Wednesday, 3 June 2015

மேகி நூடுல்ஸ் விவகாரம்: அமிதாப், மாதுரி தீட்ஷித், பிரீத்தி ஜிந்தாவை கைது செய்யலாம்!


நெஸ்ட்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்ஸில் மோனோசோடியம் க்ளூட்டமேட் என்ற ரசாயன உப்பும், ஈயமும் அளவுக்கு அதிகமாக இருப்பதை உத்தர பிரதேச மாநில உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம் கண்டுபிடித்தது.
இந்த ரசாயன உப்பு மற்றும் ஈயத்தால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை பெற்று ஆய்வு மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்ட கூடுதல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் இருவர் மனு தாக்கல் செய்தனர். அதில், சமீபத்தில் தாங்கள் மேகி நூடுல்ஸை வாங்கி சமைத்து சாப்பிட்டோம். அதையடுத்து உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இப்போது அதில் ரசாயன உப்பு அதிகம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே அந்த நிறுவனம் மற்றும் அதன் விளம் பரத்தில் தோன்றி மக்களை தவறாக வழிநடத்தியவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டு மென்று மனுவில் கோரியிருந்தனர். இதை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக நெஸ்ட்லே நிறுவனத்தின் இரு அதிகாரிகள், மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் தோன்றிய அமிதாப் பச்சன்,மாதுரி தீட்ஷித், பிரீத்தி ஜிந்தா ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டார்.
போலீஸ் விசாரணைக்கு தேவைப்பட்டால் அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். இதையடுத்து உணவுப் பொருளில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பொருளை கலப்பது, தீமையான உணவை விற்பது, ஏமாற்றுதல் மற்றும் ஏமாற்று வேலைகளுக்கு துணை போகுதல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கேரளாவில் தடை கேரள அரசு நேற்று மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. ஹரியானா மாநில அரசு இந்த விஷயத் தில் நடவடிக்கை எடுத்துள்ளது. மாநிலத் தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பிவைத்துள்ளது.
அதே நேரத்தில், மேகி நூடுல்ஸை வெளியில் உள்ள ஆய்வகத்திலும், தங்களது சொந்த ஆய்வகத்திலும் பரிசோதித்துள்ளதாகவும், அது சாப்பிடு வதற்கு ஏற்றதுதான் என்றும் நெஸ்லே நிறுவனம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment