சிறுமியாக இருந்தபோது தான் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் நடிகை சோமி அலி தெரிவித்துள்ளார்.
பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்த சோமி அலி, பாலிவுட் சுப்பர் ஸ்டார் சல்மான் கானின் முன்னாள் காதலிகளில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அமெரிக்காவில் வசிக்கும் சோமி அலி, பாதிப்புகளுக்குள்ளான பெண்களுக்கு உதவியளிக்கும் "நோ மோர் டியர்ஸ்" (இனிமேலும் கண்ணீர் இல்லை) எனும் தொண்டர் அமைப்பொன்றை நடத்தி வருகிறார்.
இந்த அமைப்பின் 8 வருட நிகழ்வை முன்னிட்டு அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சிறுவயதில் தான் எதிர்கொண்ட துன்பங்கள் குறித்தும் சோமி அலி கூறியுள்ளார். "நான் 5 வயது சிறுமியாக இருந்தபோது வீட்டுப் பணியாளர் ஒருவரினால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானேன். அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகங்களில் உரையாற்றுவதற்கு நான் அழைக்கப்படும் போது, அங்குள்ள மாணவர்களிடம் நான் இத்தகவல்களை பகிர்ந்துகொள்கிறேன். எனது சொந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்வதானது, இத்தகைய வன்முறைகளை எதிர்நோக்கிய ஏனையவர்களும் அது குறித்து பேசுவதை ஊக்குவிக்கும் என நான் நம்புகிறேன்" என்று சோமி அலி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் வீட்டு வன்முறைகள் கொண்ட சூழலிலேயே நான் வளர்ந்தேன். எனது தாயாரின் நண்பிகள் பலர் உடல் ரீதியான தாக்குதல்களையும் எதிர்கொண்டிருந்தனர். அவர்களின் காயங்கள் குறித்து எனது தாயாரிடம் நான் வினவும்போது அவர்கள் படிகட்டிலிருந்து வீழ்ந்ததால் காயமடைந்தனர் என தயார் பதிலளிப்பார் எனவும் அவர் கூறியுள்ளார். 1976 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் கராச்சி நகரில் பிறந்தவர் சோமி அலி. பின்னர் இவர்களின் குடும்பத்தினர் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் குடியேறினர்.
தனது இளமை பருவத்திலேயே திரைப்படங்களில் நடிக்க வேண்டும் எனவும் தனது அபிமான நடிகரான சல்மான் கானை சந்திக்க வேண்டும் எனவும் சோமி அலி ஆர்வம்கொண்டிருந்தார். பாலிவுட் திரைப்படங்களில் நடிப்பதற்காக அவர் இந்தியாவின் மும்பை நகருக்குச் சென்றார். 1993 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டுவரை சுமார் 10 திரைப்படங்களில் அவர் நடித்தார். இக்காலப் பகுதியில் அவர் சல்மான் கானை காதலித்தமை குறிப்பிடத்தக்கது.
நடிகையாக விளங்கியபோது அவருக்கு கல்வியிலும் தீவிர அக்கறை ஏற்பட்டது. அதனால் 1999 ஆம் ஆண்டு மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பி உளவியல் துறையில் பட்டதாரியானார். புளோரிடாவிலுள்ள நோவா சௌத்ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது ஊடகத்துறையிலும் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதன்பின், புளோரிடாவிலுள்ள மியாமி பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் முதுநிலை படிப்புகள் பயின்றார்.
2003 ஆம் ஆண்டு மியாமி பல்கலைக்கழகத்தில் பயின்றவேளையில் ஆவணப்படங்களை தயாரிக்க விரும்பினார். அதனால் நியூயார்க்கிலுள்ள பிலிம் அக்கடமியில் படிப்புகளை தொடர்ந்தார். அங்கு பட இயக்கம், திரைக்கதை எழுதல் முதலான துறைகளில் பட்டம் பெற்றார். இதன்போது பெற்ற பயிற்சிகள் மூலம், வீட்டு வன்முறை, கருக்கலைப்பு, இளமை பருவ தற் கொலைகள் தொடர்பாக பல ஆவணப்படங்களை அவர் தயாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தெற்காசிய பெண்களின் உரிமைகள் விசயத்தில் ஆர்வம் செலுத்திய சோமி அலி, வீட்டு வன்முறைகள் தொடர்பில் ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு பாடுபட்டார். பாகிஸ்தானில் பாலியல் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டு நீதிக்காக போராடும் பெண்கள் பலர் குறித்து கட்டுரைகளை எழுதினார். வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான நோ மோர் டியர்ஸ் அமைப்பின் மூலம் சோமி அலி மேற்கொண்ட செயற்பாடுகளை பாராட்டி, அமெரிக்க குடிவரவு பேரவையானது 2011 ஆம் ஆண்டு அவருக்கு விருது வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment