Monday, 23 February 2015

எத்தனை பேருக்கு தெரியும் தமிழ் சினிமாவின் முதல் நகரும் படம் எது, பேசும் படம் எதுனு..?


இன்றைய கால கட்டத்தில் மக்களுக்கு இன்றியமையாத ஒன்றாக விளங்கி வருகிறது சினிமா.. ஏன் பல இளைங்ஞர்களின் கனவாகவும், தொழிலாகவுமே மாறி இருக்கிறது.. அப்படிப்பட்ட சினிமா எப்படி உருவானது என்று எத்தனை பேருக்கு தெரியும்.
முதல் நகரும் படம் எது? முதல் பேசும் படம் எது? என்று ஒரு சிலரிடம் கேட்க ஆரம்பித்தால், அது வரலாறு.. அது பத்தி எங்களுக்கு என்ன.. வாரம் ஒரு படம் ரிலீஸ் ஆச்சா.. போய் தியேட்டர்ல பார்த்தோமா அவ்வளவு தான்.. அதைவிட்டுபுட்டு பேசும் படம் எது, நகரும் படம் எதுனு கேட்டுகிட்டு என்று சளிப்பாக சொல்லுவார்கள்...
சரி அதெல்லாம் நமக்கு எதுக்கு.. நாம் வாரம் ஒரு முறை தியேட்டருக்கு போய் பார்க்கும் சினிமா எப்படி வந்தது என்று சிலவற்றை பார்ப்போம்...
நகரும்படம்:
19 ஆம் நூற்றாண்டு காலத்தில் லூமியர் சகோதரர்களின் கண்டுபிடிப்பான நகரும்படம், இரண்டே ஆண்டுகளில் சென்னைக்கு வந்துவிட்டது. 1897ஆம் ஆண்டு ‘எட்வர்டு’ என்ற ஆங்கிலேயர் சென்னையில் முதல் நகரும்படக்காட்சியை திரையிட்டுக் காட்டினார். ‘விக்டோரியா பப்ளிக் ஹால்’ என்ற அரங்கில் ‘சினிமாஸ்கோப்’ என்று விளம்பரப்படுத்தபட்டு திரையிடப்பட்ட அக்காட்சி, தமிழ்த் திரையில் பல மாறுதல்களை ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்தது.
இவ்வெளியீட்டைத் தொடர்ந்து பல நகரும்படக் காட்சிகள் சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டன. 1900 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு, மவுண்ட் தெருவில் வார்விக் மேஜர் என்னும் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இதன் பெயர் எலெக்ட்ரிக் திரையரங்காகும். மின் விளக்கு மூலம் ஒளிவீசும் வசதியுடன் இருந்ததால் இந்த அரங்கிற்கு அப்பெயர் வழங்கப்பட்டது.
முதல் திரையரங்கு:
1905 இல் திருச்சி ரயில்வேயில் வேலை பார்த்து வந்த சுவாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர், ‘எடிசன் சினிமாட்டோகிராப்’ என்ற திரைப்படம் காண்பிக்கப்படும் நிறுவனத்தை ஆரம்பித்தார். தென்னிந்தியாவின் முதல்அரங்காக இத்திரையரங்கு விளங்கியது. சுவாமிக்கண்ணு வின்சென்ட் பல ஊர்களுக்குச் சென்று ‘இயேசுவின் வாழ்க்கை’ என்ற படத்தை வெளியிட்டார்.
தொடர்ந்து லூமி சகோதரர்கள் தயாரித்த ‘ரயிலின் வருகை’ (ரயில் ஒன்று நிலையத்தில் வந்து நிற்பதுதான் மொத்த படமே. ஆரம்பத்தில் அதைப் பார்த்த மக்கள் ரயில் தம் மீது மோதிவிடும் என்று அலறி அடித்துக் கொண்டு ஓடினராம்) உள்ளிட்ட துண்டுப் படங்களைத் தமிழகம் முழுதும் சுற்றித் திரையிட்டுக் காட்டியிருக்கிறார்.
இவர் தயாரித்த படங்களும் சேர்த்து, மொத்தம் 136 திரைப்படங்கள். பல ஆண்டுகளுக்குப் பின்னர் கோயம்புத்தூரில் ‘ரெயின்போ டாக்கீஸ்’ என்ற அரங்கை அமைத்து, ‘வள்ளிதிருமணம்’ போன்ற படங்களைத் தயாரித்து வெளியிட்டார். நிரந்தரத் திரையரங்குகள் உருவாகாத நேரத்தில் அவரே அதற்கான உபகரணங்களோடு தமிழகம் முழுதும் சுற்றிபடங்களைத் திரையிட்டிருக்கிறார்.
ஆந்திரம், கேரளம், மும்பை, கல்கத்தா, பெஷாவர், இலங்கை உள்ளிட்ட இடங்களிலும் இவர் படங்களைத் திரையிட்டிருக்கிறார். இதற்காக அப்போது வெளிநாட்டில் இருந்த படம் தயாரிக்கும் கம்பெனியிடம் ஒப்பந்தமும் போட்டிருக்கிறார். சினிமா மீது மக்களுக்கு இருந்த ஆர்வம் கண்டு தமிழகம் முழுதும் டெண்ட் திரையரங்குகள் நிறைய உருவாக்கியிருக்கிறார். 1914 ஆம் ஆண்டு சென்னையில் ‘வெங்கையா’ என்பவரால் கட்டப்பட்ட ‘கெயிட்டி’ அரங்கு தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதல் திரையரங்கு.
முதல் தென்னிந்தியத் திரைப்படம்:
இந்த திரையரங்கை அடுத்து சில நிரந்தரத் திரையரங்குகள் கட்டப்பட்டன. 1912 ஆம் ஆண்டிற்கு பின் மும்பையில் தயாரான”ஹரிச்சந்திரா” போன்ற புராணப் படங்களும் சென்னையில் திரையிடப்பட்டன. இத்திரைபடங்கள் பெற்றவரவேற்புகளின் காரணத்தினால் மோட்டார் உதிரிப் பாகங்கள் விற்பனையாளர் ஆர். நடராஜ முதலியார் கீழ்பாக்கத்தில்,”இந்தியா பிலிம் கம்பெனி” என்னும் நிறுவனத்தை நிறுவி, 1916 இல் “கீசக வதம்” என்ற சலனப் படத்தைத் தயாரித்தார்.
தென்னிந்தியாவின் முதல் திரைப்படம் இதுதான். 1916 ஆம் ஆண்டு சென்னையில் துவங்கிய மௌனப் படத் தயாரிப்பைத் தொடர்ந்து மேலும் சில தயாரிப்பாளர்கள் படங்கள் எடுக்க ஆரம்பித்தனர். இதில் முக்கியமானவர் “ஏ.நாராயணன்”. “ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன்” என்ற நிறுவனத்தை நிறுவி, பல வெற்றிப் படங்களைத் தயாரித்து, தென்னிந்தியாவின் திரைப்படத் தொழிலுக்கு முக்கியமான பங்கு வகிப்பவராவார். சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட சலனப்படங்கள் தயாரிக்கப்பட்டன.
இவை, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் விபரண அட்டைகளுடன் தென்னிந்தியாவின் பல நகரங்களிலும் திரையிடப்பட்டன. ஆனால் நாகர்கோயிலில் தயாரான “மார்த்தாண்டவர்மன்” என்ற ஒரு படம் இன்றுவரை பாதுகாத்து வைக்கப்பட்டதாகும். திரைப்படக் காட்சிகள் நிலை கொள்ள ஆரம்பித்ததைக் கண்ட ஆங்கிலேய அரசு இந்த மக்கள் தொடர்பு சாதனத்தைத் தன் கட்டுபாட்டுக்குள் வைக்க தீர்மானித்தது.
தொடர்ந்து இந்திய ஒளிப்பதிவுசட்டத்தின் மூலம் தணிக்கைத் துறையை 1918 ஆம் ஆண்டில் செயல்படுத்தியது. 1927 ஆம் ஆண்டு தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையின் முன்னோடியான “தி மெட்ராஸ் பில்ம் லீக்” நிறுவப்பட்டது. 1939 ஆம் ஆண்டு தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை சென்னையில் நிறுவப்பட்டது. இச்சங்கத்தின் முதல் தலைவராக எஸ். சத்தியமூர்த்தி கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேசும் படம்:
தமிழில் பேசும்படம் தயாரிக்கும் முதல் முயற்சி மும்பையிலுள்ள “சாகர் மூவி டோன்” என்ற நிறுவனத்தால்1931 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. “குறத்திப் பாட்டும் டான்ஸூம்” என்ற நான்கு ரீல்கள் (அடிகள்) கொண்ட குறும்படமே தமிழில் முதன்முதலில் வெளி வந்த பேசும் படம். அதே வருடம் “எச். எம். ரெட்டி’ இயக்கத்தில் முழுநீள தமிழ்ப் படமான “காளிதாஸ்” வெளிவந்தது. முதல் நான்கு ஆண்டுகளில் தமிழ்த் திரைப்படங்கள் மும்பையிலும், கொல்கத்தாவிலுமே தயாரிக்கப்பட்டன.
சென்னையில் ஒலிப்பதிவு தொழில் நுட்ப வசதிகள் அற்ற அவ்வாண்டுகளில் 1934 ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் முதல் பேசும் பட தயாரிப்பு நிறுவனம் நிறுவப்பட்டது. ஒரே காட்சியில் இருவர் தோன்றும் துருவா (1935) திரைப்படத்தில் நவீனத் தொழில்நுட்பம் முதல்முதலாக கையாளப்பட்டது. அத்திரைப்படத்தில் சிவபாக்கியம், ஒரு ராணியாகவும், கைரேகை பார்க்கும் குறத்தியாகவும் ஒரேகாட்சியில் தோன்றியது குறிப்பிடத்தக்கது.
முதல் ஐந்து ஆண்டுகளில் தமிழ்த் தமிழ்ப்படங்கள் புராணக்கதைகளினை மையமாக வைத்து வெளிவந்தன. அதிலும், நிறுவன நாடகங்கள் மூலம் பிரபலமாகி இருந்த இராமாயணம், மகாபாரதத்திலிருந்து எடுக்கப்பட்ட கதைகளே. இக்கால கட்டத்தில்தான் முதல் சமத்துவக் கதையொன்று தயாரிக்கப்பட்டது. 1935 ஆம் ஆண்டு சமத்துவக் கதைகளைக் கொண்ட மூன்று படங்கள் வெளிவந்தன. கௌசல்யா என்ற திகில் படமும் இதையடுத்து, வடுவூர் துரைசாமி அய்யங்காரின் நாவலான மேனகா, டம்பாச்சாரி போன்றவை திரைப்படங்களாகத் தயாரிக்கப்பட்டன.
பின்னர் சமத்துவத் திரைக்கதைகள் கொண்ட திரைப்படங்கள் மற்றும் சில புராணக்கதைகளும் நாடகப்படங்களாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. 1937 இல் வெளியான சிந்தாமணி ஒரே திரையரங்கில் ஒரு ஆண்டுக்கு மேல் ஓடிய முதல் தமிழ்ப்படம் என்ற புதிய சாதனை படைத்தது.
1939 ஆம் ஆண்டு வாஹினி, ஜெமினி நிறுவனங்கள் சென்னையில் அமைக்கப்பட்டன. தொடர்ந்து மேலும் சிலதயாரிப்பாளர்கள் படங்கள் எடுக்க ஆரம்பித்தனர். அதன் விளைவாக இப்போது சினிமா மக்களிடையே இன்றியமையாத ஒன்றாக விளங்கி வருகிறது. இப்போது சினிமா முற்றிலும் மாறுப்பட்டு வேறு ஒரு கோணத்தில் மக்களிடையே ஊடுருவி செல்கிறது.

No comments:

Post a Comment