பச்சைச் சாய்கறிகளையும் பழுத்த பழங்களையும் காய்ந்த பருப்பு வகைகளையும் பச்சை இறைச்சிகளையும் சாப்பிட்ட ஆதிமனிதன் பின்னர் நேரடியாக அவற்றை நெருப்பில் சுட்டும் பாண்டங்களில் போட்டு வேக வைத்தும் சாப்பிட்டான்.
இன்று சமையல் என்பது நாட்டுக்கு நாடு வேறு பட்டிருப்பது மட்டுமல்ல, நாளுக்கு நாள் வேறுபட்டும் சுவைகளில் பலநூறு வகைகளாகச் சிறந்து சமையல்கலையாகிவிட்டது. வீட்டு அடுப்படியில் மட்டுமே இருந்த சமையல், உணவகங்களின் வருகையால் விதவிதமான உணவுவகைகள் வரிசைக்கட்டி நிற்கின்றன.
துய்மையான உணவு சுவையான உணவு என்ற அடிப்படையில் வாரமிருமுறை “சமையல் பலவிதம் சுவைகள் பலவிதம்” எனும் பகுதி இடம் பெறவுள்ளது. ஒருமுறை சைவச்சமையல் செய் முறைகளும் மற்றொருமுறை அசைவச் சமையல் செய்முறைகளும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் உங்கள் வாய்க்கு வழிகாட்ட தமிழுலகத்தில் வருகிறது.
சமையல் முறையைத் தொகுத்து, பகுத்து புடைத்து, சலித்துத் தருபவர்:
சமையல் புரி சாப்பாட்டுராமன்
நாக்கில் சுவையூறவைக்கும் கல்கண்டு சோறு !
இனிப்புப் பொருட்களில் கல்கண்டுக்குத் தனிச்சுவையுண்டு கல்கண்டு சோறு எனும் போதே உங்கள் நாக்கில் எச்சில் ஊறுவதை உணர்கிறேன்.
இதோ கல்கண்டு சோறின் செய்முறை
கல்கண்டு - அரைகிலோ
பச்சை அரிசி - 200 கிராம்
பாசிபருப்பு - 50 கிராம்
முந்திப் பருப்புகள் - 10
ஏலக்காய் - 5
முதலில் ஐம்பது கிராம் பாசிப்பருப்பை எடுத்து பதமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் 200 கிராம் பச்சை அரிசியை தூய்மையான தண்ணீரை விட்டு நன்றாகக் கழுவிக்களைந்து வடிகட்டிக் கொள்ளவேண்டும்.
பிறகு பருப்பையும் அரிசியையும் குக்கரில் நன்றாகக் குழைய வேகவிட வேண்டும் ஏலக்காயை நன்றாகப் பொடி செய்து கொள்ளவேண்டும் முந்திரிப் பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவேண்டும் குழைந்து வெந்த பருப்புச் சோற்றோடு பொடிப்பொடியாக்கிய அரைக்கிலோ கற்கண்டு உட்பட அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி எடுத்தால் கற்கண்டு சோறு தயார்.இனி என்ன சுவைக்க வேண்டியது தான்.
மணம் வீசும் உருளைக் கிழங்கு புரோட்டா !
இளம் வயதினர் அனைவருக்கும் எப்போதும் பிடிக்கின்ற குழங்கு உருளைக்கிழங்கு. மைதா மாவில்தான் புரோட்டா செய்து சாப்பிட்டிருப்போம். இப்போது வித்தியாசமாக உருளைக் கிழங்கு புரோட்டா செய்முறைகளைப் பார்ப்போம்.
உருளைக் கிழங்கு நான்கு
தேவையான அளவு:
மிளகாய்த்தூள்,
கொத்தமல்லித்தூள்,
சீரகத்தூள்,
பெருங்காயத்தூள்,
கோதுமை மாவு,
எண்ணெய்,
கொத்த மல்லித்தழை,
உப்பு
உருளைக் கிழங்கு நான்கை எடுத்து நன்றாக கழுவ வேண்டும். அவற்றைக் குக்கரில் நன்கு வேக வைக்க வேண்டும். வெந்த உருளைக்கிழங்கை எடுத்து தோலை உரித்து கழுவிய பின்னர் நன்றாக மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனோடு தேவையான அளவு எடுத்து வைத்துள்ள மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள், பெருங்காயத்தூள். சீரகத்தூள், உப்பு ஆகியவற்றை கலந்து நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் சடாயை வைத்துச் சூடான பின்னர் சிறிது எண்ணெயை ஊற்றி கொத்தமல்லித் தழையைப் போடவேண்டும். பின்னர் உருளைச் கிழங்கு கலவையைப் போட்டு உரிய முறையில் வதக்கி இறக்கி வைத்து ஆறவிட வேண்டும்.
பின்னர் சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் பச்சைக் கோதுமை மாவில் புரட்டி எடுத்து சப்பாத்திக் கட்டையால் வட்ட வடிவாக மெல்லிதாகத் தேய்த்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் தோசைக் கல்லை வைத்துச் சூடாக்கி உருளைக் கிழங்குப் புரோட்டாவைப் போட்டு சுட்டு எடுத்தால் மணம் வீசும். புதுவகை புரோட்டா தயார். இனிசாப்பிட வேண்டியது தான்.

No comments:
Post a Comment