பதவி நீக்கம் செய்யப்பட்டவரான முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தொடர்பில் எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையானது மறைமுகமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையாகவே அமைந்திருப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ நேற்று சபையில் குற்றம் சாட்டினார்.
பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டவராவார். அவரது நியமனம் சுதந்திரக்கட்சி உள்ளிட்ட முன்னணியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் அவரது நியமனம் தொடர்பில் அரசியலமைப்புப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
உங்களால் இந்நியமனத்தை சவாலுக்குட்படுத்த முடியுமா என்றும் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விசேட அமர்வின் போது எதிர்க்கட்சியினரால் கொண்டு வரப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவி நீக்கம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் சஜித் பிரேமதாச மேலும் கூறுகையில்; முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயகவை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை ஒன்று இந்த பாராளுமன்றத்துக்கு கொண்டு வரப்படவில்லை என்பது மிகவும் தெளிவானதாகும்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணை பதவி நீக்கத்தை அங்கீகரிக்குமாறே அமைந்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையானது அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்குமாறே அந்த பிரேரணையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கான சாட்சியங்களும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. அரசியலைமைப்புச்சட்டத்தையும் பாராளுமன்றத்தின் விதிகளையும் மீறிய வகையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ செயற்பட்டிருக்கின்றார்.
பாராளுமன்றத்தின் அதிகாரம் மாகாண சபைகளின் அதிகாரம் என அனைத்து அதிகாரங்களும் இருக்கின்றன என்பதால் எதேச்சதிகாரமாக செயற்பட முடியாது. குறைபாடுகள் நிறைந்த பிரேரணையை சர்வாதிகாரத்தைப் பாவித்து செயற்படுத்தப்பட்டுள்ளது.
நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அன்று இதே பாராளுமன்றத்தில் காட்டுச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள்தான் இன்று சட்டம் குறித்தும் சுயாதீனம் குறித்தும் பேசுகின்றனர். இன்றைய பிரதம நீதியரசர் கே.
ஸ்ரீபவன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டவராவார். ஆனாலும் இங்குள்ள சுதந்திரக் கட்சியைப் பிரதானமாக கொண்டுள்ள முன்னணியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட பிரதம நீதியரசருக்கு எதிராக பேசுகின்றனர். அவரது நியமனத்தை விமர்சிக்கவும் செய்கின்றனர்.
எதிர்க்கட்சியினர் தமது தலைவருக்கு சேறு பூசும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளனர். பிரதம நீதியரசர் கே. ஸ்ரீ பவனின் நியமனத்தை முடியுமென்றால் உங்களால் சவாலுக்கு உட்படுத்த முடியுமா என்று எதிர்க்கட்சியினரைக் கேட்கின்றேன்.
பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் நியமிக்கப்பட்டமை முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவி நீக்கப்பட்டமை ஆகியவற்றை கருத்திற் கொண்டு இங்கு எதிர்க்கட்சியினரால் கொண்டு வரப்பட்டுள்ள சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மறைமுகமாக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையாகவே அமைந்துள்ளது.
தேர்தல் காலத்து பிரசாரங்களின் போது மைத்திரிபால சிறிசேனவை புலி என்றனர். அவர் ஜனாதிபதியானால் நாடு பிளவுபடும் என்று கூச்சலிட்டனர். ஆனால் இன்று ஏதேதோ பேசுகின்றனர் என்றார்.

No comments:
Post a Comment