கென்பெராவில் நேற்று நடைபெற்ற பங்களாதேஷ் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான குழு ஏ உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் பதிலுக்கு ஆடுவதற்கு முன்னரே, அவ்வணியின் வெற்றிக்கு காபூலில் உள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகம் வாழ்த்து தெரிவித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பங்களாதேஷ் முதலில் ஆடிக் கொண்டிருந்தபோது ஐக்கிய அமெரிக்க தூதரகம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டரில் ஆப்கானிஸ்தானின் ‘‘வெற்றி’’யைப் பாராட்டி வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
அச்செய்தியில், ‘‘உலகக் கோப்பை போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் ஈட்டிய வெற்றிக்கு பாராட்டுக்கள்’’ என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆப்கானிஸ்தான் ஆட முன்னரே காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மேற்படி வாழ்த்துச் செய்தியை வெளியிட்டிருந்தது.
இப்போட்டியில் இறுதியில் பங்களாதேஷ் அணி 105 ரன்களால் வென்றமை குறிப்பிடத்தக்கது. இந்த டுவிட்டர் செய்தியினால் காபூலில் உள்ள அமெரிக்கர்கள் குறித்து பலவிதமான வசைபாடல்களுடன் எதிர்ப்புகளும் எழத் தொடங்கின. எனினும் உடனடியாகவே அமெரிக்க தூதரகம் மன்னிப்பு கோரியிருந்தது.
‘‘போட்டி முடிவுக்கு முன்கூட்டியே இந்த செய்தி வெளியிடப்பட்டுவிட்டது. ஆனால் உலகக் கோப்பை போட்டிகளில் நாங்கள் தொடர்ந்தும் ஆப்கானிஸ்தான் அணிக்கு உற்சாகமளித்துக்கொண்டிருக்கின்றோம்’’ என இரண்டாவது டுவிட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

No comments:
Post a Comment