தலைநகர் புது தில்லியில், இன்னும் மூன்று நாட்களில் சட்ட சபைத் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், தில்லி வசந்த் கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள பூட்டியிருந்த அல்போன்சா கிருஸ்துவ தேவாலயத்தின் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதே போல் கடந்த நவம்பர் மாதம் தில்லி தில்ஷாத் கார்டன், ரோஹிணி ஆகிய இடங்களில் உள்ள, 4 தேவாலயங்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தாக்குதலுக்குட்பட்ட வசந்த் குஞ்ச் புனித அல்போன்ஸா தேவலாய நிர்வாகிகள், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திங்கள்கிழமை அதிகாலை சுமார் 3 மணியளவில், தேவலாயத்தின் முதன்மை வாயிலை தாண்டி குதித்து, தேவாலய கதவை உடைத்துவிட்டு சில மர்ம நபர்கள் உள்ளே சென்றுள்ளனர்.
தேவாலயத்தின் புனித பாத்திரங்கள், அங்கிகள் வைக்கும் அறையை உடைத்து பொருள்களை சேதப்படுத்தியதுடன், சிலவற்றை அபகரித்தும் சென்றுள்ளனர். இதுதொடர்பாக தில்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளோம்'
நேற்று அதிகாலை நடந்த இத்தாக்குதலை அடுத்து போலீசார் தேவாலயத்தில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து, இத்தாக்குதல் தேவாலயத்தை கொள்ளையடிப்பதற்காக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், தேவாலயத்திற்கு போலீஸ் காவலும் போடப்பட்டது.
இதற்கிடையில், தேவாலய தலைமை பேராயர் மேதியூ, போலீஸார் தங்களைத் தொடர்பு கொண்டு தேவாலயத்திற்கு பாதுகாப்பு அளிப்பதாக தெரிவித்ததாகவும், ஆனால், போலீஸார் யாரையும் தேவாலயத்தின் அருகில் கூட பார்க்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து 5வது முறையாக தாக்குதல் நடத்தப்படுவதால், தில்லியில் உள்ள தேவாலயங்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
அதேசமயம், மத்திய உள்துறை அமைச்சகம், தில்லியில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் என்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று தில்லி போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
இன்னும் மூன்று தினங்களில் நடக்க இருக்கும், தில்லி சட்டசபைத் தேர்தல் தான் காரணமா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்.

No comments:
Post a Comment