Wednesday, 4 February 2015

வரலாற்றில் சுதந்திர தின இலங்கை…!


சுதந்திரமென்பது ஒரு மனிதன் தடைகளுக்கும் வரையறைகளுக்கும் உட்பட்டு ஏனையவர்களின் சுதந்திரத்திற்குப் பங்கம் ஏற்படாத வகையில் தான் விரும்பியதை செய்வதற்குள்ள உரிமைகளை சுதந்திரம் என அறிஞர்களான ஜீன் ஜக்கியுஸ், ரூஸோ, தோமஸ் ஹொப்ஸ், ஹெகல் மொன்டஸ்கியூ, மெக்கன்ஸி ஸ்பினோசா போன்ற பல்வேறு அறிஞர்கள் வரைவிலக்கணப்படுத்தியுள்ளார்கள்.
அதேவேளை நாட்டின் தேசிய சுதந்திரமென்பது (National Liberty) நாடொன்று உள்ளக ரீதியாகவும் சுயாதீனமாகவும் வெளியார் தலையீடு இன்றியும் இருக்கும் போது அது சுதந்திரமான நாடாக விளங்குகின்றது என்று கூறலாம். நாட்டில் வாழுகின்ற சமுதாயமானது சுதந்திரமானதாகவும் இறைமையுடையதாகவும் இருக்கும் போது தேசிய சுதந்திரமென்பது நிலைத்து நிற்கின்றது.
சுமார் 400 வருடங்கள் அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்த இலங்கை 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி சுதந்திரம் பெற்றுக்கொண்டது. தனது 67ஆவது சுதந்திரத்தை இன்றைய தினம் (04.02.2015) மிக எளிமையாகவும் அர்த்த நிறைவுகளுடனும் கொண்டாடுகின்ற இவ்வேளையில் இலங்கையின் தேசிய சுதந்திரத்துக்கு தமிழ் தலைவர்களின் காத்திரமான பங்களிப்பு எவ்வாறு இருந்தது என்பது பற்றி வரலாற்று முறையில் நோக்குவது அர்த்தம் நிறைந்த தேடலாக இருக்கும்.
இலங்கையின் சுதந்திரமென்பது இந்திய விடுதலை போராட்டங்களைப் போலவோ அல்லது காலனித்துவ கொடுமைகளிலிருந்து விடுபட்ட ஆபிரிக்க சமூக அமைப்புக்கள் போன்ற விடுதலை வேட்கை நிறைந்த அரசியல் போராட்டங்கள் போலவோ ஏற்பட்ட சுதந்திர பிரகடனமல்ல. வெகுஜனப் போராட்டங்களின் உச்ச நிலைகளும் இந்திய தேசியத் தலைவர்களின் தீவிர தியாகமும் அந்நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தது.
ஆனால் இலங்கையின் சுதந்திர விடிவுகளின் போக்கும் அமைவும் வேறுபட்டதாகவே இருந்தது. குறிப்பாகச் சொல்லப்போனால் பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்குள்ளிருந்த மிகப்பெரிய நாடு இந்தியாவேயாகும். இந்திய சுதந்திர இயக்கம் தோற்றுவித்த சுதந்திர அலைகள் இந்தியாவின் சுதந்திர சிந்தனைக்கு வழிவகுத்தது. இந்தியாவுக்கு மிக அண்டை நாடான இலங்கை இந்தியாவில் ஏற்பட்ட சுதந்திர போராட்டங்களின் செல்வாக்குக்கு ஆளாகியது.
ஆனால் இலங்கை வகுத்துக்கொண்ட சுதந்திரத்துக்கான பாதை வேறுபட்டதாக இருந்தது. 19ஆம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற சமூக பொருளாதார மாற்றங்கள் உயர்ந்தோர் குழாமின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ததோடு இலங்கையில் சுதந்திரமயப்பட்ட அரசியல் கோரிக்கைகளையும் முன்வைக்கும் பலத்தினையும் அதிகரிக்கச் செய்தது. இவர்களிடையே இரு பிரிவினர் தோற்றம் பெற்றனர்.
(1) தேசியவாதிகள் (2) அரசியல் திட்டவாதிகள். இதில் தேசியவாதிகள் சுய ராஜ்ஜியம் என்பதை இலக்காகக் கொண்டவர்களாக காணப்பட்டார்கள். இவ்விரு போக்காளர்களும் தம் கொள்கையளவில் வேறுபட்டு நின்ற போதும் 1915ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற வேண்டுமென்ற இலங்கையரின் தேசியவாத உணர்வு எழுச்சி கொண்ட நிலையில் இவர்கள் ஒன்றுபட்டு இளம் இலங்கையர் கழகமொன்றை உருவாக்கினார்கள்.
1915ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தை அடக்க பிரித்தானிய அரசாங்கம் எடுத்துக்கொண்ட முயற்சிகளின் இயல்பாகவே இலங்கையில் உயர்ந்தோர் குழுவினரையும் தேசியவாதிகளையும் அரசியல் திட்டவாதிகளையும் ஒன்றிணைத்து 1919ஆம் ஆண்டு இலங்கை தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. சேர். பொன்னம்பலம் அருணாசலம் இதன் முதலாவது தலைவர் ஆக்கப்பட்டார்.
ஈழ நாட்டின் தலை சிறந்த கல்விமானாகவும் சட்ட மேதையாகவும் இவர் விளங்கியதுடன் தமது அண்ணனார் சேர்.பொன்.இராமநாதன் போன்று அரசியலில் மிகவும் ஆழமான ஈடுபாடு கொண்டவராகவும் தேசிய சுதந்திரத்தை மிகவும் நேசித்த சுதந்திர வேட்கையாளனாகவும் விளங்கினார். 1853ஆம் ஆண்டு செப்டெம்பர் 14ஆம் திகதி பிறந்த இவர் தமது கல்வியை உயர் நிலையில் முடித்திருந்த சிறந்த கணித மேதையாகவும் திகழ்ந்தார்.
1915ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் பிரித்தானிய ஆட்சியாளர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரத்தை பிரித்தானியாவுக்கு சென்று தெரியப்படுத்தியவர் 1879ஆம் ஆண்டு இலங்கையின் சட்ட நிரூபண சபைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1911ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட சபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
1921 ஆம் ஆண்டு இவருக்குப் பிரித்தானிய அரசினால் பிரபு பட்டம் வழங்கப்பட்டது. மிகுந்த சொல்வன்மையும் வாதத்திறமையும் வாய்க்கப்பெற்ற இவர் பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ஜனநாயக வழிப்போராட்டங்களில் ஈடுபட்டதுடன் இலங்கையின் சுதந்திரத்துக்காக உழைத்த மூத்த தலைவர்களில் ஒருவராகவும் விளங்குகின்றார்.
1923ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் சைவ வித்தியா விருத்திச் சங்கம் தோன்றுவதற்கு காலாக இருந்ததோடு அதன் முதல் தலைவராகவும் விளங்கினார். 1851ஆம் ஆண்டு ஏப்ரல் 16இல் யாழ். மானிப்பாயில் பிறந்த இவர் இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராக கருதப்பட்டதுடன் இன வேறுபாடு பாராது அரசியல் சாணக்கியம் புரிந்தமையினாலே இன்றும் சிங்கள மக்களால் போற்றப்படும் ஒரு தலைவராக மதிக்கப்படுகிறார்.
இலங்கையின் சுதந்திரப் போராட்ட ஏடுகளில் சிறுபான்மை சமூக தாரிகளாக மதிக்கப்படுபவர்களில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சேர். ராசிக் பரீட், டாக்டர் ரி.பி. ஜாயா முதன்மைக்குரியவர்களாக மதிக்கப்படுபவர்கள். ரி.பி. ஜாயா இலங்கையின் கல்வித்துறையிலும் அரசியல் துறையிலும் நிரந்தர இடத்தைப் பெற்றுள்ள ஒரு தேசியத் தலைவர் ஆவார். கொழும்பு ஸாஹிரா கல்லூரியை சிறந்த கல்லூரியாக கட்டி வளர்த்தவர். அத்துடன் கம்பளை, மாத்தளை, புத்தளம், அளுத்கம, கொழும்பு ஆகிய இடங்களிலுள்ள ஸாஹிரா கல்லூரிகளினதும் ஸ்தாபகர் அவரே.
1924இல் சட்டவாக்க சபை அங்கத்தவராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் 1924 – 31 ஆகிய காலப்பகுதியில் அவரின் அரசியல் சேவை ஆரம்பமாகிறது. 1936 - – 47 காலப் பகுதியில் சனப்பிரதிநிதிகள் சபை அங்கத்தவராகவும் கடமையாற்றிய இவரின் சுதந்திர உணர்வை முன்னாள் பிரதமர் பண்டார நாயக்கா பின்வருமாறு சட்ட சபையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நாட்டு மக்களில் பலதரப்பட்டோரிடையே தாராள நோக்கின் மூலம் ஒற்றுமையைக் கொண்டு வர அங்கத்தவர் எவராவது முடிந்ததென்றால் அதுவும் தம் இனத்தவர்கள் இழப்பிற்கு ஆளாகுவர் என்று தெரிந்திருந்தும் தேசிய சுதந்திரத்துக்காகப் போராடினார் என்றால் அதற்கான புகழ் எம்மிடையேயுள்ள ஜாயா அவர்களையே சென்றடைய வேண்டுமென பிரதமர் பண்டாரநாயக்கா குறிப்பிட்டிருந்தார்.
மட்டக்களப்பு கச்சேரியில் உயர் பதவி வகித்த சேர் ராஸிக் பரீத் இலங்கையின் ஒரு தலை சிறந்த சமூக சேவையாளராக, அரசியல்வாதியாக, கல்விமானாக, நிர்வாகியாகத் திகழ்ந்தவர். இஸ்லாமிய சமூகத்தின் வறுமை நிலைக்காக போராடிய தலைவர் இவர் 1944 ஆம் ஆண்டு தேசிய சபையில் அங்கம் வகித்ததுடன் ஒரு அமைச்சராகவும் பணியாற்றினார். 1937ஆம் ஆண்டு கொண்டு 1940ஆம் ஆண்டுவரை கொழும்பு மாநகர சபை அங்கத்தவராகவும் விளங்கினார்.
பல நூற்றாண்டு காலமாகக் கல்வித்துறையில் பின்னடைந்திருந்த முஸ்லிம்களின் கல்வியில் மலர்வு ஏற்படத் தொடங்கிய காலம் இரண்டாவது அரச சபைக் காலமாகும். முஸ்லிம் பாடசாலைகளையும் மத்திய கல்லூரிகளை நிறுவ அரும்பாடுபட்டவர். இலங்கை சுதந்திரத்துக்கு முன்னைய காலப்பகுதியில் காலனித்துவத்தின் காலத்துக்கேற்ற நவீனத்துவத்தை உள்வாங்கி தனது சமயம் சார் தமிழ் செயற்பாடுகளை முன்னெடுத்தமை நாவலரின் செயற்பாடுகளுக்கு வலிமை சேர்த்தது.
நவீன பாடசாலை முறைமையை காலவரம்புக்கு ஏற்ப சைவச்சூழலில் ஏற்படுத்தியமை நவீன பாட நூல் முறைமையை அறிமுகப்படுத்தியமை சுதந்திர சமூக மாற்றத்துக்கேற்ற சமூக செயற்பாடுகளாக கொள்ள முடியும். நாவலரின் காலத்துக்குப் பின்னே உடைப்பெடுத்த தேசிய தேசிய விடுதலை அரசியலுக்கு தளம் அமைக்கும் பண்பாட்டு நடவடிக்கைகளாக யாழ். நாவலரின் செயற்பாடுகள் அமைந்தன. இவரைப் போன்றே கலாயோகி ஆனந்த குமார சுவாமி சி.வை. தாமோதரம் பிள்ளை போன்றோரின் கலை பண்பாட்டுத்தளங்கள் பிற்கால சுதந்திர இலங்கையின் பண்பாட்டு கோலங்களுக்கும் மறுமலர்ச்சிகளுக்கும் அடித்தளங்களாக அமைந்தன.
சுதந்திர இலங்கையின் தேசியத் தலைவர்கள் என்ற வகையில் சுதந்திர மாண்பை தாங்கிப்பிடித்தவர்களாக இலங்கை அரசியல் வரலாற்றில் போற்றப்படுகின்றவர்களும் மதிக்கப்படுகின்றவர்களும் பலர் அந்த அட்டணையில் முக்கிய இடம்பிடித்துக் கொள்பவர்கள். இலங்கையின் முதலாவது பிரதமர் என்று போற்றப்படுகின்ற டி.எஸ். சேனாநாயக்கா மற்றும் எப். ஆர். சேனாநாயக்கா, எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க, டி. ஆர். விஜயவர்தன, ஜே. ஆர். ஜெயவர்த்தனா, இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கிய கதாபாத்திரங்களாக மதிக்கப்படுபவர்களாவர்.
இலங்கை சுதந்திரப் பதிவில் முதலாவது பிரதமராக பதியப்பட்டிருப்பவர் டி. எஸ். சேனாநாயக்கவாகும். காத்திரமான தேசியக்குடும்பத்தில் பிறந்து முதலாவது பாராளுமன்ற தேர்தலில் 1947 பங்கெடுத்துக் கொள்வதற்காக அவசரமாக ஐ.தே. கட்சியென்னும் தேசிய கட்சியை உருவாக்கி (6.2.1946) அரசியலை தனதாக்கிக் கொண்டவர். ஐ.தே.கட்சி உருவாக்கப்பட்ட வேளை திரு. டி. எஸ். சேனாநாயக்கா எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா டட்லி சேனாநாயக்கா மற்றும் ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஆகியோர் கட்சியின் உருவாக்கத்தின் முக்கிய பிரமுகர்களாக இருந்தனர்.
இந்நிலையில் 23.6.1947இல் இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்த்தின் கீழ் சுதந்திரம் வழங்குவதற்கான பிரகடனத்தை பிரித்தானிய சாம்ராஜ்யம் அறிவித்தது. 20.9.1947இல் நடைபெற்ற முதலாவது பாராளுமன்ற தேர்தலுக்கு அமைய இலங்கையின் முதலாவது பிரதமராக டி.எஸ். சேனாநாயக்கா ஆகிக்கொண்டார். சுதந்திரம் கிடைத்திருந்தும் பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் விட்ட குறை தொட்ட குறையென்ற வகையில் 1956ஆம் ஆண்டுவரை திருகோணமலை கடற்படைத் தளம் உட்பட பல பிரதேசங்கள் பிரித்தானிய பரிபாலனத்துக்கு உட்பட்டிருந்த நிலையை மாற்றி பூரண சுதந்திரம் பெற்ற தேசமாக இலங்கையை மாற்றிய பெருமை எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கா அவர்களையே சாரும்.
சுதந்திரத்தின் பெறுமானங்கள் பூரணமாக்கப்படவில்லையென்ற தேசிய உணர்வுகள் தலை கொண்டிருந்த நிலையில் இலங்கையின் முதலாவது பெண் பிரதமர் என்றும் உலகத்தின் முதலாவது பெண் பிரதமர் என்றும் போற்றப்படுகின்ற திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா பிரித்தானியர்களால் உருவாக்கப்பட்ட சோல்பரி யாப்பை ஒழித்து இலங்கையின் முதலாவது குடியரசு யாப்பை 22.05.1972 ஆம் ஆண்டு உருவாக்கி இலங்கையின் சுதந்திரத்தில் புதியதொரு அத்தியாயத்தை உருவாக்கினார். இதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனா அவர்களினால் 1978ஆம் ஆண்டு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்பட்டது.
இவ்வாறு இலங்கையின் 67ஆவது சுதந்திரம் என்பது பல்வேறு அரசியல் வரலாறுகளையும் மாற்றங்களையும் போக்குகளையும் ஆட்சி முறைகளையும் கொண்டு வளர்ந்துள்ளது என்பதை இன்றைய 67ஆவது சுதந்திர தினம் எமக்கு நினைவூட்டுகின்றது.

No comments:

Post a Comment