Wednesday, 4 February 2015

ஆரம்பமானது இவரது விசாரணை…!


சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முன்னாள் தலைவரான டொமினிக் ஸ்ட்ரோஸ் கான் தொடர்பான விபசார வழக்கு விசாரணை பிரெஞ்சு நீதிமன்றமொன்றில் ஆரம்பமாகியது.
2007 முதல் 2011 ஆம் ஆண்டுவரை சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக பதவி வகித்தவர் டொமினிக் ஸ்ரோஸ் கான். அக்காலத்தில் உலகின் மிக சக்தி வாய்ந்த மனிதர்களில் ஒருவராக அவர் விளங்கினார்.
65 வயதான டொமினிக் ஸ்ட்ரோஸ் கான் பிரான்ஸில் டீ.எஸ்.கே. என சுருக்கமாக குறிப்பிடப்படுகிறார். இவர் ஓர் சட்டத்தரணியுமாவார். 1997 முதல் 1999 வரை பிரான்ஸின் நிதியமைச்சராக பதவி வகித்தார்.
2012 ஆம் ஆண்டின் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலிலும் அவர் போட்டியிடுவதற்கு திட்டமிட்டிருந்தார். செல்வாக்கு வீழ்ச்சியடைந்திருந்த அப்போதைய பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கலஸ் சார்கோஸிக்கு இவர் கடும் போட்டியாளராக விளங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2011 மார்ச் மாதம் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள ஹோட்டல் அறையொன்றில் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக டொமினிக் ஸ்ட்ரோக் கான் மீது குற்றம் சுமத்தப்பட்டதையடுத்து அவரின் வாழ்க்கை முற்றாக மாறியது.
பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டின் பின்னர் ஸ்ட்ரோஸ் கான் பிரான்ஸுக்கு திரும்புவதற்கு விமானத்தில் ஏறியிருந்தார். ஆனால், நியூயார்க் போலிஸார் அவரை விமானத்துக்குள் வைத்து கைது செய்து காவலில் வைத்தனர். 32 வயதான நபிஸடோ டியலோ எனும் பணிப் பெண்ணே மேற்படி குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார். எனினும், இது தொடர்பான வழக்கில் அளிக்கப்பட்ட சாட்சியங்களின் நம்பகத் தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் இவ்வழக்கு பிசுபிசுத்தது.
2011 மே 18 ஆம் தேதி சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் பதவியிலிருந்து டொமினிக் கான் ராஜினாமா செய்தார். ஆனாலும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் ஓய்ந்துவிடவில்லை. பிரான்ஸில் அவர் வேறு விபசார மற்றும் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிட்டது. ஊடகவியலாளரான திரிஸ்டேன் பெனோனும் தன்னை டொமினிக் ஸ்ட்ரோஸ் கான் பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்தார் என குற்றம் சுமத்தினார். தான் அந்த ஊடகவியலாளரை முத்தமிட முயன்றதாக 2011 அக்டோபரில் ஸ்ட்ரோஸ் கான் ஒப்புக்கொண்டார்.
இவ்வழக்கும் போதிய ஆதாரமின்மையால் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், 2012 ஆம் ஆண்டு விபசாரம் தொடர்பான மற்றொரு குற்றச்சாட்டை ஸ்ட்ரோஸ்கான் எதிர் கொள்ள நேரிட்டது.
செக்ஸ் விருந்துகளுக்கு விபசாரிகளை ஏற்பாடு செய்வது தொடர்பாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. பிரான்ஸின் லில்லி நகரிலுள்ள கார்ல்டன் ஹோட்டலில் நடை பெற்றதாக கூறப்படும் இந்த செக்ஸ் கேளிக்கை விருந்துகள் தொடர்பான வழக்கில், தான் விசாரணையை எதிர்கொள்ளத் தயார் என 2013 ஜூலையில் டொமினிக் ஸ்ட்ரோஸ் கான் கூறினார்.
கார்ல்டன் விவகாரம் என குறிப்பிடப்படும் இவ்வழக்கு விசாரணையே லில்லி நகரில் நேற்று ஆரம்பமாகியது. டொமினிக் ஸ்ட்ரோஸ் கானுடன், முன்னாள் போலிஸ் அதிகாரி, சட்டத்தரணிகள், வர்த்தகர்கள் உட்பட பலர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக உள்ளனர்.
இரு தடவை திருமணம் செய்தவர் டொமினிக் ஸ்ட்ரோஸ் கான். 1984 இல் பிரிஜிட் எனும் பெண்ணை திருமணம் செய்த அவர் 1989 இல் விவாகரத்து பெற்றார். 1991இல் இரண்டாவது தடவையாக தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஆன் சின்கிளயரை அவர் திருமணம் செய்தார்.
2013 ஆம் ஆண்டில் இவர்கள் விவாகரத்து பெற்றனர்.

No comments:

Post a Comment