இந்தோனேஷியாவில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியர்களான மயூரன் சுகுமாரனுக்கும் அன்ட்ரூ சானுக்கும் இத்தண்டனையை விதித்த நீதிபதிகள், குறைந்த தண்டனை வழங்குவதற்காக லஞ்சம் கோரியதாக அவர்களின் வழக்கறிஞர்கள் பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
2005 ஆம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இந்தோனேஷியாவின் பாலி தீவில் கைது செய்யப்பட்ட 9 ஆஸ்திரேலியர்களில் இவ்விருவரும் அடங்குகின்றனர். லண்டனில் பிறந்த ஆஸ்திரேலியரான மயூரன் சுகுமாரனுக்கும், அன்ட்ரூ சானுக்கும் இந்தோனேஷிய நீதிமன்றத்தினால் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இம்மாத இறுதியில் தூக்கிலிடப்படக் கூடும் என அஞ்சப்படும் நிலையில் தூக்குத்தண்டனையை ரத்துச்செய்யுமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமக்கு தண்டனை வழங்கிய 6 நீதிபதிகள் குழு குறைந்த தண்டனை வழங்குவதற்காக லஞ்சம் வழங்குமாறு கோரினர் என மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ட்ரூ சான் ஆகியோரின் வழக்கறிஞர்கள் இந்தோனேஷிய நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் புகார் செய்துள்ளனர்.
ஆனால், மேற்படி நீதிபதிகளில் ஒருவரான வயான் யஸா அபாதி இக்குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். வழக்கு விசாரணைகளில் கண்டறியப்பட்ட உண்மைகளின் அடிப்படையிலேயே மேற்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment