Saturday 20 June 2015

எலி – விமர்சனம்

‘தெனாலிராமன்’ படத்திற்குப் பிறகு மீண்டும் வடிவேல் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்‘எலி’.தெனாலிராமன் படத்தை இயக்கிய  யுவராஜ் தயாளனே இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக சதா நடிக்க கஜினி படத்தில் நடித்த பிரதாப் ராவத் வில்லனாக நடித்திருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவந்திருக்கும் இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா..? எலி.. புலி ஆனாதா..? என்று பார்ப்போம்…
எப்போதும் எலியை தான் பொறி வைத்து பிடிப்பார்கள், இங்கு அந்த எலியை பொறியாக வைத்து ஒரு நரிக்கூட்டத்தை பிடிக்கிறார்கள், இது தான் இந்த எலி படத்தின் ஒரு வரிக்கதை.
1960-ல் நடப்பதை போன்று கதை அமைக்கப்பட்டுள்ளது. ஊருக்குள் திருட்டுத்தனம் செய்து வரும் வடிவேலு, சின்ன வயதில் போலிஸாக வேண்டும் என்று கனவு கண்டவர். அந்த ஆசை நிறைவேறாததால் தன் எலி மூளையை திருட்டு தொழிலில் பயன்படுத்துகிறார்.
சென்னையில் ஒரு கும்பல்அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட சிகரெட்டை திருட்டுத்தனமாக சிட்டிக்குள் விற்பனை செய்கிறது. அந்த கும்பளை காவல்துறை எவ்வளவோ முயன்றும்  பிடிக்க முடியவில்லை. இதனால் ‘முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்’ என நினைத்து, கொள்ளையர்களின் கூட்டத்திற்குள் கொள்ளையனாக ‘எலி’ வடிவேலுவை திட்டமிட்டு அனுப்புகிறது போலீஸ். இதன்பிறகு நடக்கும் சடுகுடு ஆட்டமே ‘எலி’ படத்தின் கதை.
படத்தின் நாடியே நகைச்சுவை தான், அதை நகைச்சுவை அரசன் வடிவேலுவை கையில் வைத்து கொண்டு தெனாலிராமன் படத்தில் எப்படி தடுமாறினாரோ அதேபோல் ’எலி’யிலும் தடுமாறியுள்ளார் இயக்குநர் யுவராஜ்.
இப்படம் ரசிகர்களை சிரிக்க வைப்பதற்குப் பதிலாக சோர்வடைய வைத்திருக்கிறது. படம் நடக்கும் காலகட்டம்தான் பழசு எனப்பார்த்தால், திரைக்கதையும், காட்சியமைப்புகளும் அதைவிட பழசாக இருக்கிறது.
ஒரு சின்ன ட்விஸ்ட் கூட இல்லாமல், முழுப்படமும் ‘தேமே’ என்று நகர்கிறது. 1960களில் இருக்கும் போலீஸும், கொள்ளையர்களும் இவ்வளவு முட்டாள்களாகவா இருப்பார்கள் என ரசிகர்கள் தியேட்டரிலேயே முணுமுணுக்கிறார்கள். காரணம் பல இடத்தில் காலத்தை தாண்டும் லாஜிக் மீறல்கள். இது போதாதென்று அரைமணி நேரத்திற்கு ஒரு பாடல் என கூடுதல்
வேகத்தடை வேறு. இத்தனையையும் தாண்டி, ரசிகர்கள் பொறுமையாக இருந்ததற்கு ஒரே காரணம் வடிவேலு என்ற ஜாம்பவான் இதுவரை தங்களை மெய்மறக்க சிரிக்க வைத்திருக்கிறாரே என்பதற்காகத்தான்.
இப்படத்திலும் தன்னால் முடிந்தளவு சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் அவருக்குத் தீனிபோடும் வகையில் காட்சிகளை உருவாக்க இயக்குநர் தவறிவிட்டார். மொத்தத்தில் வடிவேலுவைத் தவிர இப்படத்தில் பலம் என்று வேறெதையுமே சொல்ல முடியவில்லை.

No comments:

Post a Comment