சென்னை ஐஐடியில் பெரியார்-அம்பேத்கார் மாணவர் அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகிறது.
சென்னை ஐ.ஐ.டிக்கு எதிராக டெல்லி பல்கலைகழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர்கள் டெல்லியில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இவர்கள் மட்டுமின்றி திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர்- பெரியார் பெயரில் மாணவர் அமைப்பு ஒன்று இயங்கி வந்தது. இந்த அமைப்பு பிரதமர் மோடியையும் இந்துத்துவாக கொள்கைகளையும் விமர்சித்ததாக கூறி மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு ஒரு மொட்டை கடுதாசி அனுப்பி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இத்தகைய பிளவுபடுத்தும் கருத்துகளை பரப்பும் அமைப்பு தொடர்பாக கருத்துகளை தெரிவிக்குமாறு ஐ.ஐ.டி. இயக்குநருக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதை அடுத்து, அம்பேத்கர்-பெரியார் பெயரிலான அமைப்புக்கு ஐ.ஐ.டி. நிர்வாகம் தடை விதித்தது.
இது தற்போது நாடு முழுவதும் பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது. டெல்லி, திருச்சி, மதுரை போன்ற இடங்களில் மாணவர்கள் இதற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இன்று தி.மு.க. மாணவர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர் இள. புகழேந்தி தலைமை வகித்தார். பின்னர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததற்காக நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment