்கு குறிக்கத்தக்கது. இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவனாகவும் சித்தரிக்கப்படுகின்றார். அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின்பிற பகுதிகளிலும் வேறுபட்டு காணப்படுகின்றன
இராமாயணத்தில் இராவணன்
இராமாயணத்தில் இராவணன் இராமரின் மனைவியான சீதையைக் கடத்தி சென்றதாகவும், இலங்கையில் சிறைவைத்துத் திருமணம் செய்ய எத்தனித்ததாகவும். இவன் பல பெண்களை பலாத்கரமாக தன் மனைவிகளாக அடைந்ததாகவும் சித்தரித்தனர். மண்டோதரி, வேதவதி, ரம்பா ஆகியோர் இவர் மனைவியர்கள். இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன - நாட்டு நிலைமை பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் இருப்பவர்களைப் பார்த்து இப்படிச் சொல்வது வழக்கம்.
அதாவது இராமன் ஆண்டால் நாடு நன்றாக இருக்கும் என்றும், இராவணன் ஆண்டால் நாடு மோசமாக இருக்கும் என்றும் கர்ண பரம்பரையாக சொல்லிக்கொண்டிருக்கிறோம். உண்மையில், இராமன் ஆட்சி என்று சொல்லப்படுவது, சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த செருப்பின் ஆட்சிதான். அந்த ஆட்சியின்போது இராமனும் சீதையுமே காட்டில் திரிய வேண்டியிருந்தது என்றால், அந்த நாட்டு மக்கள் எங்கெங்கே திரிந்திருப்பார்களோ! வனவாசம் முடிந்து நாடு திரும்பிப் பட்டாபிஷேகம் செய்து கொண்ட பிறகாவது ராமனால் சிறப்பாக ஆட்சி செய்ய முடிந்ததா? இல்லை.... யாரோ எதையோ சொன்னார்கள் என்று மனைவி சீதையை தீக்குளிக்கச் செய்த பெண்ணடிமைத்தனம்தான் அந்த ஆட்சியில் நிலவியது. அதன் பிறகும் அவளைக் காட்டுக்கு அனுப்பிவிட்டான் மகாராசன் இராமன்.
இப்படியெல்லாம் சீதை என்ற பெண் தன்னந்தனியாக திரிய வேண்டியிருந்ததை மனத்தில் வைத்துத்தான் காந்தியும், “நடு இரவில் ஒரு பெண் உடல் நிறைய நகைகளை அணிந்துகொண்டு தன்னந்தனியாக நடக்கும் சூழ்நிலை இந்த நாட்டில் எற்பட்டால் அதுவே இராமராஜ்ஜியம்” என்றார் போலும். இராவணன் ஆட்சி எப்படி நடந்தது? அவன் ஆண்ட இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான நிலையையும், கலைகள் ஒங்கியிருந்த சூழலையும்கம்பன் வர்ணித்திருக்கும் விதத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். நல்லது நடப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சல்காரர்கள் அதைக் கெடுக்க நினைப்பது போல, ஓங்கியுயர்ந்த மாளிகைகளைக் கொண்ட இலங்கையை இராம பக்தனான அனுமன் தன் வாலில் பற்றிய தீக்கொண்டு அழித்ததையும் இராமாயணம் வர்ணிக்கிறது.
எப்படிப் பார்த்தாலும் இராமனின் அயோத்தியைவிட ஆயிரம் மடங்கு உயர்வானதாகவே இருந்திருக்கிறது இராவணன் ஆண்ட இலங்கை. அப்புறம் ஏன், நல்ல ஆட்சியை இராமன் ஆட்சி என்றும் மோசமான ஆட்சியை இராவணன் ஆட்சி என்றும் சொல்கிறோம்? இந்தக் ஆரிய ஆதிக்கத்தின் விளைவால், தமிழ் மகாகவியான கம்பன் ஆரியத்தின் தாசானு தாசனாகி, வால்மீகியையும்மிஞ்சிடும் வகையில் கற்பனைப் பாத்திரங்களான இராமனைத் தெய்வம் என்றும் தமிழ் மன்னனான இராவணனை அரக்கன் என்றும் சித்திரித்து இராமாயணத்தைப் படைத்தான். கவிச்சுவையிலும், பக்தி சொட்டும் தமிழிலும் கம்பன் பின்னி எடுத்திருந்த காரணத்தால் இராமனே நமக்கும்தெய்வமானான். தமிழ் மன்னனான இராவணன் அரக்கன் ஆனான்.
இந்த ஆரியப் பண்பாட்டு படையெடுப்பை விரட்ட வேண்டும், காப்பியங்கள்வழியாகத் தமிழ் மக்களின் மனங்களில் வரையப்பட்டுள்ள இழிவான சித்திரம் அழிக்கப்படவேண்டும் என்பதைத் தமிழ்த்தேச இயக்கங்கள்போர்க்குரலோடு வலியுறுத்த வேண்டும். கம்பராமாயணம் தமிழர்களை இழிவுபடுத்தும் காப்பியமே என்பதை நாவலர் சோமசுந்தர பாரதியாருடனும், அறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களுடனும் மேடையில் வாதிட்டு வென்று காட்டினார் பேரறிஞர் அண்ணா. அடுத்தவன் எழுதியதைக் குற்றம்சொல்லத்தான் தெரியுமா? தமிழனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் உங்களால் ஒரு காப்பியத்தை படைக்க முடியுமா என்ற கேள்விஎழுப்பியவர்களும் அப்போது உண்டு.
அத்தகையவர்களின் வாயை அடைக்கும் விதத்தில் புலவர் குழந்தை அவர்களால் படைக்கப்பட்டதுதான் இராவணகாவியம். வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணன் மீதுசுமத்தப்பட்ட பழியைத் துடைக்கும் மாற்றுக் காப்பியத்தைப் படைத்தார் புலவர் குழந்தை. அவரது படைப்பு, கற்பனைப் பாத்திரமான இராவணனின் பழியை மட்டும் துடைக்கவில்லை. நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமைகளையும் மீட்டெடுத்தது. இலக்கியத்தின் இலக்கு எதுவாக இருக்கவேண்டுமோ அதனை உணர்ந்து செய்யப்பட்டதே இராவண காவியம் எனும் பெருங்காப்பியம்....

No comments:

Post a Comment