Monday, 16 February 2015

கொண்டாடும் அ.தி.மு.க.,!! எதிர்கட்சிகளின் ரியாக்ஷன் என்ன…??


தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல், கடந்த 13ம் தேதி நடந்து முடிந்தது. இத்தேர்தலில், மாநில ஆளுங்கட்சியான அ.தி.மு.க., வேட்பாளர் எஸ்.வளர்மதி சுமார் 90 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை அ.தி.மு.க., தொண்டர்கள் ஒரு புறம் உற்சாகமாகக் கொண்டாடி வர, மற்ற கட்சியினர், இந்த வெற்றி குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
பெரும்பாலான கட்சியினர், இந்த வெற்றிக்குக் காரணம் ஆளுங்கட்சி ஆட்சி பலத்தையும், பண பலத்தையும் பயன்படுத்தியதே என்று கூறியுள்ளனர்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்
நேற்று காலை சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதியைச் சந்திக்க அவரது இல்லத்திற்கு மு.க. ஸ்டாலின் சென்றார். இந்த சந்திப்பின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் பணப்பட்டுவாடா பலனளித்துள்ளது" என்று குறிப்பிட்டார்.
தமிழிசை சவுந்தரராஜன்
இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த தமிழக பா.ஜ.க., தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன்,
“ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா செய்து தான், ஆளும் அதிமுக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.”
”ஆகமொத்தம் இது பணபலத்துக்கு கிடைத்த வெற்றி.” என்று கூறியுள்ளார்.
அதே சமயம், இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்யாது புறக்கணித்திருக்கக் கூடாது என்றும், விஜயகாந்த் ஏமாற்றம் அளிக்காமல் இருந்திருந்தால் பா.ஜ.க., இந்த அளவு பின்னடைவைச் சந்தித்து இருகக் கூடாது என்றும் பா.ஜ.க.,வின் வேட்பாளர் எம்.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது சரியான முடிவே என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து ட்விட்டரில் தன் கருத்தை வெளியிட்டுள்ளார்.
டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளதாவது,
"ஸ்ரீரங்கம் தேர்தல் முடிவு: யார் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது. அவர்களே நின்றார்கள்.. அவர்களே நடத்தினார்கள்... அவர்களே வென்றார்கள்!."
ஜி.கே.வாசன்
”ஸ்ரீரங்கம் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த ஒன்று. தேர்தலில் பண பலம், ஆள் பலம், அதிகார பலம் போன்றவை வெற்றி தோல்வியை நிர்ணயிக்காமல், அரசியல் கட்சிகளின் லட்சியங்களும் கொள்கைகளும் வேட்பாளரின் தகுதியும் மட்டுமே வெற்றி தோல்வியை நிர்ணயிக்க வேண்டும்.” என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழருவிமணியன்
காந்திய மக்கள் கட்சியின், தமிழருவி மணியன் கூறியதாவது: இந்த இடைதேர்தல் வகுப்புவாதம் வேரூன்றுவதற்கு தமிழகத்தில் வாய்ப்பே இல்லை என்பது, பாஜகவின் தோல்வி மூலம் தெரிய வருகிறது.
மாற்று அரசியலை வளர்த்தெடுக்க விரும்புவதாகக் கூறும் மாநிலக் கட்சிகள், இடதுசாரி வேட்பாளருக்கு ஆதரவு வழங்காமல் விலகி நின்று வேடிக்கை பார்த்ததுதான் மன்னிக்க முடியாத குற்றம். மார்க்சிஸ்ட் தோல்வி வருத்தம் அளிக்கிறது.

No comments:

Post a Comment