Wednesday, 18 February 2015

சீனாவுக்கு தாரை வார்க்கும் துறைமுக திட்டம்…!


நாட்டின் இறையாண்மையை சீனாவுக்கு தாரை வார்க்கும் கொழும்பு துறைமுக நகர திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தும் ஜே.வி.பி. இரு நகரத்துக்கு 12 கோடி கியூப் கருங்கற்கள் தேவைப்படுகின்றன.
அந்தளவு தொகை நாட்டுக்குள் கிடையாது. இதனால் சீகிரியாக் குன்றையும் பயன்படுத்தும் நிலைமையும் ஏற்படலாம் என்றும் அக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜே.வி.பி. யின் பிரசார செயலாளரும் எம்.பி. யுமான விஜித ஹேரத் மேலும் தெரிவித்திருப்பதாவது;
சீனாவின் கொழும்பு துறைமுக நகர திட்டத்திற்காக ரூபா 17,000 கோடி செலவிடப்படவுள்ளது. இது எமது நாட்டு மக்களின் பணத்தை வீண் விரயமாக்கும் திட்டமாகும். கடலை நிரப்புவதால் நாட்டின் சூழல் ஆபத்தான நிலைமைக்கு தள்ளப்படும். ஆனால் கடலை நிரப்புவது தொடர்பாக எதுவிதமான சூழலியல் சட்ட வரையும் நாட்டில் கிடையாது. இதன் காரணமாகவே இத் திட்டத்தை தன்னிச்சையாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
இத் திட்டத்தினால் மூன்றில் இரண்டு பகுதி சீனாவுக்கு தாரை வார்க்கப்படுகிறது. இதனால் எமது நாட்டுக்குள் சீனத்தீவு கொழும்பில் உருவாகும் நிலை ஏற்படும். இது நாட்டின் இறையாண்மையை சீனாவுக்கு காட்டிக் கொடுக்கும் தாரைவார்க்கும் செயற்பாடாகும். கடந்த ஆட்சியில் ராஜபக்ஷவின் குடும்பத் தேவைக்காக நாடு காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. இதன் போது எவ்விதமான சட்டங்களும் பின்பற்றப்படவில்லை.
சீன நகர நிர்மாணத்திற்காக 12 கோடி கியூப் கருங்கற்கள் தேவைப்படுகின்றது. அந்தளவு கருங்கற்கள் தொகை நாட்டுக்குள் கிடையாது. எனவே, இறுதியில் இதற்காக சீகிரியாக் குன்றையும் தகர்த்து எடுக்கக் கூடிய நிலைமை உருவாகும். அத்தோடு இத்திட்டத்தினால் நாட்டு மக்கள் மீதான வரிச்சுமைகள் அதிகரிக்கும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசு ஆட்சி பீடமேறிய போது இத் திட்டம் கைவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்று அந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனை ஆராய்வதற்கு சூழலியல் பாதிப்புக்களை வெளிப்படுத்தவும் புதிய அரசு அமைச்சரவை உப குழுவொன்றை அமைத்துள்ளது. ஆனால், இப்பிரச்சினை சூழலோடு மட்டும் வரையறுக்கப்பட்டதல்ல. நாட்டின் இறையாண்மை எதிர்காலத்தை மற்றும் பொருளாதாரத்தை பாதிக்கும் பயங்கரமான திட்டமாகும். எனவே, அரசு இதனை கவனத்தில் கொண்டு இத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்றும் விஜித ஹேரத் எம்.பி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment