Wednesday 24 June 2015

கேரள வங்கிகளில் ரூ.1 லட்சம் கோடியாக உயர்ந்த NRI டெப்பாசிட்!!

கேரள வங்கிகளில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் NRI டெபாசிட் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டி இருக்கிறது. இந்த தகவலை மாநில அளவிலான வங்கியாளர்கள் கமிட்டி நேற்று அறிவித்தது.
மார்ச் 2013-ம் நிதி ஆண்டு முடிவில் கேரள வங்கிகளில் NRI டெபாசிட் ரூ.66,190 கோடியாக இருந்தது. மார்ச் 31, 2014 முடிவில் ரூ. 93,883 கோடியாக இருந்தது. கடந்த மார்ச் 2015 முடிவில் ரூ.1,09,603 கோடியாக NRI டெபாசிட் இருக்கிறது.
NRI டெபாசிட்களை பெறுவதில் ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த வங்கியின் NRI டெபாசிட் ரூ.26,613 கோடியாகும்.
இதற்கடுத்து பெடரல் வங்கி ரூ.23,214 கோடி அளவுக்கு என்ஆர்ஐ டெபாசிட்களை பெற் றிருக்கிறது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ.14,456 கோடி அளவுக்கு NRI டெபாசிட் உள்ளது.
கேரளாவில் உள்ள 21 பொதுத்துறை வங்கிகளில் உள்ள மொத்த NRI டெபாசிட் ரூ.23,203 கோடி மட்டுமே. இந்த தொகை ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் மற்றும் பெடரல் வங்கியில் இருக்கும் டெபாசிட் தொகையை விட குறைவு.
கேரளாவில் இருந்து வெளி நாடு செல்பவர்களில் 90 சதவீதத்தினர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்கின்றனர். கேரளாவில் மொத்தம் 5,984 வங்கி கிளைகளும், 8,477 ஏடிஎம் களும் உள்ளன.

இன்றைய தினம்..!!(ஜூன் 25)

ஜூன் 25
மைக்கில் ஜாக்சன் நினைவு தினம்..!!
1958 ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி இண்டியானா நகரில் ஜோசப் வால்டர் – கேத்ரின் எஸ்தர் என்ற ஏழை தம்பதியின் 7வது மகனாக பிறந்த பிறந்தார் மைக்கேல் ஜாக்சன். அந்த குடும்பத்தில் மொத்தம் 9 குழந்தைகள். வறுமையின் பிடியில் சிக்கி தவித்த நிலையிலும், இளம் வயதிலேயே இசையின் மீதும், நடனம் மீதும் அதிக நாட்டம் கொண்டிருந்தார் ஜாக்சன்.
பாடல் எழுதுவது, அதற்கு இசையமைப்பது, பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவது, இடை இடையே கொஞ்சம் நவரச நடிப்பு என அனைத்து திறமையையும் கலந்து ‘பாப்’ என்ற புதிய உலகை அவர் படைத்தார்.
11வது வயதிலேயே தனது சகோதரர்களுடன் இணைந்து அவர் நடத்திய, ‘தி ஜாக்சன் 5′ என்ற இசை நிகழ்ச்சி, பாப் பிரியர்களை பரவசப்படுத்தியது. இதற்கு கிடைத்த ஏகோபித்த வரவேற்பை பார்த்து அதை ஆல்பமாகவும் வெளியிட்டார் ஜாக்சன்.
இதை தொடர்ந்து வெளியான ‘ஐ வாண்ட் யூ பேக்’ என்ற இசை ஆல்பமும் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை ‌பெற்று, ஒட்டு மொத்த உலமும் ஜாக்சனை திரும்பி பார்க்க ஆரம்பித்தது. அதன் பிறகு ஜாக்சனின் இசைப்பயணம் வெற்றிக்கரமாக பயணிக்க தொடங்கியது.
இசையுலகில் கடந்த 1971 முதல் தனி ஆவர்த்தனம் செய்ய ஆரம்பித்த ஜாக்சன், தனது நிகழ்ச்சிகளை ஆல்பங்களாகவும் வெளியிட்டு வந்தார். இது உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களையும் அவருக்கு பெற்றுத் தந்தது.
1972ல் ‘காட் டு தி தேர்’, 1979ல் ‘ஆப் தி வால்’, 1982ல் ‘திரில்லர்’, 1987ல் ‘பேட்’, 1991ல் ‘டேஞ்சரஸ்’ மற்றும் 1995ல் ‘ஹிஸ்டரி’ போன்ற ஆல்பங்கள் உலகளவில் விற்பனையில் சக்கப்போடு போட்டன.
1980களில் பாப் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த நிலையில், மேற்கத்திய கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் எம்.டி.வி. தனது ஒளிபரப்பை துவக்கியது. அந்த டிவியில் ஜாக்சன் நடத்திய ‘பீட் இட்’, ‘பில்லி ஜூன்’ மற்றும் ‘திரில்லர்’ போன்ற இசை நிகழ்ச்சிகள், அவரது புகழை உலகம் முழுவதும் பரப்பியதோடு, அந்த டிவியையும் குறுகிய காலத்தில் பிரபலப்படுத்தியது.
தொடர் வெற்றிகள் காரணமாக, 75 கோடி ஆல்பங்கள், 13 கிராமி விருதுகள் பெற்று, ஈடு இணையற்ற பாப் பாடகராக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றார் மைக்கேல் ஜாக்சன்.
ஆனால், கடந்த 1990களின் கடைசியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சரிவை சந்திக்க ஆரம்பித்தார் ஜாக்சன். பிளாஸ்டிக் சர்ஜரி முறையில் பலமுறை முகத்தை மாற்றியது மற்றும் பண விவகாரம் போன்றவற்றால் பெரும் சர்ச்சைகளில் சிக்கினார். தனது பண்ணை வீட்டில் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் நீதிமன்ற படியேறினார். வழக்கு விவகாரங்களுக்காக தனது சொத்துக்கள், பண்ணை வீடுகள் போன்றவற்றை இழந்தார். எனினும், கடந்த 2005ம் ஆண்டு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
மைக்கேல் ஜாக்சனின் இல்லற வாழ்க்கையும் நீண்ட காலம் இனிமையானதாக நிலைத்திருக்கவில்லை. கடந்த 1996ல் பிரஸ்லி என்ற பெண்ணை திருமணம் செய்தார். பின்னர் 1999ல் டெபோரே என்ற பெண்ணையும் மணந்தார். எனினும், மைக்கேல் ஜாக்சனில் வினோத நடவடிக்கைகள் பிடிக்காமல் இந்த இரு திருமணங்களுமே விவாகரத்தில் முடிந்தது.
பின்பு உடல்நிலை மோசமாக ஆரம்பித்தது இவருக்கு, சற்று தேறிவந்த இவருக்கு உடனடியாக நிகழ்ச்சி நடத்தியாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. இதனால், 2009 ஜூலை முதல், 2010 வரை லண்டனில் 50 நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டது.
உடல்நிலை மோசமான நிலையிலும், அளவுக்கதிகமாக வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொண்டு ஒத்திகைகளில் ஈடுபட்டு வந்தார். அதுவே அவரின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது. 2009ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி மாரடைப்பால் இறந்த போனார்.
ஜாக்சனின் மரணச் செய்தி, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்:
1940 – பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக ஜெர்மனியிடம் சரணடைந்தது.
1975 – போர்த்துக்கல்லிடமிருந்து மொசாம்பிக் விடுதலை அடைந்தது.
1983 – லண்டனில் நடந்த உலகக் கோப்பை போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மேற்கிந்தியத் தீவுகளை 43 ரன்களில் வென்றது.
1998 – வின்டோஸ் 98-ன் முதல் பதிப்பு வெளியானது.

Sunday 21 June 2015

சிம்பு படம் வருமா?? வரதா?? நம்பலாமா!!? நம்பக் கூடாதா!!?


சிம்பு, நயன்தாரா நடிப்பில் இரண்டு ஆண்டுகளாக பாண்டிராஜ் இயக்கி வரும் படம் இது நம்ம ஆளு. இதனை டி.ராஜேந்தர் தனது சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இன்னும் இரண்டு பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டிய நிலையில் படம் அப்படியே நிற்கிறது. பாண்டியராஜ் சில காரணங்களால் வேறு படங்களை இயக்கச் சென்று விட்டார்.
இந்த நிலையில் இந்தப் படத்துக்கு பைனான்ஸ் செய்த டேக் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ’இது நம்ம ஆளு என்ற படத்தை டி.ராஜேந்தர் தயாரிக்கிறார். தயாரிப்புக்கு பணப் பற்றாக்குறை ஏற்பட்டபோது எங்களை அணுகினார். நாங்கள் அவருக்கு 2.50 கோடி கடன் கொடுத்தோம். கடனை திருப்பிச் செலுத்தும் வகையில் 7 காசோலைகள் கொடுத்தார். படம் வெளியிடுவதற்கு முன்பு பணத்தை திருப்பித் தந்த விடுவதாக கூறினார். தற்போது எங்களுக்கு தற்போது அவர் வட்டியுடன் சேர்த்து 2 கோடியே 67 லட்சம் தரவேண்டும்.
ஆனால் பணத்தை திருப்பித் தராமலேயே படத்தை வெளியிட முயற்சிப்பதாக அறிகிறோம். எங்களுக்கு பணத்தை திருப்பித் தராமல் படத்தை வெளியிடகூடாது என்று உத்தரவிட வேண்டும்.’ என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாக ஒரு வாரத்துக்குள் டி.ராஜேந்தர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

’காஞ்சனா-2’ பேயாட்டம் ஆடிருச்சு..!! லாரன்ஸின் அடுத்த படம்!!

இந்த  வருடத்தின் முதல் ப்ளாக்பஸ்டர் என்ற பெருமையை லாரன்ஸின் ‘காஞ்சனா-2’ படம் பெற்றது. தமிழகம், கேரளா, ஆந்திரா என அனைத்து மாநிலங்களிலும் வசூலை அள்ளியது. இப்படத்தில் டாப்ஸி, நித்யாமேனன், கோவைசரளா, ஸ்ரீமன், மனோபாலா, மயில்சாமி  ஆகியோர் நடித்திருந்தனர்.
இதில் லாரன்ஸ் இருவேடங்களில் நடித்திருந்தார். அதிலும் அவர் ஏற்ற மொட்டை சிவா கேரக்டர் பரபரப்பாக பேசப்பட்டது. எனவே அக்கேரக்டர் பெயரில் ‘மொட்ட சிவா, கெட்ட சிவா’ என்ற ஒரு புதிய படத்தை இயக்கி நடிக்கவிருக்கிறார்.
இப்படம் குறித்து ராகவா லாரன்ஸ் கூறும்போது, “இதற்கு முன்பு நான் நடித்து இயக்கிய ‘முனி’, ‘காஞ்சனா’, ‘காஞ்சனா-2’ ஆகிய படங்கள் பேய் கதை படங்கள். ஆனால் நான் தற்போது இயக்கவிருக்கும் ‘மொட்ட சிவா, கெட்ட சிவா,’ பேய் படம் அல்ல.
இப்படத்தில் திகிலும் இருக்கும். அதுபோல அதிரடி சண்டை காட்சிகளும் இருக்கும். மொத்தத்தில் குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய ஒரு ஜனரஞ்சகமான படமாக இருக்கும். மற்ற கலைஞர்கள் விவரங்களை விரைவில் தெரிவிப்பேன். இப்படத்தை முதல் பிரதியின் அடிப்படையில், வேந்தர் மூவீஸ் நிறுவனத்திற்கு தயாரித்து வழங்கவிருக்கிறேன்” தெரிவித்துள்ளார்.

அந்த படத்தில் நானும் நடித்திருக்கலாம்..!! ஏங்கிய அமிதாப்!!

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாகுபலி’ படத்தின் டிரைலரை பார்த்த பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சன், ”நானும் இந்தப் படத்தில் நடித்திருக்கலாம்” என்று தனது ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இந்தப் படத்தின் காட்சிகளின் தரத்தை அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் ஹாலிவுட் படங்களில் மட்டுமே பார்க்க முடியும் என்றும் புகழ்ந்துள்ளார்.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாகுபலி’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆங்கிலம், பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இதன் இந்தி உரிமையை பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் வாங்கியுள்ளார்.
படத்தின் நாயகர்களில் ஒருவரான ராணாவுடன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமிதாப் பச்சன், “இத்தகைய படத்தின் முன்னால் நான் மிகச் சிறியவனாக உணர்கிறேன். அப்படி ஒரு முயற்சி இது. இப்படியொரு படத்தை இந்திய சினிமா உலகம் பார்திருக்குமா எனத் தெரியவில்லை. நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றின் உருவாக்கத்தை லட்சக்கணக்கான மக்கள் கண்டு ரசிப்பார்கள் என நம்புகிறேன்.
இப்படியான காட்சிகளை ஒரு சில ஹாலிவுட் படங்களில் மட்டுமே காண முடியும். அதை இந்தியாவில் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. இப்படி ஒரு துறையில் நானும் இருக்கிறேன் என்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. நானும் இந்தப் படத்தில் நடித்திருக்கலாமே என இப்போது ஏங்குகிறேன்”  என்று அமிதாப் பச்சன் கூறினார்.

எஸ்.பி.பி-க்கு ’ஹரிவராசனம்’ விருது வழங்கிய கேரள அரசு..!!

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கேரள அரசு “ஹரிவராசனம்’ விருதை வழங்கி கௌரவித்தது.
“ஹரிவராசனம்’ விருதுடன் ரூ.1 லட்சத்தை எஸ்.பி.பாலசுப்ரமணியத்திடம் மாநில தேவஸ்தானத் துறை அமைச்சர் வி.எஸ்.சிவகுமார் சனிக்கிழமை வழங்கினார் என்று சபரிமலை ஐயப்பன் கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.
சபரிமலை எடுத்துரைக்கும் மத நல்லிணக்கத்தையும், உலக சகோதரத்துவத்தையும் தனது பாடல்கள் மூலம் பரப்பியதற்காக அதை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுக்கு எஸ்.பி.பி. தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்றது.
விருது பெற்ற பின் எஸ்.பி.பி. கூறியதாவது:
நான் பாடத் தொடங்கிய 50 ஆண்டுகளில் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறேன். ஆனால், இந்த விருது மற்ற அனைத்தையும் விட முக்கியமானதாகும்.
மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக ஐயப்பன் கோயில் விளங்குகிறது. ஐயப்பன் பாடல்களை ஹிந்தி உள்பட பல்வேறு மொழிகளில் பாடி இருக்கிறேன் என்றார் பாலசுப்ரமணியம்.

Saturday 20 June 2015

எனக்கு த்ரிஷா சிஸ்டர் மாதிரி ஹன்சிகா ஓபன் டாக்..!!

பெரும்பாலும், ஒரே படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நாயகிகள் நடிக்கிறார்கள் என்றால் அந்த படத்தில் கண்டிப்பாக பிரச்சினை இருக்கும் என்பது தமிழ் சினிமாவில் எழுதப்படாத ஒன்று. ஒரு நாயகிக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும், மற்றொரு நாயகிக்கு முக்கியத்துவம் இருக்காது என்பதாலேயே இதுமாதிரி பிரச்சினைகள் எழுவதுண்டு.
இதில், ஒரே படத்தில் முன்னணி நடிகைகள் நடிக்கிறார்கள் என்றால், சொல்லவா வேண்டும். கண்டிப்பாக அங்கு பிரச்சினை இல்லாமல் இருக்காது. ஆனால், இதிலிருந்து மாறுபட்டு இருக்கிறார்கள் திரிஷாவும், ஹன்சிகாவும். ஆம், இவர்கள் இருவரும் தற்போது சுந்தர்.சி. இயக்கும் ‘அரண்மனை-2’ படத்தில் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் முதல் பாகத்தில் ஹன்சிகா நடித்திருந்தார். தற்போது இரண்டாம் பாகத்தில் இவருடன் திரிஷா இணைந்துள்ளார். ஹன்சிகா, இரண்டு பாகத்திலும் ஹீரோயினாக நடிப்பதால் திரிஷாவைவிட ஹன்சிகாவுக்குத்தான் அதிக முக்கியத்துவம் என்று கூறப்பட்டது. இதனால், திரிஷாவுக்கு ஹன்சிகா மீது சற்று வருத்தம் எனவும் கூறப்பட்டது.
ஆனால், அதை ஹன்சிகா மறுத்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறும்போது, எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை. நல்ல சகோதரிகளாகத்தான் பழகுகிறோம் என்று கூறியுள்ளார்.
‘அரண்மனை-2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார். மேலும், கோவை சரளா, மனோபாலா உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.