என்னைத் தொட்டுப்பாக்கணும்னு நெனச்சது தப்பில்ல என்னை ஒரேயடியாத் தூக்கணும்னு நெனச்சிங்களே தப்பு.. இல்ல என்கிற வசனத்தோடு வருகிற கார்த்தி, படம் முழுக்க பரபரவென்றிருக்கிறார்.
தூக்கிக்கட்டிய வேட்டியும் அரைக்கை சட்டையும் அவரது நடையும் ஆட்டமும் இவர் உண்மையில் கொங்குமண்ணைச் சேர்ந்தவர் சென்னையிலேயே பிறந்துவளர்ந்தவர் என்று சொன்னால் புதிதாகக் கேட்கிறவர்கள் நம்பமாட்டார்கள். அந்தஅளவு கொம்பையாபாண்டியன் என்கிற பாத்திரத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார்.
கமலுக்கு தேவர்மகன் மாதிரி கார்த்திக்கு இந்தப்படம் என்று சொல்லலாம். அந்தஅளவு கமலை நினைவுபடுத்துகிற மாதிரி சில இடங்கள் இருக்கின்றன. எதிராளி சூப்பர்சுப்பராயன் வீட்டுக்குள் அவர் பிரவேசிக்கும் காட்சி கார்த்தியின் ரசிகர்களுக்குத் தீனி. வேலைக்குப் போற பொண்ணுங்களப் பத்தித் தப்பாப் பேசுவியா என்று கேட்டு ஒருவரை அடித்துத்துவைக்கிறார் கார்த்தி. அந்நேரம் பலஆண்டுகளுக்கு முன்பு சங்கராச்சாரியார் வேலைக்குப் போகும்பெண்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துச் சொன்னது நிழலாடுகிறது. இலட்சுமிமேனனுடனான காதல்காட்சிகளிலும் இளமை ததும்பிவழிகிறது.
ஆடுவெட்டுகிற வேலைக்குப் போகிற கார்த்திக்குப் பொதுச்சேவையிலும் நாட்டம் அதிகம். போலிசுக்குப் பயந்தா பொதுச்சேவை செய்யமுடியுமா அய்யா என்று நீதிபதியிடம் கேட்கிறார். ஏதாவதொரு பஞ்சாயத்தில் ஈடுபட்டு அடிதடியாகி நீதிமன்றம்வரை போய்வருகிறவர். அவருடன் கூடவே இருப்பவர் தாய்மாமன் தம்பிராமய்யா. கார்த்தியின் அம்மாவாக கோவைசரளா, இவர் ஒரு நகைச்சுவைநடிகை என்பதை முற்றிலும் மாற்றி வேறுமாதிரி காட்டியிருக்கிறார் இயக்குநர். ஆனாலும் அவ்வப்போது கோவைசரளா முழிக்கிற முழியில் பழசெல்லாம் நினைவுக்கு வருகின்றன.
ஊர்வம்புக்குப் போகிறவனுக்குக் கல்யாணம் செய்துவைத்துவிட்டால் சரியாய்ப்போய்விடும் என்கிற தமிழ்நாட்டு வழக்கத்துக்கேற்ப கார்த்தியின் அண்ணன்முறையில் இருக்கும் கருணாஸீம் கோவைசரளாவும் சேர்ந்து இலட்சுமிமேனனைக் கல்யாணம் செய்துவைத்துவிடுகிறார்கள். பெண் பார்ப்பது, பெண்வீட்டார் மாப்பிள்ளையைப் பற்றி விசாரிப்பது அதற்கடுத்து கோபமாக அந்தஊருக்குப் போய் இலட்சுமிமேனன்தான் பெண் என்றதும் கார்த்தி அப்படியேதலைகீழாக மாறுவது உட்பட கல்யாணம் வரையிலான காட்சிகள் வயிற்றைப் பதம்பார்க்கின்றன.
கேட்டவுடன் பெண்கொடுக்க மறுத்தாலும், தன்னைப்பற்றி ஊர்முழுக்க விசாரித்ததாலும் இலட்சுமிமேனனின் அப்பாவான ராஜ்கிரணை கார்த்திக்குப் பிடிக்காமல் போய்விடுகிறது. ஒரேமகளின் வேண்டுகோளுக்கிணங்க பெண்கொடுத்த வீட்டிலேயே வந்து தங்குகிறார் ராஜ்கிரண். கார்த்தி, தொடக்கத்தில் அவரை மதிக்காமல் போவதும் பின்னால் என் அப்பா மாதிரி என்று உருகுவதும் எதிர்பார்க்கப்பட்ட விசயங்கள்தாம் என்றாலும் எதிர்பாராத காட்சியமைப்புகளால் வேறுபடுத்தியிருக்கிறார் இயக்குநர்.
தான் ஒரு நடிப்புஅரக்கன் என்பதை இந்தப்படத்திலும் நிருபித்திருக்கிறார் ராஜ்கிரண். வேட்டியை மடித்து நாக்கைக் கடித்து எப்போது பொங்கப்போகிறார் என்கிற பதட்டத்தை ஒவ்வொரு காட்சியிலும் வைத்திருக்கிறார்கள். அடக்கிவைத்த ஆவேசத்தையெல்லாம் சாமியாடும் காட்சியில் கொட்டியிருக்கிறார் ராஜ்கிரண். இவரை விட்டால் இந்தப்பாத்திரத்துக்கு வேறு ஆளில்லை.
சாதிசனத்தோடு கோயிலுக்குப் போறோம் என்று சொல்பவர்களிடத்தில் சனத்தோடு போனா தப்பில்ல சாதியோட போறீங்களே அது சரியில்லை எனும்போதும் மனசுவலிக்குக் குடிக்கணும்னா பொம்பளங்கதான் அதிகமாக் குடிக்கணும் உடம்புவலிக்குக் குடிக்கிறதே தப்பு இனிமே குடிக்கமாட்டேன் எனும்போதும் தற்காலச் சமுகத்துக்குச் சவுக்கடி கொடுக்கிறார் ராஜ்கிரண். வசனம் எழுதிய இயக்குநர் பாராட்டுக்குரியவர்.
ஒருபக்கம் கார்த்தியின் அலப்பறை இன்னாரு பக்கம் ராஜ்கிரணின் அழுத்தமான நடிப்பு ஆகியனவற்றுக்கு ஈடுகொடுத்து இலட்சுமிமேனனும் பாராட்டுப்பெறுகிறார். முந்தைய படங்களைக் காட்டிலும் கொஞ்சம் ஒல்லியாக இருந்தாலும் அவருடைய கண்களின் சக்தி குறையவில்லை. எங்கே தொடுடா பார்க்கலாம் என்று வில்லனிடம் முறைக்கிற இடம் சிறப்பு. இறுதிக்காட்சியில் அப்பா வந்துவிட்டார் கணவனைக் காணோமே என்று அவர் பதறுகிறார் நமக்கும் அந்தப்பதட்டம் தொற்றிக்கொள்கிறது.
சண்டைப்பயிற்சி இயக்குநர் சூப்பர்சுப்பராயன், எழுத்தாளர் வேலஇராமமூர்த்தி, விஜயன், துரைப்பாண்டி உட்பட படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் மிகப்பொருத்தமாக இருக்கின்றனர். எந்நேரமும் அவனை வெட்டணும் இவனை வெட்டணும் என்றே பேசிக்கொண்டிருப்பதுதான் உறுத்தலாக இருக்கிறது. ஜி.வி.பிரகாஷின் இசையில் கறுப்பு நிறத்தழகி பாடல் சிறப்பு மற்றபாடல்களும் கேட்கிற மாதிரி இருக்கின்றன.
பின்னணிஇசையிலும் அவர் நன்றாகச் செய்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் பணி அருமை. பல இடங்களில் குறிப்பிட்டு கவனிக்கவைத்திருக்கிறார். தன்னுடைய அப்பா அம்மா வாழ்க்கையில் நடந்தவற்றையே இக்காலத்துக்கேற்ற மாதிரி திரைக்கதையாக மாற்றியிருப்பதாகச் சொல்லும் இயக்குநர் முத்தையா, அந்தப்பணியை நேர்த்தியாகச் செய்து தன் குடும்பத்துக்கும் மண்ணுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.
No comments:
Post a Comment