Thursday 30 April 2015

எத்தனை பேருக்கு தெரியும் தல அஜித்தை பற்றி...?


எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவிற்குள் நுழைந்து தன் நடிப்பாலும் உழைப்பாளும் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் மனத்தில் குடியிருப்பவர் அஜித். ரசிகர்களால் "அல்டிமேட் ஸ்டார்" என்றும் "தல" என்றும் அழைக்கப்பட்டு வரும் அஜித்திற்கு இன்று பிறந்தநாள்.
இன்று 44ஆவது பிறந்த நாள் காணும் அவருக்குத் ’தமிழ் உலகம்’ தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் அஜித்தை பற்றிய சிறிய குறிப்பு...
1971ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் பிறந்தவர் அஜித். சென்னையில் படித்து வளர்ந்த இவருக்குப் படிப்பில் அவ்வளவு ஆர்வம் இல்லை. அதனால் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டு, பைக் மெக்கானிக்காகவும், சில நிறுவனங்களிலும் பணிபுரிந்துள்ளார்.
பைக், கார் ஓட்டுவதில் அதீத ஆர்வம்கொண்டு அஜித் தானாகவே அவற்றை ஓட்டக் கற்றுக்கொண்டதுடன் பைக் பந்தயங்களில் கவனம் செலுத்தி வந்தார். பைக், கார் பந்தயங்களில் கலந்து கொள்ளவேண்டும் என்றால் பணம் வேண்டும் அல்லவா... அதனால் சிறு, சிறு விளம்பரப் படங்களில் நடித்தார் அஜித். அந்தச் சிறு சிறு விளம்பரங்கள்தான் அவருக்குச் சினிமா ஆர்வத்தை உண்டாக்கியதோடு சினிமாவிலும் இழுத்துவிட்டன.
அஜித் தனது 21 வயதில், அதாவது 1992இல் ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்குச் சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது. இதற்குப் பின்புதான் செல்வா இயக்கத்தில் ”அமராவதி” என்ற தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
முதல் படம் வெற்றி இல்லை. இருப்பினும் அவர் மனம் தளரவில்லை. அடுத்த ஆண்டில் ’பாசமலர்கள்’, ’பவித்ரா’, ’ராஜாவின் பார்வையிலே’ படங்களில் நடித்தார். இதில் ’பவித்ரா’ படம் அஜித்துக்குப் பெயர் சொல்லும் படமாக அமைந்தது. அதன் பிறகு வசந்த் இயக்கிய ‘ஆசை’ படத்தில் நடித்த அஜித்துக்கு இப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமல்லாமல் அவருக்குப் பெரும் திருப்புமுனைப் படமாகவும் அமைந்தது.
இதற்கிடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டுப் படுகாயமடைந்ததால் அவரது சினிமா பயணத்தில் சிறிய தடை ஏற்பட்டது.. இந்தத் தடைக்குப் பின்தான் அஜித்துக்கு தமிழ் திரையுலகில் ஒரு பெரிய மாற்றமே ஏற்பட்டது. இதற்கு பின் அவர் நடித்த ’காதல் கோட்டை’ படமும், சரண் இயக்கத்தில் வெளிவந்த ’காதல் மன்னன்’ படமும் அவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடியது. இதைத் தொடர்ந்து மீண்டும் அஜித்தும், சரணும் இணைந்த படம் ‘அமர்க்களம்’. இப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார் அஜித்.
அதற்குப் பிறகு அஜித் பல படங்களில் நடித்தாலும் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய ’வாலி’ படமும் முருகதாஸ் இயக்கிய ’தீனா’ படமும் அவரை சினிமாவின் உச்சத்திற்குக் கொண்டு சென்றன. அஜித் கேரியரை ‘தீனா’ படத்துக்கு முன், பின் என இரண்டாகப் பிரிக்கலாம். ஏனென்றால் இந்தப் படத்திலிருந்துதான் அஜித் ஆக்ஷன் ஹீரோவாக மாறினார். அதுமட்டுமல்லாமல் இப்படத்திற்குப் பிறகுதான் அஜித்தை அவரது ரசிகர்கள் தல, தல என்று செல்லமாக அழைக்கத் தொடங்கினர்.
அதற்குப் பின்பு ஒரு படம் முழுக்க கோட் சூட், இன்னொரு படம் முழுக்க நரைத்த தலைமுடி, அப்புறம் ஒரு படம் முழுக்க வேட்டி சட்டை என எதையும், யாரையும் சட்டை செய்யாமல் தனக்கென ஒரு ராஜபாட்டை அமைத்துக்கொண்டு அதில் வீரநடை போட்டுவருகிறார் நம்ம ‘தல’ அஜித்.
இந்த வருட துவக்கத்திலேயே ‘என்னை அறிந்தால்’ எனும் வெற்றி படத்தை தந்த கையோடு, அழகான ஆண் குழந்தைக்கும் தந்தையாகி விட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் தல அஜித். இந்த பிறந்த நாளுக்கு அஜித்துக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய பிறந்த நாள் பரிசு மகன் ஆத்விக்.
இந்த சந்தோஷத்துடன் தனது பிறந்த நாளை அஜித் விமரிசையாக கொண்டாடுகிறாரோ இல்லையோ, அவரது ரசிகர்கள் நிச்சயமாக கொண்டாடி தீர்த்து விடுவார்கள்.

No comments:

Post a Comment