எந்த ஒரு விசேஷத்திற்க்கு சென்றாலும் மொய் என்று ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பந்தப்பட்டவர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பது நமக்கு வழக்கம். இவ்வாறு வைக்கும் போது முழு தொகையுடன் ஒரே ஒரு ரூபாய் சேர்த்து கொடுப்போம். ஏன் நம் முன்னோர்கள் ஒரு ரூபாய் நாணயத்தை சேர்த்துக் கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கியுள்ளனர் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..?? மிகவும் சிறிய விஷயமானலும், இதிலும் நம் முன்னோர்களின் பண்பாடு சார்ந்த மேன்மை வெளிப்பட்டிருக்கிறது.
பொதுவாக மொய்பணம் கொடுப்பது என்பது நம் பண்பாட்டில் நீண்ட நாள்களாக இருந்து வரும் மரபே. அந்தக்காலத்தில் பணம் என்பது பொன், மற்றும் வெள்ளி போன்ற மதிப்பு மிக்க உலோகத்தில் உருவாக்கப்பட்ட நாணயங்கள் வடிவத்தில் தான் புழக்கத்தில் இருந்து வந்தன. இந்த மொய்பணமும் அந்தக் காலத்தில் மதிப்பு மிக்க உலோக நாணயங்களாக இருந்தன.
அதனால் மொய் செய்பவருக்கும் தான் ஒரு மதிப்பு மிக்க பொருளை அன்பளிப்பாக கொடுத்ததான ஒரு மன நிறைவு இருந்தது. ஆனால் கரன்சி என்கிற ருபாய் தாள்கள் புழக்கத்தில் வந்து நாணயத்தின் இடத்தைப் பிடித்துக் கொண்டன. கரன்சி தாள்கள் உலோக நாணயங்களை போல் உண்மை மதிப்பு கொண்டவை அல்ல.
எனவே ரூபாய் தாளை மொய்பணமாக கொடுபவர் மனதில் தான் ஓர் உண்மை மதிப்பு கொண்ட பணத்தை மொய்யாக செய்யவில்லை என்ற மனக்குறை இருந்தது. எனவே மொய்பணமாக வைக்கும் ரூபாய் தாளுடன் உண்மை மதிப்பு கொண்ட வெள்ளி ஒரு ரூபாய் நாணயத்தையும் சேர்த்துக் கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கி மனக்குறையை போக்கிக் கொண்டனர்.
அந்தக் காலத்தில் மதிப்புமிக்க வெள்ளியில் தான்நாணயங்கள் உருவாக்கப்பட்டன. அவையே பணமாக புழக்கத்தில் இருந்த வந்தன. எனவே தான் நம் மொய்பணம் வைக்கும் பழக்கத்தில் பதினொன்று, ஐம்பத்தியொன்று, நூற்றியொன்று, ஐநூற்றியொன்று, ஆயிரத்தியொன்று என்று ஒரு ரூபாய் சேர்த்து வைக்கும் பழக்கம் மரபானது.
அது போலவே கூடுதாலாக சேர்த்துக் கொடுக்கப்படும் ஒரு ரூபாய் கரன்சி தாளாக இல்லாமல் ஒரு ரூபாய் நாணயமாக தான் இருக்க வேண்டும் என்பதும் கண்டிப்பான மரபாகவும் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. அது போல் ஒரு ரூபாய் தட்சணையாக கொடுக்கப்பட வேண்டிய இடத்தில் ஒரு ரூபாய் தாளுடன் வெள்ளியிலான கால் ரூபாயும் சேர்த்துக் கொடுக்கும் வழக்கமும் இருந்து வந்தது.
இன்று ஒண்ணேகால் ரூபாய் தட்சணை கொடுப்பதிலும் ஒரு சிக்கல் உண்டாகி விட்டது. கால் ரூபாய் அதாவது 25காசு நாணயம் செல்லாக் காசாகி விட்டது. மேலும் ஒண்ணேகால் ரூபாய் என்பது மதிப்பிழந்து விட்டது. பிச்சைகாரன் கூட ஒரு ரூபாயை பிச்சையாக ஏற்க மறுக்கும் காலமாகிவிட்டது இன்று.
No comments:
Post a Comment