ஜூன் 4
வ.வே.சு. ஐயர் நினைவு தினம்!!!
வரகனேரி வேங்கடேச சுப்பிரமண்ய ஐயர் எனும் பெயரின் சுருக்கமான வ.வே.சு.ஐயர், கரூர் அருகில் உள்ள சின்னாளப்பட்டி என்ற கிராமத்தில் 1881ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி, வேங்கடேச ஐயர் - காமாட்சி தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தார். 1897இல் அவருடைய அத்தைமகள் பாக்கியலட்சுமியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு புதல்விகளும், ஒரு புதல்வரும் பிறந்தனர்.
1899இல் வரலாறு, பொருளாதாரம், இலத்தீன் ஆகிய பாடங்களை எடுத்து பி.ஏ., பட்டம் பெற்றார். இலத்தீன் மொழியில் முதன்மைச் சிறப்பும் பெற்றார். 1902இல் "பிளீடர்" என்னும் வக்கீல் தேர்வில் தேறினார். திருச்சியில் மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீலாகத் தொழில் நடத்தினார். வ.வே.சு.ஐயர், 1906இல் பர்மா, இரங்கூனில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
1907இல் இலண்டனில் "பாரிஸ்டர்" பட்ட மேற்படிப்பில் சேர்ந்தார். இலண்டனில் அப்போது, ஷியாம்ஜி கிருஷ்ணவர்மா எனும் தேசபக்தர், இந்திய இளைஞர்களுக்காக நடத்தி வந்த "இந்தியா ஹவுஸ்" எனும் விடுதியில் சேர்ந்தார். அங்கு புரட்சி வீரர், வீர சாவர்க்காரைச் சந்தித்தார். இந்திய தேசியப் புரட்சி வீரரானார். சாவர்க்காரின் வலக்கரமாகப் புகழ்பெற்றார்.
இராஜ விசுவாச வாழ்த்துப் பாட மறுத்து, பாரிஸ்டர் பட்டத்தையும் துறந்தார். இலண்டன், பாரீஸ், பெர்லினில் இயங்கிய இந்திய தேசிய புரட்சி வீரர்கள் குழுவில் இணைந்தார். 1909ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி, புதுச்சேரியில் இருந்து வெளிவந்த பாரதியாரின் "இந்தியா" இதழில், ஜுஸப் கரிபால்டி சரித்திரம் என்ற கட்டுரைத் தொடரை எழுதினார் வ.வே.சு.ஐயர். இதைத்தொடர்ந்து 1909 ஜூன் 5ஆம் தேதி இந்தியா இதழில், "ழான் ழாக் ரூசோ எழுதிய ஜனசமூக ஒப்பந்தம்" எனும் தலைப்பில் எழுதப்பட்ட வ.வே.சு.ஐயரின் தமிழாக்கக் கட்டுரைத்தொடர் வெளிவரத் தொடங்கியது. இக்கட்டுரை வ.வே.சு.ஐயரை மொழிபெயர்ப்பாளராக முதன் முதலில் அறிமுகப்படுத்தியது.
1919இல் இந்திய தேசிய அரசியலில் காந்தியுகம் தோன்றியதும், அதன் ஈர்ப்பு சக்திக்குக் கட்டுப்பட்டு வன்முறைப் புரட்சி அரசியலைக் கைவிட்டு, காந்தியத்தைத் தழுவி, காங்கிரஸ் இயக்கத்தில் பங்கேற்றார்.
1922ல் சேரன் மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற கல்வி நிலையத்தை தொடங்கினார். அதை நிர்வகிக்க பரத்வாஜ் ஆசிரமத்தையும் அமைத்தார். 1924ல் பாலபாரதி என்ற இதழைத் தொடங்கினார். தொழிற்கல்வியும் அறிவுக் கல்வியும் மாணவர்க்கு அளித்தார். தமிழ் குருகுலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான முறையில் நன்னெறிகளும், அறிவியலும், கலை இலக்கியங்களும், உடல்வலிவுப் பயிற்சிகளும் போதிக்கப்பட்டன.
தம் குருகுல மாணவர்களுடன் 3.6.1925 அன்று அம்பாசமுத்திரம் அருவி காணத் தம் மகள் சுபத்திராவுடன், மகன் கிருஷ்ணமூர்த்தியையும் அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றார். சுற்றுலாவைக்கூட மாணவர்களை வீரர்களாக உருவாக்கும் ஒரு வாய்ப்பாகக் கருதிய வவேசு அவர்கள் அகண்ட அருவியை பயமின்றி தாண்டுமாறு மாணாக்கருக்குப் பணித்தார். சிறுபெண்ணான சுபத்திரை தானும் அவ்வருவியை எந்த உதவியும் இன்றி தாண்ட விரும்பினார். சிறு பெண்ணான சுபத்திரை அம்முயற்சியில் தவறி அருவியில் விழுந்தார். அவரைக் காப்பாற்ற குதித்த வவேசுவும் அவ்வருவியிலேயே அமரத்துவம் எய்தினர். வ.வே.சு என்னும் சுதந்திர வீரவிளக்கு பாபநாசம் அருவியில் தவறி விழுந்த தனது மகளைக் காப்பாற்ற முனைந்து 1925 ஜூன் 4ல் அணைந்தது.
வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்:
கிமு 780 - முதலாவது சூரிய கிரகணம் சீனாவில் பதியப்பட்டது.
1896 - பெட்ரோலில் இயங்கும் தனது வாகனத்தின் முதல் சோதனை ஓட்டத்தை ஹென்ரி போர்ட் வெற்றிகரமாக நடத்தினார்.
1970 - தொங்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.

No comments:
Post a Comment