Monday 27 April 2015

இன்றைய தினம்..!!!(ஏப்ரல் 28)


ஏப்ரல் 28
’தமிழ் தாத்தா’ உ.வே சாமிநாத ஐயர் நினைவு தினம்!!!
‘தமிழ் தாத்தா’ என அனைவராலும் போற்றப்படும் உ.வே.சாமிநாத ஐயர், 1855 ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தமிழ்நாட்டில் கும்பகோணத்துக்கு அருகே உள்ளே உத்தமதானபுரம் என்னும் சிற்றூரில் வேங்கட சுப்பையர்-சரஸ்வதி அம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.
இவரது தந்தை ஒர் இசைக் கலைஞர். உ.வே.சா தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார். பின்னர் தன் 17 ஆம் வயதில் தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த புகழ்பெற்ற மகாவித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார்.
தொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இருந்த சாமிநாதன் பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக இருந்தார். பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ.வே.சாமிநாத ஐயரும் குறிப்பிடத்தக்கவர்.
தமது அச்சுப் பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகிற்கு அறியச் செய்தவர். உ.வே.சா 90-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000-க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார். சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும், புதியதும் பழையதும், நல்லுரைக் கோவை போன்ற பல உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
உ.வே.சா. கருத்தாழத்தோடு நகைச்சுவை இழையோடப் பேசும் திறமை உடையவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் உ.வே.சா ஆற்றிய சொற்பொழிவே ’சங்ககாலத் தமிழும் பிற்காலத்தமிழும்’ எனும் நூலாக வெளியிடப்பட்டது. இவர் 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி தனது 84வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்:
1792 – பிரான்ஸ் நெதர்லாந்தை முற்றுகையிட்டது.
1932- மஞ்சள் காமாலை நோய்கான தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது.
1945 – முசோலினி, அவரது மனைவியுடன் எதிரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

No comments:

Post a Comment