சீனாவில் தாடி வைத்திருந்த குற்றத்துக்காக அந்நாட்டு நீதிமன்றமொன்று 6 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஸின்ஜியாங் உய்குர் பிராந்தியத்தின் காஷ்கர் நகரிலுள்ள நீதிமன்றமொன்றே இவ்வாறு தீர்ப்பளித்ததாக உள்ளூர் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை மேற்படி நபரின் மனைவி, தனது முகத்தை மறைக்கும் வகையில், ஆடை அணிந்தமைக்காக இரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தாடி வைத்திருப்பதை ஸின்ஜியாங் அதிகாரிகள் ஊக்குவிப்பதில்லை எனவும் தாடி வைப்பது கடும்போக்கு சிந்தனைகளுடன் தொடர்புபட்டவை என அவர்கள் கருதுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், 38 வயதான நபர் ஒருவருக்கு தாடி வைத்திருப்பதன் மூலம் பிரச்சினைகளை தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் 6 வருட தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நபர், 2010 ஆம் ஆண்டிலிருந்து தாடி வளர்க்க ஆரம்பித்தாரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸின்ஜியாங் உய்குர் பிராந்தியமானது ஒரு சுயாட்சி பிராந்தியமாகும். அங்கு தாடி வளர்ப்பதற்கு எதிராக சுமார் ஒரு வருடகாலமாக அதிகாரிகள் பிரசாரங்களை செய்து வருகின்றனர்.
அத்துடன் பெண்கள் தலையையும் முகத்தையும் மூடாமல் இருப்பதை ஊக்குவிப்பதற்கான பிரசாரத் திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், இவ்வருட ஆரம்பத்திலிருந்து ஸியாங்ஜிங் பிராந்திய மக்கள் பலருக்கு எதிராக தாடி மற்றும் முகத்திரை, புர்கா அணிந்த குற்றச்சாட்டின் பேரில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, தாடி வைத்திருந்தமைக்காக 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை அபத்தமானது என வெளிநாடுகளில் வாழும் உய்குர் மக்களின் அமைப்பான உலக உய்குர் காங்கிரஸ் எனும் அமைப்பு விமர்சித்துள்ளது. "இது உய்குர் மக்கள் எதிர்கொள்ளும் மாதிரி அரசியல் துன்புறுத்தல். இவ் வாறான வழக்கு உலகில் வேறு எந்த நாட்டிலும் இடம்பெறாது என மேற்படி அமைப்பின் பேச்சாளரான தில்ஸாட் ரஸீட் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment