இந்தியாவில் நடைமுறையில் இல்லாத 1,700 சட்டங்கள் ஒழிக்கப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நீதிபதிகள் மாநாட்டில் அறிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர் மோடி, டெல்லியில் நடைபெற்ற நீதிபதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசியதாவது,
’நீதித்துறை பலம் வாய்ந்ததாக ஆகி வருகிறபோது, மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிற வகையில் அது மிகச் சரியானதாகவும் ஆக வேண்டியது அவசியம். சட்டத்தின் அடிப்படையில், அரசியல் சாசனத்தின் அடிப்படையில் எளிதாக தீர்ப்பு சொல்லி விடலாம். ஆனால் கருத்து தூண்டலால் தீர்ப்புகள் கூறுகிறபோது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீதித்துறை புனிதமானதாக, கடவுளுக்கு அடுத்தபடியாகக் கருதப்படுகிறது.
சுய மதிப்பீட்டுக்கு நீதித்துறைக்குள்ளேயே ஒரு வழிமுறை காணப்பட வேண்டும். இது ஒரு கடினமான பணிதான். எங்களை பொறுத்தமட்டில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். மக்கள், எங்களை கவனிக்கிறார்கள். எங்களை மதிப்பிடுகிறார்கள். கிழித்தெறிகிறார்கள். நீங்கள் அந்த வகையில் அதிர்ஷ்டசாலிகள் அல்ல. நீங்கள் ஒருவருக்கு மரண தண்டனை விதித்தாலும், அவர் வெளியே வருகிறார். நான் நீதித்துறையில் நம்பிக்கை வைத்துள்ளேன்.
எனவே விமர்சனங்களுக்கு வாய்ப்பு உள்ளது என்ற நிலையில், அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பங்களிப்பு இல்லாத நிலையில், நீதித்துறைக்குள் சுய மதிப்பீடு செய்துகொள்ள ஒரு வழிமுறை தேவை.
சில நேரங்களில் சட்டங்கள் சரியாக இயற்றப்படுவதில்லை. எனவே அது பல விளக்கங்களுக்கு வழி வகுக்கிறது. சட்டங்களை இயற்றுகிறபோது சிறப்பான கவனம் செலுத்த வேண்டும்.
நடைமுறையில் செயல்பாட்டில் இல்லாத சட்டங்கள் ஒழிக்கப்படும். அந்த வகையில், ரத்து செய்வதற்கான 1,700 சட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. எனது ஆட்சிக்காலத்தில் நாளும் ஒரு சட்டம் வீதம் இவை ஒழிக்கப்பட்டு விடும்.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்கீழ், நீதித்துறையில் பண்பியல் மாற்றம் ஏற்படுவதற்கு தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும். நீதித்துறைக்கு தரமான மனித சக்தியும் தேவை. சட்டம், சட்ட பணிகள் தொடர்பான கூடுதல் கல்வி நிறுவனங்களும் தேவை.
வழக்குகள் தேக்கம், நீதித்துறை ஊழல்கள் பிரச்சினையை கையாள்வதற்கு இந்த நீதிபதிகள் மாநாடு, புதிய அணுகுமுறைகளை கண்டறிந்து கூறும் என்று நம்புகிறேன். சாமானிய மக்களுக்கு நீதி வழங்குவதில் லோக் அதாலத் என்னும் மக்கள் நீதிமன்றங்கள் வலுவான அமைப்பாக திகழ்கிறது. அது இன்னும் வலுப்படுத்தப்பட வேண்டும். இப்போது குடும்பங்கள் வேகமாக பிளவுபட்டுகொண்டிருக்கின்றன. இந்தப் போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதில் குடும்ப நீதிமன்றங்கள் முக்கிய பங்களிப்பு செய்ய வேண்டும்.’ என்று கூறினார்.

No comments:
Post a Comment